டி20 உலகக் கோப்பை: அஷ்வின் மீது நம்பிக்கை இல்லை என கபில்தேவ் கூறியதற்கு என்ன காரணம்?

கபில்

பட மூலாதாரம், Getty Images

டி20 உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாகப் பந்து வீசி பாராட்டுப் பெற்றுவரும் ரவிச்சந்திரன் அஸ்வின் மீது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.

அஸ்வினின் தன்னம்பிக்கையைக் கேள்வி எழுப்பியிருக்கும் கபில்தேவ், 'அவருக்கு கிடைத்த விக்கெட்டுகள் அவருக்குக் கிடைத்ததாகத் தெரியவில்லை. அவரே நம்ப முடியாத அளவுக்குத்தான் சில பேட்ஸ்மேன்கள் அவுட் ஆகி வெளியேறினர்' என்று பேட்டி ஒன்றில் கபில்தேவ் கூறியிருக்கிறார்.

டி20 போட்டிகளில் நீண்டகாலமாகத் தேர்வு செய்யப்படாமல் இருந்த அஸ்வின் சமீபகாலமாகத்தான் அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார். இந்த உலகக் கோப்பை டி20 தொடரில் இதுவரை இந்தியா ஆடிய 5 போட்டிகளிலும் அஸ்வின் இடம்பிடித்திருக்கிறார்.

இந்தியாவின் நம்பர் -1 சுழற்பந்து வீச்சாளராகக் கருதப்படும் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதில் அணியில் இருக்கும் அஸ்வின், சூப்பர் 12 ஆட்டத்தில் ஆடிய 5 போட்டிகளிலும் சேர்த்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 17 ஓவர்களை வீசியிருக்கும் அவர் 128 ரன்களைக் கொடுத்து ஓரளவு சிறப்பான ரன் விகிதத்தையும் பராமரித்திருக்கிறார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 22 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் அவரது சிறப்பான பந்துவீச்சில் அடங்கும். இந்தியா தோல்வியடைந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அஸ்வின் 43 ரன்களைக் கொடுத்தார். அது ஒன்றுதான் இந்தத் தொடரில் அவரின் மோசமான பந்துவீச்சு.

அஸ்வின் கபில்

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசிப் பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சூழலில் பந்தை அடிக்காமல் விட்டு வைட் மூலம் ஒரு ரன்னையும் கூடுதல் பந்தையும் பெற்ற அஷ்வினின் நிதானமும், அடுத்த பந்தில் ஃபீல்டருக்கு மேல் தூக்கி அடித்து ரன்னை எடுத்த விதமும் பாராட்டப்பட்டது.

ஆனால் கபில்தேவ் இதனால் சமாதானமாகவில்லை. அஷ்வினின் விக்கெட் எடுக்கும் திறன் குறித்து அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஜிம்பாப்வைக்கு எதிரான போட்டியில் கிடைத்த விக்கெட்டுகள் கிடைத்ததற்கு பந்து தாழ்வாகச் சென்றதே காரணம் என்று கபில்தேவ் கூறியிருக்கிறார்.

ஏபிபி நியூஸிடம் பேசிய அவர், "அஷ்வின் இதுவரை எனக்கு நம்பிக்கை அளிக்கவில்லை. அவர் விக்கெட்டுகளை எடுத்தார். ஆனால் அவற்றை அவர் எடுத்ததாகத் தெரியவில்லை. உண்மையில் அவர் எடுத்த ஒன்றிரண்டு விக்கெட்டுகளை அவர் எடுத்ததாக கோருவதற்குத் தயங்குவார்" என்று கூறியிருக்கிறார்.

கபில்

பட மூலாதாரம், Getty Images

அஷ்வினா, சாஹலா?

இதுவரை இந்தியா ஆடிய ஆட்டங்கள் எதிலும் இந்தியாவின் முக்கிய சுழற்பந்துவீச்சாளரான யுஸ்வேந்திர சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இப்போதிருக்கும் சூழலில் அரையிறுதிப் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்புக் குறைவாகவே காணப்படுகிறது.

அரையிறுதியில் அஸ்வினுக்குப் பதிலாக சாஹல் சேர்க்கப்பட வேண்டுமா என்ற கேள்விக்குப் பதிலளித்திருக்கும் கபில் தேவ், "அது அணி நிர்வாகம் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பொறுத்தது. அஷ்வின் மீது அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தால், அது நல்லது. அவர் தொடர் முழுவதும் விளையாடி இருக்கிறார் அதனால் தேவைக்கேற்ப ஆடுவார். ஆனால் எதிரணியை அதிர்ச்சியளிக்க வேண்டும் என்றால் சாஹலுக்கு வாய்ப்பளிக்கலாம். நிர்வாகத்தின் நம்பிக்கையை யார் பெறுகிறாரோ, அவர் ஆடுவார்" என்று கூறுகிறார்.

Ashwin

பட மூலாதாரம், Getty Images

தினேஷ் கார்த்திக்கா, ரிஷப் பண்டா?

இந்திய அணியில் சுழற்பந்து வீச்சைப் போலவே, விக்கெட் கீப்பராக யாரைக் களமிறக்குவது என்பதிலும் குழப்பம் நீடித்திருக்கிறது. ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கும் ஃபினிஷர் என்ற பெயர் தினேஷ் கார்த்திக்கிற்கு இருக்கிறது. முந்தையத் தொடர்களில் அவரது குறுகிய அதிரடி ஆட்டங்கள் அந்தப் பெயரை அவருக்குப் பெற்றுத் தந்தன. அதனால் உலகக் கோப்பை டி20 தொடரில் அவருக்கு எளிதாக இடம் கிடைத்தது. ஆனால் இந்தத் தொடரில் அவர் சிறப்பாக ஆடவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இரண்டு பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் ஆட்டமிழந்ததால் நெருக்கடி ஏற்பட்டது.

மற்றொரு நட்சத்திர வீரரான ரிஷப் பண்டுக்கு இந்தத் தொடரில் ஜிம்பாப்வே போட்டியில் மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதில் 3 ரன்களை மட்டும் எடுத்திருக்கிறார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பாத்திரத்தில் இருவருமே சிறப்பாக ஆடாததால் அரையிறுதியில் யாரை களமிறக்குவது என்பது அணிக்கு பெருங் குழப்பமாகவே இருக்கிறது.

இங்கிலாந்து அணியுடனான போட்டி எப்படி இருக்கும்?

குரூப் 2 பிரிவில் முதலாவதாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கும் இந்திய அணி குரூப் 1- பிரிவில் இரண்டாவதாக வந்திருக்கும் அணியான இங்கிலாந்துடன் வியாழக்கிழமையன்று அரையிறுதிப் போட்டியில் மோத இருக்கிறது.

இந்தியா

பட மூலாதாரம், Getty Images

இந்தத் தொடரில் தொடக்க இணை பெரிய அளவு ரன்களைக் குவிக்கவில்லை. ஜிம்பாப்வே போட்டிக்கு முன்பாக அந்த இணையின் சராசரி 13 ரன்களாகவே இருந்தது. 50 ரன்களைக் கடந்தது ஜிம்பாப்வே போட்டியில்தான். இது இந்திய அணிக்கு முக்கியமான சிக்கலாக இருக்கிறது

இருப்பினும் தினேஷ் கார்த்திக்கா, ரிஷப் பண்டா என்ற ஒரு மாற்றத்தைத் தவிர இந்தப் போட்டியில் ஏற்கெனவே சிறப்பாகச் செயல்பட்டு வரும் அணியில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்றே கருதப்படுகிறது.

காணொளிக் குறிப்பு, இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டதன் பின்னணி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: