ஒன்றாய் பிறந்து, ஒன்றாய் பறந்து, ஒன்றாய் ஓய்வு பெற்ற இரட்டையர் விமானிகள்

30 நிமிட இடைவெளியில் பிறந்து, விமானிகளாக தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்ட பிரிட்டனைச் சேர்ந்த இரட்டையர்கள், 30 நொடி இடைவெளியில் தாங்கள் இயக்கிய விமானங்களைத் தரை இறக்கி, தங்கள் 60-வது பிறந்த நாளன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.

Nicholas (left) and Jeremy Hart

பட மூலாதாரம், Stuart Bailey/PA Wire

படக்குறிப்பு, நிகோலஸ் ஹார்ட் (இடது) மற்றும் ஜெரேமி

கடந்த வியாழனன்று, ஹீத்ரோ விமான நிலையத்தில் தங்கள் பணியில் இருந்து ஓய்வுபெற்ற கேப்டன் ஜெரேமி மற்றும் கேப்டன் நிகோலஸ் ஹார்ட் ஆகியோர்தான் அந்த இரட்டையர்கள்.

ஃபிலிட்டனில் வசிக்கும் அந்த சகோதரர்களில் ஒருவரான ஜெரேமி, "தங்கள் பயணத்தை முடிப்பதற்கு இது ஒரு சிறந்த வழி," என்று கூறியுள்ளார்.

பேன்பரியில் வசிக்கும் நிக், "எல்லா விமானங்களும் கடைசி வான் பயணம் இருப்பதைப்போல, எல்லா விமானிகளுக்கும் ஒரு கடைசி வான் பயணம் இருக்கும்," என்று கூறினார்.

தங்கள் பணிக்காலத்தில் தலா 45,000 மணி நேரங்கள் வானில் பறந்துள்ள அவர்களில் ஒருவரை மற்றோருவர் என்று தவறுதலாக பலரும் பலமுறை நினைத்துள்ளனர். ஆனால், இருவருமே தலைமை விமானிகளாக இருந்ததால் ஒரு முறை கூட அந்த இரட்டையர்கள் ஒன்று சேர்ந்து ஒரே விமானத்தை இயக்கியதில்லை.

ஜெரேமி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் 1987-ஆம் சேர்ந்தார். பிரிட்டிஷ் மிட்லேண்ட் விமான நிறுவனத்தை 2012-இல் பிரிட்டிஷ் ஏர்வேஸ் கையகப்படுத்திய பின்னர், அவரும் அதே நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

ஒன்றாய் பிறந்து, ஒன்றாய் பறந்து, ஒன்றாய் ஓய்வு பெற்ற இரட்டையர் விமானிகள்

பட மூலாதாரம், Stuart Bailey/PA Wire

படக்குறிப்பு, ஜெரேமி ஹார்ட் (இடது) மற்றும் நிகோலஸ்

"தனக்கு ஒரு இரட்டை சகோதரர் உண்டு என்றும், அவர் பிரிட்டிஷ் மிட்லேண்ட் நிறுவனத்தில் பணியாற்றுகிறார் என்றும் ஜெர்ரி அவரது சகாக்களிடம் கூறியதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானி ஒருவர் என்னை பிரிட்டிஷ் மிட்லேண்ட் நிறுவனத்தின் சீருடையில் பார்த்து, நான் ஏன் வேறு சீருடையில் உள்ளேன் என்று ஆவலாக விசாரித்தார். அவரிடம் நான் கேப்டன் ஜெரேமி அல்ல என்பதை புரிய வைக்க மிகவும் சிரமப்பட்டேன்," என்கிறார் நிக்.

வியாழன்று, சுவீடனில் உள்ள கோதென்பெர்க் நகரில் இருந்து வந்த ஏர்பஸ் ஏ-320 விமானத்தை பிரிட்டிஷ் நேரப்படி, பகல்12.34-க்கு தரை இறக்கினார் ஜெரேமி.

காணொளிக் குறிப்பு, மரத்தில் மோதி விமானம் விழுந்த பின்னரும் அதிக காயமின்றி தப்பித்த விமானி

அவரது இரட்டையரான நிக், ஜெனீவாவில் இருந்து வந்த அதே ரக விமானத்தை 30 நொடிகள் கழித்து 12.35-க்கு தரை இறக்கினார்.

"ஒரே நிறுவனத்தில் பணியாற்றி, ஒரே ரக விமானத்தை இயக்கிய இந்த இரட்டையர்கள், அவர்கள் எப்படி இந்த உலகுக்கு வந்தனரோ அதே போல ஓய்வும் பெற்றுள்ளனர். அவர்களை நாங்கள் 'மிஸ் செய்வோம்', " என்று கூறினார் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜேம்ஸ் பேஸ்னெட்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :