இலங்கை முஸ்லிம்கள் விவகாரம் - மீண்டும் அமைச்சரான பதவி விலகிய இருவர்

பட மூலாதாரம், Pmdnews
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து பதவி விலகிய முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளில் இருவர் தமது அமைச்சு பொறுப்புக்களை மீண்டும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, பதவி விலகிய அமைச்சர்களான கபீர் ஹசிம் மற்றும் எம்.எச்.ஏ.ஹலிம் ஆகியோரே தமது பதவிகளை மீண்டும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தமது நியமன கடிதங்களை, அமைச்சர்கள் பெற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெட்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சராக கபீர் ஹசிம் நியமிக்கப்பட்டுள்ளதுடன், எம்.எச்.ஏ.ஹலிம் தபால் மற்றும் முஸ்லிம் விவகாரம் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
பதவி விலகியமைக்கான காரணம்
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் செயற்பட்டவர்களுடன் சில முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளுக்கு தொடர்பு இருப்பதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், கடந்த மாதம் 21ஆம் திகதி முதல் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரர், கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தார்.

பட மூலாதாரம், facebook
அமைச்சர் ரிஷாத் பதியூதீன், ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோர் பதவி விலக்கப்பட்டு, அவர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அத்துரெலிய ரத்தன தேரர் வலியுறுத்தியிருந்தார்.
நான்கு நாட்கள் தொடர்ந்த உண்ணாவிரத போராட்டம், கடந்த 3ஆம் திகதி வலுப் பெற்ற நிலைமையிலேயே, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 9 மக்கள் பிரதிநிதிகள் தாம் வகித்த பதவிகளில் இருந்து விலகினர்.
அத்துடன், அன்றைய தினமே ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரும் பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்திருந்தனர்.
நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடனுமே தாம் தமது பதவி விலகுவதாக முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் அறிவித்திருந்தனர்.
ஒரு மாதக் காலத்திற்குள் விசாரணைகளை நிறைவு செய்து, சிறந்த தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதற்கு முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளினால் அரசாங்கத்திற்கு காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.

எனினும், ஒரு மாத காலம் நிறைவடைவதற்கு முன்னதாகவே, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் தமது அமைச்சு பொறுப்புக்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
மகா நாயக்க தேரர்கள் உள்ளிட்ட பலர் பதவி விலகிய மக்கள் பிரதிநிதிகளை, மீண்டும் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், பதவிகளை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பிலான பேச்சுவார்த்தையொன்று முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் நேற்று மாலை இடம்பெற்றது.
எனினும், இந்த பேச்சுவார்த்தை எந்தவித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்திருந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அமைச்சர்களாக கபீர் ஹசிம் மற்றும் எம்.எச்.எம்.ஹலிம் தமது பதவிகளை மீளப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












