இலங்கையின் முதல் பெண் நீதி அமைச்சராக தலதா அத்துக்கோரள பதவியேற்பு
இலங்கையில் புதிய நீதி அமைச்சராக தலதா அத்துக்கோரள இன்று, வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

54 வயதான தலதா அத்துக்கோரள இலங்கையில் முதலாவது பெண் நீதி அமைச்சராவார். அவர் தற்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.
சட்டத்தரணியான இவர் 2004-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு முதல் தடவையாக தெரிவானார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள செயலகத்தில் இந்த பதவிப் பிரமாணம் நடைபெற்றது.
ஏற்கனவே வன ஜீவராசிகள் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வரும் ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான காமினி ஜயவிக்கிரம பெரேரா, பௌத்த சாசன அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

அவர் 1977-ஆம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டம் கடுகம்பொல தொகுதியிலிருந்து முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார். 76 வயதான அவர் அன்றிலிருந்து குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பதவி வகித்து வருகிறார்.
1987 தொடக்கம் 1992 வரை வட மேல் மாகாண முதலமைச்சராகவும் பெரேரா பதவி வகித்துள்ளார். இதற்கு முன்பு, ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருந்த காலங்களில் நீர்ப்பாசனம் , உணவு பாதுகாப்பு உள்ளிட்ட அமைச்சு பதவிகளையும் வகித்துள்ளார்.
நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சு பொறுப்புகளை வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஸ, அவர் சார்ந்த கட்சியின் தலைவரான பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் பரிந்துரையின் பேரில் கடந்த செவ்வாய்கிழமை குறித்த அமைச்சு பொறுப்புகளிலிருந்து ஜனாதிபதியினால் நீக்கப்பட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












