சபரிமலை விவகாரம் அரசியல் களத்தில் இந்துத்துவ சக்திகளுக்கு உதவுமா?

சபரிமலை விவகாரம்

பட மூலாதாரம், Hindustan Times

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

அடுத்த ஆண்டு (2018)நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம் அரசியல் களத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10-50 வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், அக்டோபர் 17ஆம் தேதியன்று நடை திறக்கப்பட்டது.

அப்போது முதல், ஐயப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிக்கக்கூடாது என இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் வழியெங்கும் போராட்டங்களை நடத்துவது, தாக்குதல் நடத்துவது, வாகனங்களிலிருந்து பெண்களை இறக்கிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றன.

கடந்த 3 நாட்களுக்கும் மேலாக இந்த விவகாரம், கேரளாவையே பதற்றத்தில் வைத்திருக்கிறது. சபரிமலையை தென்னிந்தியாவின் அயோத்தியாக மாற்ற முடியும் என்று கருதும் இந்துத்துவ அமைப்புகள், இதனை வைத்து கேரள மாநிலத்தில் தேர்தல் ரீதியாக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற முடியுமென கருதுகின்றன.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, சபரிமலை விவகாரம் ஆளும் இடதுசாரிக் கூட்டணிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

இது தொடர்பான தீர்ப்பு வெளியானபோது பா.ஜ.கவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மேனகா காந்தி, "பிரமாதமான தீர்ப்பு. ஒரு ஜாதி அல்லது பாலினத்தினவருக்கான மதமாக இல்லாமல் எல்லோரையும் உள்ளடக்கிய மதமாக இந்து மதம் மாறுவதற்கு இது வழிவகுத்துள்ளது." என்று குறிப்பிட்டார்.

பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான சோபா சுரேந்திரன், எல்லா அம்சங்களையும் பரிசீலித்தே நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறோம் என்று சொன்னார்.

ஆனால், தீர்ப்புக்கான எதிர்ப்பு கேரளாவில் வலுக்க ஆரம்பித்ததும், இது ஒரு மிகப் பெரிய வாய்ப்பு என உணர்ந்த மாநில பா.ஜ.க. தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. குறிப்பாக, மாநிலத்தில் ஆட்சியில் உள்ள இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு தீர்ப்பை அமல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லாத சூழலில், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது பா.ஜ.க.

சபரிமலை விவகாரம்

பட மூலாதாரம், Hindustan Times

சபரிமலைக்கு பெண்கள் வருவதை எதிர்க்கும் போராட்டத்தில் பா.ஜ.க. நேரடியாக ஈடுபடவில்லையென்றாலும், அதன் முக்கியப் பிரமுகர்கள் ஆங்காங்கே இந்தப் போராட்டங்களில் கலந்துகொள்கிறார்கள். தொண்டர்களும் பங்கேற்கிறார்கள் எனக் குற்றம்சாட்டுகிறது சிபிஎம்.

ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய பா.ஜ.க. தலைவர் முரளிதரன், தாங்கள் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவுமட்டுமே தருவதாகவும் போராட்டங்களை நடத்தவோ, பங்கேற்கவோ செய்யவில்லையென்றும் குறிப்பிட்டார்.

இதேபோல காங்கிரஸின் தேசியத் தலைமை உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்ற நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர்கள் அதனை ஏற்கவில்லை. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யவேண்டுமெனக் கூறினார் காங்கிரசின் மாநிலத் தலைவர் ரமேஷ் சென்னிதாலா.

கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்தப் போராட்டங்களின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் இருப்பதாக கடுமையாகச் சாடியிருக்கிறார். "எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் இந்தக் கோவிலுக்கு வர முடியும். சங்க பரிவாரங்களாலும் ஆர்.எஸ்.எஸ்ஸாலும் இந்த விஷயத்தை சகிக்க முடியவில்லை. சபரிமலையின் இந்தத் தனித்துவத்தை அழிக்க அவர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டுவிட்டனர். பக்தர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு ஆர்எஸ்எஸ் துணையாக நிற்கிறது. பயங்கரவாதத்தைப் பரப்புகிறது." என்கிறார் பினராயி விஜயன்.

பலரும் கருதுவதைப்போலவே, இந்த விவகாரம் பா.ஜ.கவுக்கு அரசியல் ரீதியாக குறிப்பிடத்தக்க ஆதரவை ஏற்படுத்திக்கொடுக்கக்கூடும்.

சபரிமலை விவகாரம்

பட மூலாதாரம், Hindustan Times

2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 98 தொகுதிகளில் போட்டியிட்ட பாரதீய ஜனதாக் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றது. பதிவான வாக்குகளில் 10.6 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது.

2014ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியிலும் வெற்றிபெற முடியவில்லையென்றாலும் 10.33 சதவீத வாக்குகளைப் பெற்றது. திருவனந்தபுரம் தொகுதியில் மட்டும் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

2019ல் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில், தன் வாக்கு சதவீதத்தை மேலும் அதிகரிக்கவும் ஒன்றிரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளையாவது வெல்லவும் இந்த சபரிமலை விவகாரம் உதவும் என பா.ஜ.க. நினைக்கக்கூடும்.

கேரள சமூகம் வெளியிலிருந்து பார்க்கும்போது மிகவும் முற்போக்கான சமூகமாக பார்க்கப்பட்டாலும் அவர்கள் எப்போதுமே ஜாதிரீதியாக பிளவுபட்ட ஒரு சமூகம்தான். அங்கு வாக்களிப்பது என்பது ஜாதி, மத அடிப்படையில்தான் எப்போதுமே நடந்துவந்திருக்கிறது. நாயர்கள், ஈழவர்கள், பழங்குடியினர் எப்போதும் காங்கிரசிற்கு வாக்களிப்பார்கள். கிறிஸ்தவர்களிலும் ஜாதி ரீதியாக வாக்களிப்பதே வழக்கம். மலப்புரம், கோழிக்கோடு ஆகிய இடங்களை இஸ்லாமியக் கட்சிகள் கைப்பற்றும். இம்மாதிரியான சூழலில் இந்த சபரிமலை விவகாரம் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர். ராதாகிருஷ்ணன்.

