இலங்கை: ரோஹிஞ்சாக்கள் மீதான தாக்குதல் குறித்த வழக்கில் மேலும் சிலர் கைது

ரோஹிஞ்சா முஸ்லிம்கள்

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் தலைநகர் கொழும்புக்கு வெளியே ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த வீடு தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பாக இனம் காணப்பட்ட மேலும் நான்கு சந்தேக நபர்கள் போலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 8 பேர் இனம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலிஸ் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஒரு பெண் உள்பட இருவர் கைதாகி நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 9-ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் கைதானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை பௌத்த துறவிகள் உள்ளிட்ட கடும் போக்கு பௌத்தர்கள் குழுவொன்றினால் அந்த இடம் முற்றுகையிடப்பட்டு ஐ.நா வின் பொறுப்பில் தங்க வைக்கப்பட்டிருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 3 ரோஹிஞ்சாக்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

போலிஸாரால் பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேற்றப்பட்ட ரோஹிஞ்சா அகதிகள் தற்போது 120 கிலோ மீட்டருக்கு அப்பாலிலுள்ள காலி பூசா தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பூசா தடுப்பு முகாம் இலங்கையில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் கைதானவர்களை மாகாணத்திற்கு வெளியே தடுத்து வைப்பதற்காக அமைக்கப்பட்ட ராணுவ தடுப்பு முகாம் ஆகும்.

இதேவேளை பூசா தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ரோஹிஞ்சா சிறார்களின் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டுகின்றது.

"பள்ளி செல்ல வேண்டிய 6 ரோஹிஞ்சா சிறார்கள் அந்த தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்னர். ஏற்கனவே தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் அருகாமையிலுள்ள பள்ளிக் கூடத்தில் கல்வி கற்கும் வசதி வழங்கப்பட்டிருந்தது" என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் கூறுகின்றது.

"ஐ.நா சாசனத்தின் படி அவர்களின் ஆரம்ப கல்வி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்" என்று இது தொடர்பாக ஜனாதிபதிக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்திற்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றில் வலியுறுத்தி கேட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்