தடுப்புக்களை தகர்த்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற குடியேறிகள்

பட மூலாதாரம், Getty Images
கடந்தசில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
அமெரிக்க எல்லையில் குவியும் குடியேறிகள்
மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து கூட்டமாக அமெரிக்காவுக்குள் நுழைகின்ற நூற்றுக்கணக்கான குடியேறிகள் மெக்ஸிகோவின் தெற்கு எல்லையில் இருக்கும் நுழைவாயிலை உடைத்து அமெரிக்காவுக்குள் வர முயன்றுள்ளனர்.
குவாட்டமாலா எல்லை தடுப்புக்களை உடைத்து நுழைந்த குடியேறிகள் ராணுவம் இல்லாத பகுதியில் கலவர தடுப்பு போலீசாருடன் மோதினர்.
அமெரிக்காவில் நுழைய விடாமல் குடியேறிகளை தடுத்து வைப்பதற்கு வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மெக்ஸிகோவுக்கு நன்றி தெரிவித்தார்.

பட மூலாதாரம், Reuters
வன்முறை மற்றும் வறுமையால் தாங்கள் உயிர்தப்பி வருவதாக ஹாண்டுரஸை சேர்ந்த பெண்களும், குழந்தைகளும் உள்ளடங்கிய இந்த குடியேறிகள் கூறுகின்றனர்.
அமெரிக்க எல்லையை மூடப்போவதாகவும், தேவைப்பட்டால் ராணுவம் இதில் ஈடுபடுத்தப்படும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இன்று வாக்குப்பதிவு

பட மூலாதாரம், EPA
பலத்த பாதுகாப்பு மற்றும் தாலிபான்களிடம் இருந்து வந்துள்ள அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தலில் ஆப்கானிஸ்தான் மக்கள் இன்று வாக்களிக்கின்றனர்.
250 இருக்கைகளுக்காக பல பெண்கள் உள்பட 2,500 பேர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
பாதுகாப்பு காரணங்களால் 30 சதவீத வாக்குச்சாவடிகள் மூடப்பட்டுள்ளன. இது வரை 10 வேட்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கந்தஹார் மாகாணத்தில் உயரிய போலீஸ் அதிகாரி படுகொலை செய்யப்பட்டுள்ளதால், அங்கு வாக்கெடுப்பு ஒரு வாரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இடைதேர்தலில் தலையீடு - குற்றச்சாட்டு பதிவு

பட மூலாதாரம், Getty Images
அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்கால நாடாளுமன்ற தேர்தல்களில் தலையிடும் வகையில், ரஷ்யாவின் ஆதரவோடு நடத்தப்படும் பரப்புரையில் பங்கேற்றதாக ரஷ்ய பெண்ணொருவர் மீது அமெரிக்க அரசு குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.
44 வயதான எலானா அலெக்சீனா குசியநோஃவுக்கு எதிரான குற்றவியல் புகாரை வெள்ளிக்கிழமை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது.
வரயிருக்கும் அமெரிக்க தேர்தல்கள் தொடர்பான முதலாவது வெளிநாட்டு தலையீடு வழக்கு இதுவாகும்.

புதன்கிரகத்திற்கு அனுப்பப்படும் இரு ஆய்வுக்கலன்கள்

பட மூலாதாரம், ESA
சூரியனுக்கு மிகவும் அருகிலுள்ள புதன்கிரகத்திற்கு ஐரோப்பாவும், ஜப்பானும் கூட்டாக அனுப்புகின்ற ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளன.
பிரஞ்சு கயானாவில் இருந்து ஒரு ஏரியானே ராக்கெட்டில் அனுப்பப்படும் இரு ஆய்வுக்கலன்களை இவ்விரு நாடுகளும் உருவாக்கியுள்ளன.
பிப்பி கொலம்போ என்று அழைக்கப்படும் இந்த ஆய்வுக்கலன்கள், 7 ஆண்டுகள் பயணித்து இலக்கை அடைந்தவுடன் தனித்தனியாக பிரிந்து ஆய்வுகளை தொடங்கும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