"2019 தேர்தலில் மொத்த இடங்களை இடதுசாரிகளும் காங்கிரசும் பகிர்ந்துகொள்வார்கள். ஆனால், 2021 நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமானது. அந்தத் தேர்தலில் பா.ஜ.க. பல இடங்களைக் கைப்பற்றக்கூடும். அது இடதுசாரிகள் - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்குமே ஆபத்தாக முடியும்" என்கிறார் ராதாகிருஷ்ணன்.

"இந்த விவகாரத்தின் மூலம் பா.ஜ.கவின் வாக்கு வங்கி நிச்சயம் அதிகரிக்கும். காங்கிரஸைப் பொறுத்தவரை, தங்கள் வசம் இருக்கும் இந்து வாக்குகள் போயிவிடக்கூடாது என்பதற்காக இந்தப் போராட்டங்களை ஆதரிக்கிறார்கள். அது தவறு. காங்கிரசிடம் இருக்கும் இந்து வாக்குகள், மதச்சார்பற்ற இந்து வாக்குகள். அவர்களால் ஒருபோதும் பா.ஜ.கவசம் உள்ள இந்து வாக்குகளைப் பெற முடியாது. இதனால், மதச்சார்பற்ற சக்திகளின் ஆதரவையும் அவர்கள் இழக்க நேரிடும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ராமசுப்பிரமணியன்.

இந்த சபரிமலை விவகாரம் கேரள அரசியலை மிகச் சிக்கலான ஒரு சூழலுக்கு இழுத்துச் சென்றிருக்கிறது என்பதுதான் கேரள அரசியலை கூர்ந்து கவனிக்கும் பலரது கருத்தாக இருக்கிறது. "இந்த சபரிமலை விவகாரம் இந்துத்துவ சக்திகளுக்கு உதவியிருக்கிறது என நிச்சயமாகச் சொல்வேன். மாநில அரசு சரியாகத்தான் நடந்துகொண்டது என்றாலும் ஒட்டுமொத்தமாக இது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.கவிற்குத்தான் ஆதாயத்தைக் கொடுத்திருக்கிறது" என்கிறார் தி நியூஸ்மினிட் இணையதளத்தின் ஆசிரியரான தான்யா ராஜேந்திரன்.

தான்யா ராஜேந்திரன்.

பட மூலாதாரம், FACEBOOK

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதற்கு அம்மாநில காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவிப்பது தமிழ்நாடு போன்ற அண்டை மாநிலங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

"அதில் ஆச்சரியமே இல்லை. அவர்கள் எப்போதுமே ஒரு மென் இந்துத்துவ போக்கையே கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். தேர்தலின்போது பல தொகுதிகளில் காங்கிரசிற்கு ஆதரவாக பா.ஜ.கவினரும் பணியாற்றுவது வழக்கமாகவே இருந்திருக்கிறது. இடதுசாரிகளைத் தோற்கடிப்பதே அவர்கள் இலக்காக இருக்கும். அதனால், இப்போதும் அதே பாணியைக் கடைப்பிடிக்கிறது காங்கிரஸ். ஆனால், இம்முறை பலனடையப்போவது பா.ஜ.க." என்கிறார் ராதாகிருஷ்ணன்.

சபரிமலை விவகாரத்தில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்திருக்கும் இந்துத்துவ சக்திகள் நீண்ட காலமாகவே கேரளாவில் தங்கள் காலடியை அழுத்தமாகப் பதிக்க தொடர்ந்து முயன்றுவருகிறார்கள்.

மாநிலம் முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களை இந்து அமைப்புகள் பல்வேறு பெயர்களில் நடத்திவருகின்றனர். பல ஜாதி அமைப்புகள், மேல் ஜாதியினர், நாராயண குருவைப் பின்பற்றுபவர்களில் ஒரு பிரிவினர், வர்த்தகர்களின் குறிப்பிட்ட சதவீதத்தினர் பா.ஜ.கவுக்கு ஆதரவாக உள்ளனர். மாநிலம் முழுவதும் பல சிறு கோவில்களின் நிர்வாகம் இந்து அமைப்புகளின் வசம் உள்ளது. இவை எல்லாவற்றையும் வைத்து அவர்களால் எளிதாக பொதுக் கருத்து ஒன்றை உருவாக்க முடியும்.

சபரிமலை விவகாரம்

பட மூலாதாரம், ARUN SANKAR

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கேரளாவில் சுமார் 55 சதவீதம் பேர் இந்துக்கள். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் 45 சதவீதம் பேர் இருக்கிறார்கள்.

"கடந்த சில ஆண்டுகளாக இந்துக்கள் தாக்கப்படுவதாகவும் கேரளாவில் இந்துக்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருவதாகவும் பா.ஜ.க. தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகிறது. இதற்கு பலனும் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த நேரத்தில் சபரிமலையில் நடந்திருக்கும் விவகாரம் அவர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பு" என்கிறார் ராதாகிருஷ்ணன்.

ஆனால், பினராயி விஜயன் மிகத் தீவிரமான ஒரு போராட்டக்காரர். மிகக் கொந்தளிப்பான அரசியல் களமான கன்னூரிலிருந்து வந்தவர். இந்தச் சூழலை அவர் எப்படிக் கடக்கிறார் என்பதை வைத்தே மூன்று கட்சிகளின் எதிர்காலமும் அமையும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: