அமெரிக்காவும் வட கொரியாவும் 'நேரடித் தொடர்பில்' உள்ளன: டில்லர்ஸன்
வட கொரியாவுடன் அமேரிக்கா நேரடித் தொடர்பில் உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்ஸன் தெரிவித்துள்ளார். வட கொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Reuters
"நாங்கள் தொடர்ந்து அவர்களுடன் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் இப்போது இருள் மிகுந்த சூழ்நிலையில் இல்லை," என்று தன் சீன பயணத்தின்போது அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் தொடர்ந்து மோதல் போக்கில் இருந்த இந்த இரு நாடுகளும், பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக தகவல் தொடர்பில் இருந்தன என்ற செய்தி இதுவரை வெளியாகவில்லை.
அமெரிக்காவை அச்சுறுத்துவதன்மூலம் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஒரு 'தற்கொலை முயற்சியில்' ஈடுபட்டுள்ளார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்ததற்கு, "வயது மூப்பால் மனத் தளர்ச்சியுற்றுள்ள டிரம்ப் ஆயுதங்களின் மூலமாக வழிக்குக் கொண்டுவரப்படுவார்," என்று கிம் கூறியிருந்தார்.
சமீப மாதங்களில், வட கொரியா தொடர்ந்து ஆயுத சோதனைகளில் ஈடுபட்டதால் இந்த இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணையில் பொருத்தும் அளவில் உள்ள, சிறிய ரக ஹைட்ரஜன் குண்டு ஒன்றை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக கடந்த செப்டெம்பர் 3-ஆம் தேதி வட கொரியா கூறியிருந்தது.
சர்வேதச அளவில் அந்த ஆயுத சோதனைகள் கண்டிக்கப்பட்டதுடன், அவற்றை நிறுத்தகோரி வட கொரியா மீது ஐ.நா அவையால் பல தடைகளும் விதிக்கப்பட்டன.
வட கொரியா மீது மேற்கொண்டு தடைகள் விதிக்க வைக்கும் நோக்கத்துடன் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் மூத்த அதிகாரிகளை சந்திக்க டில்லர்ஸன் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
வட கொரியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில் அக்கறை காட்டிவரும் அதன் நெருங்கிய கூட்டாளியான சீனா, இந்த வாரம் தங்கள் நாட்டில் உள்ள வட கொரிய தொழில் நிறுவனங்கள் அனைத்துக்கும் தடை விதித்தது.
"பேச்சுவார்த்தை தீர்வாகாது," என்று கடந்த மாதம் டிரம்ப் கூறியிருந்தாலும், இரு நாடுகளும் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபடும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

பட மூலாதாரம், Reuters
முன்பு, அமெரிக்கா சார்பாக வட கொரியாவுடன் சுவீடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது பரவலாக அறியப்பட்டிருந்தது.
"கைது செய்யப்பட்ட அமெரிக்கர்களை விடுவிப்பது உள்ளிட்ட பல விவகாரங்களில் சுவீடன் வட கொரியாவுடன் முன்னதாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அந்த இரு நாடுகளும் நம்புவதால் சுவீடன் மீண்டும் அதையே செய்யலாம்," என்று சுவீடன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இன்டர்நேஷனல் அஃப்பையர்ஸ் அமைப்பைச் சேர்ந்த உல் ஹான்சன் கடந்த ஆகஸ்ட் மாதம் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியிருந்தார்.
இது குறித்து வெளிப்படையாக கருத்துக் கூற சுவீடன் வெளியுறவு அமைச்சகம் மறுத்துவிட்டது.
பிற செய்திகள்:
- நுகரும் திறனை இழக்கிறீர்களா? மறதி நோய் எச்சரிக்கை!
- தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட இத்தாலிப் பெண்
- இலங்கையில் ஒற்றையாட்சி முறை மாறாது, புத்த மத முக்கியத்துவம் குறையாது: சிறிசேன
- அமெரிக்க சுகாதாரச் செயலாளர் பதவி விலகல்: தனி விமான விவகாரம்
- மரிலின் மன்றோ கல்லறை அருகே 'உறங்க' போகும் உல்லாச பத்திரிகை அதிபர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













