சபரிமலை: கோயிலுக்குள் பெண்கள் நுழைவதை தடுப்பது ஐயப்பனா?

பட மூலாதாரம், SAM PANTHAKY
உச்ச நீதிமன்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பையடுத்து, கேரளாவில் ஜயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களுக்கும் முதல்முறையாக நடை திறக்கப்பட்டது. எனினும், வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்களால் இதுவரை எந்த பெண்ணும் கோயிலுக்குள் நுழையவில்லை.
செய்தியாளர் கவிதா ஜக்தல் மற்றும் செயற்பாட்டாளர் ரெஹானா ஃபாத்திமா ஆகிய இருவரும் வியாழக்கிழமையன்று சன்னிதானத்திற்குள் நுழைய முற்பட்டனர். 5 கிலோ மீட்டர் நடந்து அங்கு அவர்கள் செல்ல, நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு அளித்தனர்.
சன்னிதானத்திற்கு அருகில் சென்றதும் பக்தர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டதால் அவர்கள் திரும்பி வரும் சூழல் ஏற்பட்டது.
போராட்டக்காரர்களில் பல பெண்களும் அடங்குவர். மாதவிடாய் காலகட்டத்தில் உள்ள 10 முதல் 50 வயதுள்ள பெண்கள் கோயிலுக்குள் நுழைய முயற்சிக்கிறார்களா என்று இந்த பெண்கள் சாலையில் செல்லும் வாகனங்களில் சோதனை நடத்தினர்.

பட மூலாதாரம், EPA
ஒவ்வொரு ஆண்டும், நாடு முழுவதிலும் இருந்து பல கோடி பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
போராட்டக்காரர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்?
உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஐயப்ப சுவாமியின் விருப்பத்திற்கு எதிராக அமைந்துள்ளதாக இவர்கள் கருதுகின்றனர்.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் தூய்மையாக இல்லை என்றும், அதனால் அவர்கள் மத சடங்குகளில் பங்கேற்க கூடாது என்றும் இந்து மத கோட்பாடுகள் கருதுகின்றன.
பெரும்பாலான இந்து கோயில்களில் மாதவிடாய் அல்லாத பிற நாட்களில் பெண்கள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், சபரிமலையில் அப்படி கிடையாது.
பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்காதது மாதவிடாய் என்ற காரணத்தால் மட்டுமல்ல, அது ஐயப்பனின் விருப்பம் தொடர்புடையதும்கூட என்று இந்து பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.


ஐயப்ப சுவாமியின் கதை என்ன?
இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. இதில் ஐயப்ப சுவாமியும் விதிவிலக்கல்ல.
அக்கோயிலின் புராணக்கதைபடி, ஐயப்ப சுவாமி பிரம்மச்சரியம் எடுத்துக் கொண்டு துறவி வாழ்க்கை வாழ உறுதிமொழி எடுத்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது.
இதனை சுற்றி பல கதைகள் உள்ளன.
இரண்டு ஆண் கடவுள்களுக்கு ஐயப்பன் பிறந்தார் என்றும் இதனால் பெற்ற சக்தியில் அதுவரை வீழ்த்த முடியாத ஒரு பெண் அரக்கியை வீழ்த்தினார் என்றும் கூறப்படுகிறது.
வீழ்த்திய பிறகுதான் அவர் ஒரு இளம்பெண் என்றும், அரக்கியாக வாழ அவருக்கு சாபம் கொடுக்கப்பட்டது என்றும் தெரிய வந்தது.

பட மூலாதாரம், KAVIYOOR SANTHOSH
உடனே ஐயப்பன் மீது காதல் வயப்பட்ட அப்பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். காட்டுக்குள் சென்று பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு பதிலளிப்பதுதான் தன் விதியில் எழுதப்பட்டிருப்பதாக கூறி ஐயப்பன் மறுத்துவிட்டார்.
ஆனால் அப்பெண் விடாப்படியாக கேட்க, என் ஆசீர்வாதம் பெற புதிய பக்தர்கள் என்று வராமல் இருக்கிறார்களோ, அன்று திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஐயப்பன் கூறியிருக்கிறார். அந்த நாள் வரவேயில்லை.
சபரிமலைக் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள இரண்டாவது கோயிலில் அப்பெண் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த இரண்டு கோயில்களுக்கும் பெண்கள் செல்லமாட்டார்கள். அப்படி சென்றால் அது இரு கடவுள்களையும் மற்றும் ஐயப்ப சுவாமியை காதலித்த பெண்ணின் தியாகத்தையும் அவமதிப்பது போல ஆகிவிடும் என்று நம்பப்படுகிறது.


