”தமிழ் தேசிய உணர்வாளர்களை ஒன்றிணைக்க புதிய கழகம்” - அனந்தி சசிதரன்

ஈழத் தமிழர் சுயாட்சி கழகம் என்னும் பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றினை வடக்கு மாகாண மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தொடங்கியுள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தாமாக விலகிக்கொள்வதாக அனந்தி சசிதரன் கடிதம் மூலமாக நேற்று முன்தினம் அறிவித்த நிலையில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் புதிய கட்சியின் அங்குரார்பன நிகழ்வு நடைபெற்றுள்ளது.
"தமிழ் தேசிய உணர்வு சிதைந்துள்ளதால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தமிழ் தேசிய உணர்வாளர்களை ஒன்றிணைத்து தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அடைவதற்கான பாதையில் பயணிக்க ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் உருவாக்கப்பட்டுள்ளது" என அனந்தி சசிதரன் கூறினார்.
"திட்டமிட்ட குடியேற்றம், பேரினவாத சூழ்ச்சிகளின் மத்தியில் வடக்கு கிழக்கில் நீண்டகாலமாக நிலவி வரும் பேராதிக்க ஒடுக்குமுறைகளை இல்லாதொழித்து, தமிழ் மக்களின் விருப்பப்படி அவர்களின் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாக் கொண்ட அதிகபட்ச சுயாட்சியை வென்றெடுப்பதே பிரதான அரசியல் நோக்கம்"
"தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் சிதைந்து போயுள்ளதால் உள்நாட்டிலும், வெளிநாட்டிலுமுள்ள தமிழ் தேசிய உணர்வாளர்கள் தமது தமிழ் தேசிய உணர்வை அடைவதற்காக பல்வேறு திசைகளில் பயணிக்கத் தொடங்கியுள்ளார்கள். இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டிய அத்தியாவசியம் இந்தக் காலகட்டத்தில் எழுந்துள்ளது. இந்தக் கடமைப் பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்திற்கு அனைவரின் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்" என புதிதாக உதயமாகியுள்ள அக் கழகத்ததின் கொள்கைப் பிரகடன உரையின் போது அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
யார் இந்த அனந்தி சசிதரன்?
வடக்கு மாகாண சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள அங்கத்துவ கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினரான அனந்தி சசிதரன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கட்டுப்பாட்டினை மீறி 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று பரப்புரை மேற்கொண்ட காரணத்தினால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கட்சியின் ஒழுங்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு கட்சியின் மகளிர் அணி செயலாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி அனந்தி சசிதரன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த 2௦13ஆம் ஆண்டு இடம்பெற்ற வடக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட அனந்தி சசிதரன் 87,870 விருப்பு வாக்குகளை பெற்று வெற்றிபெற்றிருந்தார். சி.வி.விக்னேஸ்வரனுக்கு அடுத்ததாக அதிக விருப்பு வாக்குளை இவர் பெற்றிருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












