எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துவரத் தடை
தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களில், பள்ளிக்கூட மாணவர்களை அழைத்துவந்து அமர வைப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மாற்றம் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நாராயாணன் என்பவர் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அரசு விழா என்ற பெயரில் நடக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்ட பொதுக்கூட்டங்களில் பள்ளி மாணவர்கள் பங்கேற்பதைத் தடைசெய்து உத்தரவிட வேண்டுமெனக் கோரியிருந்தார்.
கடந்த ஜூன் 30ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை மாநில அரசு பல்வேறு மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கொண்டாடி வருகிறது.
இந்த விழாக்களில் கலந்துகொள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த மாணவர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள் என தனது மனுவில் நாராயணன் குறிப்பிட்டிருந்தார்.
மாநில முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் வரும்போது அவர்களை வரவேற்கவும் விழா அரங்கங்களில் காலியான நாற்காலிகளை நிரப்பவும் இந்த மாணவர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
வருகை தரும் தலைவர்கள் மீது மாணவர்களை வைத்து மலர்களைத் தூவவைப்பதாகவும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
பள்ளி நடக்கும் நாட்களில் விழா துவங்குவதற்கு வெகு நேரத்திற்கு முன்பாகவே அரங்கிற்கு அழைத்துவரப்படும் மாணவர்களை வைத்து காலி நாற்காலிகளை நிரப்பி, விழா மிகப்பெரிய வெற்றிபெற்றதாக காண்பிக்கப்படுவதாகவும் நாராயணன் தனது மனுவில் கூறியிருந்தார்.
வரும் ஞாயிற்றுக்கிழமையன்று சேலத்தில் மிகப் பெரிய விழா நடக்கவிருக்கும் நிலையில், அந்த விழாவிற்கு அப்பாவி மாணவர்கள் அழைத்துவரப்பட்டு, துன்புறுத்தப்படும் சாத்தியம் இருப்பதால் அதனைத் தடை செய்ய வேண்டுமென்றும் நாராயணன் தனது மனுவில் கோரியிருந்தார்.
மேலும், பொது நிகழ்வுகளிலும் ஊர்வலங்களிலும் கலந்துகொள்ளச் செய்யும்போது பள்ளிக் கல்வித் துறை, பள்ளி நிர்வாகம், காவல்துறை ஆகியவை பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டுமெனவும் கோரியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த மனுவை விடுமுறைக் கால நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், ஆர். சுப்பிரமணியன் அடங்கிய அமர்வு புதன்கிழமை விசாரித்து, மாணவர்களை கூட்டங்களுக்கு அழைத்துவரத் தடைவிதித்தது.
ஆனால், புதன்கிழமையன்று மதியமே இந்தத் தடையை நீக்க வேண்டுமென அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பரிசு பெறும் மாணவர்களை மட்டுமாவது இம்மாதிரி விழாக்களுக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டுமென அரசுத் தரப்பு கோரியது. ஆனால், நீதிபதிகள் அதனை ஏற்க மறுத்தனர்.
உடனடியாக இந்த வழக்கில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மனு ஒன்று நேற்றே தாக்கல்செய்யப்பட்டது.
வரும் 30ஆம் தேதி சேலத்தில் நடக்கும் விழாவில் தனியார் அமைப்புடன் இணைந்து தன்னம்பிக்கை ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதாகவும் மாணவர்களே இந்த விழாக்களில் விருப்பப்பட்டு பங்கேற்பதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
வரும் 30ஆம் தேதி விழாவில் மட்டுமாவது மாணவர்களை பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை இன்று காலையில் மீண்டும் விசாரித்த நீதிபதிகள், அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
"பிற விவகாரங்களில் காட்டாத அவசரத்தை இதில் காட்டுவது ஏன்?, சி.பிஎஸ்இ மாணவர்கள் ஏன் இதில் பங்கேற்க வருவதில்லை?, எம்.ஜி.ஆரைப் பற்றி அவர்கள் தெரிந்துகொள்ள விரும்பவில்லையா?" என்றெல்லாம் கேள்வியெழுப்பிய நீதிபதிகள் வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.
பிறகு, மாலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பள்ளி மாணவர்களை இந்த விழாக்களுக்கு அழைத்துச் செல்ல புதன் கிழமை விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்று நீதிபதிகள் கூறினர்.
பரிசு பெற்ற மாணவர்கள் மட்டும் பரிசைப் பெற பெற்றோரின் அனுமதியுடன் விழாவில் கலந்துகொள்ளலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