மற்றொரு கதைபடி, அரபு நாட்டில் இருந்து படையெடுத்து வந்த வவர் என்பவரிடம் இருந்து ராஜ்ஜியத்தை காப்பாற்றியது அரசராக இருந்த ஐயப்பன் என்று கூறப்படுகிறது.
போரையடுத்து அரசரின் பக்தராக வவர் மாறிவிட்டார் - சபரிமலை அருகில் இவருக்கும் ஒரு புண்ணிய ஸ்தலம் இருக்கிறது. சபரிமலையில் உள்ள ஐயப்ப சுவாமியிடம் ஆசி வாங்க வருபவர்களை இவர் பாதுகாக்க வேண்டும்.
இந்த குறிப்பிட்ட கதையின்படி, மேலும், பெண்கள் உள்ளிட்ட உலகின் பிற ஆசைகளையும் இவர் தவிர்த்து, தன்னிடம் வரும் ஒவ்வொரு பக்தரின் பிரார்த்தனைக்கும் பதிலளிப்பதாக ஐயப்பன் உறுதிமொழி ஏற்றுக் கொண்டுள்ளார். ஆகவேதான் பெண்கள் இந்த கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
போராட்டக்காரர்கள் என்ன சொல்கிறார்கள்?
இந்த போராட்டங்களுக்கு முன்னணியில் செயல்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தி வரும் ஆர்கனைசர் இதழில் கட்டுரை எழுதியுள்ள வினிதா மேனன் ''இந்து பெண் பக்தர்களின் மத்தியில் மகிழ்ச்சி எதுவும் காணப்படவில்லை. மாறாக அவர்கள் துயரத்தில் உள்ளார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இறைவனின் விருப்பப்படி கோயிலுக்குள் நுழைய பெண்கள் விருப்பப்படவில்லை என்று வினிதா மேனன் கூறுகிறார்.
நீதிமன்ற தீர்ப்பு அமல்படுத்தப்பட்டால் தாங்கள் கோயிலுக்குள் நுழையமாட்டோம் என சில ஆண் பக்தர்கள் கூறியுள்ளனர்.

பட மூலாதாரம், Reuters
பிபிசி இந்தி சேவைப்பிரிவை சேர்ந்த இம்ரான் குரேஷியிடம் பேசிய முருகன் என்ற பக்தர் கூறுகையில், ''கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்கிறோம். ஆனால், எங்கள் மத நம்பிக்கையை குலைக்கும் வகையில் பெண்கள் கோயிலுக்குள் வந்தால், ஒருவேளை இனி நாங்கள் கோயிலுக்கு வராமல் போகலாம்'' என்றார்.
இந்த பிரச்சனை தொடர்பாக தீர்பளித்த 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா, அமர்வின் பெரும்பான்மை தீர்ப்பில் இருந்து மாறுபட்டார்.
''ஆழ்ந்த மத நம்பிக்கைகள் மற்றும் சம்பிரதாயங்களில் நீதிமன்றம் தலையிடக்கூடாது'' என அவர் தனது கருத்தை தெரிவித்தார்.
இந்த கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைய பல தசாப்தங்களாக பெண்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், 2016-இல் கோயிலின் தலைவர் அளித்த ஒரு சர்ச்சைக்குரிய அறிக்கை போராட்டத்துக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்தது.
மாதவிடாய் இல்லாமல் சுத்தமாக இருக்கிறார்களா என்பதை அறிய ஒரு கருவி கண்டுபிடித்த பிறகுதான், பெண்களை அனுமதிப்பேன் என்று கோயிலின் தலைவர் ப்ரயர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
அவரது அறிக்கையை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தவர்கள், இந்திய அரசியல் அமைப்பு வழங்கிய சமத்துவ உரிமையை கோயில் சடங்குகள் மறுக்கும் விதமாக உள்ளதாக தெரிவித்தனர்.
வரும் நாட்களில் மேலும் பல பெண்கள் கோயிலுக்குள் நுழைய முற்படும்போது, போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல்கள் அதிகரிக்கக்கூடும் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












