இலங்கையிலுள்ள ரோஹிஞ்சா அகதிகள்: அன்று முதல் இன்று வரை
இலங்கை கடற்பரப்பிற்குள் வைத்து இரு இந்தியர்கள் உட்பட 32 பேர் படகொன்றில் வைத்து செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட ஏனைய 30 பேர் மியன்மாரை சேர்ந்தவர்கள். இலங்கையில் ஒரு குழந்தை பிரசவமான நிலையில் எண்ணிக்கை தற்போது 31 ஆக உயர்ந்துள்ளது.

5 வருடங்களுக்கு முன்பு தமது நாட்டை விட்டு வெளியேறிய இவர்கள் இந்தியாவில் சுமார் 5 வருடங்கள் தங்கியிருந்து அகதிகளாகவும் பதிவு செய்துள்ளனர் ஐ.நா அகதிகள் ஆணையத்தின் (UNHCR) மூலம் அகதி அடையாள அட்டையும் வழங்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் வெளியான செய்தியொன்றின் காரணமாக இந்திய அரசினால் எந்நேரத்திலும் மியன்மாருக்கு நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக படகொன்றின் மூலம் வேறொரு நாட்டிற்கு தப்பிச்செல்ல முயற்சித்துள்ளனர்.
அந்த பயணத்திற்காக இந்தியர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு நாகபட்டினம் கடலோரத்திலிருந்து படகொன்றில் புறப்பட்டுள்ளனர். படகில் பயணத்தில் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த குற்றத்திற்காக இலங்கை கடற்படையினரால் 2017 ஏப்ரல் 30ம் திகதி கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த கைது தொடர்பாக இந்திய தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்திய அதிகாரிகளினால் இவர்கள் இந்தியாவில் வசித்த அகதிகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
1948ம் ஆண்டின் 20ம் இலக்க குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் காங்கேசன்துறை போலிஸாரால் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிமன்றம் இவ்விடயம் சம்பந்தமாக சட்டமா அதிபதியின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள தீர்மானித்து அதுவரையில் மியன்மாரை சேர்ந்த 30 பேரையும் மிரிகான சட்ட விரோத குடியேற்றகாரர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்குமாறும் இரு இந்தியர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறும் கட்டளையிடப்பட்டது.
மியன்மாரைச் சேர்ந்தவர்கள் இந்திய அகதிகளாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால் அவர்களுக்கெதிராக 1948ம் ஆண்டின் 20ம் இலக்க குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 45 மற்றும் 45 (அ) உறுப்புரைகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம் என சட்டமா அதிபதியினால் நீதிமன்றத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
மியன்மாரைச் சேர்ந்த இலங்கையில் பிறந்த குழந்தை உள்ளிட்ட 31 பேரையும் இவ்வழக்கிலிருந்து விடுவித்து , குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினூடாக ஐ.நா அகதிகள் ஆணையத்திடம் ஒப்படைக்கும்படி கட்டளையிடப்பட்டது.
அதன் பிரகாரம் மியன்மாரைச் சேர்ந்த அனைவரும் ஐ.நா வழிகாட்டலில் நாட்டிலிருந்து வெளியேற்றப்படும் வரை மிரிகானை தடுப்பு முகாமில் தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
மிரிகானை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளை இளம் பெண்ணொருவர் தடுப்பு முகாமில் கடமையிலிருந்த காவல் அதிகாரியொருவரால் அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு. இது தொடர்பில் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரனை நடைபெற்று வருகின்றது.
இந்த பாதுகாப்பு அற்ற சூழ் நிலைகளை கருத்திற் கொண்டு அவர்களுக்கு பொறுப்பாகவிருந்த ஐ.நா அகதிகள் ஆணையம் மூலம் நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு காவல் துறையினரின் பாதுகாப்புடன் தற்காலிகமாக இவர்கள் கல்கிஸ்சை பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் தங்க வைக்கப்பட்டனர். இது தொடர்பாக காவல் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து துறையினருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.
உள் விவகார அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இம்மாதம் 18ம் திகதி வெளியிடப் பட்ட ஊடக அறிக்கையின் படி மியன்மார் அகதிகள் இதற்கு முன் இலங்கை வந்த விதம் மற்றும் அவர்கள் தொடர்பில் செயற்பட்ட விதமும் விபரிக்கப் பட்டுள்ளது.

2008 மார்ச் மாதம் 3ம் திகதி மியன்மாரை சேர்ந்த 55 நபர்கள் கொண்ட குழுவொன்று இலங்கை கடற் பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். ஐ.நா அகதிகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் அனைவரும் 2012 ஜூலை மாதம் நாட்டிலிருந்து வெளியேற்றப் பட்டனர்.
2013 பெப்ரவரி மாதம் மீண்டும் இலங்கை கடற் பரப்பிற்குள் வைத்து 170 மியன்மார் பிரஜைகள் கைது செய்யப்பட்டு ஐ.நாவிடம் ஒப்படைக்கப்பட்டனர் 2015 நவம்பர் மாதம் அனைவரும் நாட்டிலிருந்து வெளியேற்றப் பட்டனர்.
விசேடமாக அவ்வூடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டதற்கிணங்க இலங்கை அரசு இந்த அகதிகள் விடயத்தில் சரியான வழிமுறைகளை பின்பற்றியுள்ளதுடன் நெறியான வழிமுறைகளின் படியே அக்குழு தொடர்பாக அவசிய அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப் படுமென் உறுதி படுத்தியுள்ளது.
அதன் பிரகாரம் 31 நபர்களைக் கொண்ட மியன்மார் அகதிகள் குழுவை நாட்டிலிருந்து வெளியேற்ற அவசரமாக அனைத்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் வெளியேற்றப் படவிருந்த இச்சந்தர்ப்பத்தில் தனிப்பட்ட ஒரு நபரின் அல்லது ஒரு குழுவின் தவறான வழிகாட்டலில் இந்த அசாதாரண சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உண்மைக்கு புறம்பாக சில அடிப்படைவாத குழுக்கள் மூலம் சமூக வலைதலங்களினூடாகவும் ஏனைய பல்வேறு ஊடகங்களினூடாகவும் இந்த மியன்மார் பிரஜைகள் தொடர்பில் பொய்யான தகவல்கள் பிரசாரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.
அந்த நபர்களின் அல்லது குழுவின் நடவடிக்கைகள் மூலம் தவறான வழியில் இட்டுச் செல்லப் பட்டு உண்மையான தகவல் திரட்டியோ அல்லது அது தொடர்பில் ஆய்வு செய்யாமல் ஒன்று கூடிய அக்குழு மியன்மார் அகதிகள் தங்க வைக்கப் பட்டிருந்த வீட்டை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அந்த அகதிகளின் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களை போலிஸ் பொறுப்பெடுத்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்களை மீண்டும் தங்குமிடத்திற்கு அழைத்து வரப்பட்ட வேளை எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக அவர்களின் பாதுகாப்பு கருதி புசா தடுப்பு முகாமில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தற்போது தங்கியுள்ள மியன்மார் நாட்டைச் சேர்ந்த ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தொடர்பாக அவர்களின் உரிமைக்காக போராடும் உள்நாட்டு நிறுவனமான ஆர்.ஆர்.ரி நிறுவனத்தின் மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்டின் தெரிவித்தவை மேற்கண்ட தகவல்கள்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :















