இலங்கை முதலாவது வடக்கு மாகாண சபையின் ஆயுள் நாளை முடிகிறது

வடக்கு மாகாண சபையின் இறுதி சபை அமர்வு

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக மாகாணசபை முறைமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, 26 ஆண்டுகளுக்குப் பின்னர் நடத்தப்பட்ட முதலாவது வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது.

இந்நிலையில் வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாணசபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றுவருகின்றது.

தமிழ் மக்களின் தனித்துவத்தில் பற்றுள்ளவர்கள் அனைவரும் கொள்கைகளின் அடிப்படையில் ஓரணியில் திரண்டு பிரிக்கப்படாத வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றை அடைவதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் இறுதி சபை அமர்வு

உலகெங்கும் வாழுகின்ற தமிழ் மக்களின் உதவியுடனும் நாம் எமது செயற்பாடுகளை நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசியல், பொருளாதார நடவடிக்கைகளினூடாக முன்னெடுக்கவேண்டும் என தெரிவித்த விக்னேஸ்வரன்.

போர் குற்ற விசாரணை மற்றும் உண்மையை கண்டறியும் பொறிமுறைகளை ஏற்படுத்த நாம் முயன்று அவற்றுக்கூடாக, தொடர்ந்தும் இருளில் வைக்கப்பட்டுள்ள சிங்கள மக்களுக்கு உண்மைகளை புரியவைத்து எமக்கான அரசியல் தீர்வை வென்றெடுக்க நாம் உழைக்கவேண்டும் என மேலும் தெரிவித்தார்.

இந்திய பிரதமர் யாழ்ப்பாணம் வந்திருந்த போது எம் மக்களின் துயர்துடைக்க இந்தியாவின் அனுசரணையை வேண்டி நிற்பதற்கு பதிலாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியாவில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பிரேமானந்த சுவாமி ஆசிரமத்தை சேர்ந்த கொலையாளிகள் நான்கு பேரின் விடுதலை தொடர்பாகக் கோரிக்கை விடுத்தது எம் மக்களின் பிரச்சினைகளில் எமக்கு உண்மையில் எவ்வளவு அக்கறையிருக்கிறது என்பதனை தெளிவுபடுத்துகின்றது என வடக்கு மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்

வடக்கு மாகாண சபையின் இறுதி சபை அமர்வு

மாகாணத்திற்கு வேண்டிய நிதித்தேவைப்பாட்டினை அதன் நியாயப்பாட்டுகளுடன் மத்திய அரசாங்கத்தை கோராது இருந்துவிட்டு எமக்கு மத்திய அரசு போதிய நிதி தருவதில்லையென கூறுவது இயலாத்தன்மை என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் ஊடாக மாகாணசபை முறைமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. வடகிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் 1988ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி நடத்தப்பட்டது.

இலங்கை
இலங்கை

இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையை விட்டுப் புறப்படும் நேரத்தில் வடகிழக்கு மாகாணசபை முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தி விட்டு இந்தியா சென்றார்.

இதனை அடுத்து இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா மாகாணசபையை கலைத்து மத்திய அரசின் ஆட்சியைக் கொண்டு வந்தார்.

1990ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டது.

வடக்கு மாகாண சபையின் இறுதி சபை அமர்வு

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு எதிராக இலங்கையின் தெற்குப் பகுதியில் இடம்பெற்று வந்த போராட்டங்களை அடுத்து மக்கள் விடுதலை முன்னணி, வட, கிழக்கு மாகாணங்களைப் பிரிக்கவேண்டும் என வலியுறுத்தி இலங்கையின் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

2006ஆம் ஆண்டு வடகிழக்கு இணைப்பு செல்லுபடியாகாதென இலங்கையின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை அடுத்து 2007 ஆம் ஆண்டில் வடக்கு ,கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டன.

கிழக்கு மாகாண சபைக்கு 2008ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. வடக்கு மாகாணசபைக்கு தேர்தல்கள் நடத்தப்படவில்லை.

2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கிழக்கு மாகாண சபைக்கு இரண்டாவது தேர்தலும் நடத்தப்பட்டது. வடக்கு மாகாணசபைக்கு தேர்தல்கள் நடத்தப்படவில்லை.

ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தையடுத்து வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்டது.

வடக்கு மாகாணம் முழுவதிலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி இரண்டு நியமன உறுப்பினர் இடம் உள்ளடங்கலாக 30 இடங்களைக் கைப்பற்றியது.

வடக்கு மாகாண சபையின் இறுதி சபை அமர்வு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 இடங்களையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் இடத்தையும் கைப்பற்றின.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. மாகாணசபையின் முதலாவது கன்னி அமர்வு 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி இடம்பெற்றிருந்தது.

அன்றிலிருந்து இன்று வரை, 134 அமர்வுகள் இடம்பெற்றுள்ளன. 19 நியதிச் சட்டங்கள், 437 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மாகாணசபை உருவாக்கப்பட்டபோது நியமிக்கப்பட்ட 4 அமைச்சர்கள் 2017ஆம் ஆண்டு நீக்கப்பட்டு புதியவர்கள் 4 பேர் நியமிக்கப்பட்டனர்.

வடக்கு மாகாணசபை உருவாகப்பட்ட போது உறுப்பினர்களாக இருந்த தர்மலிங்கம் சித்தார்த்தன்,அங்கயன் இராமநாதன்,சிவப்பிரகாசம் சிவமோகன் ஆகியோர் தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: