டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு என்ன 'ஆபத்து'?

பாகிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு 'ஆபத்து'

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், எம். மணிகண்டன்
    • பதவி, பிபிசி தமிழ்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பெற்றிருக்கும் வெற்றி டி20 உலகக்கோப்பையின் சமன்பாடுகளை மாற்றியிருக்கிறது.

தென்னாப்பிரிக்காவும் இந்தியாவும் அரையிறுதியில் ஆடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்காவை இன்றைய போட்டியில் தோற்கடித்து பாகிஸ்தான் தனது அரையிறுதி நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை சந்திக்க இருக்கிறது. அந்தப் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றிபெற்றுவிட்டால், இந்திய அரையிறுதிக்குச் செல்வதற்கு ஜிம்பாப்வே அணியுடன் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.

ஏனென்றால் இந்தியா தோல்வியடையும்பட்சத்தில் 6 புள்ளிகள் பெற்ற பாகிஸ்தான் அணி, ரன் விகிதத்தை அதிகரித்துக் கொண்டு அரையிறுதிக்குச் சென்றுவிடும்.

பாகிஸ்தான் அணியின் நிலை என்ன?

பாகிஸ்தான் அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளிலும் தோல்வியும் அடைந்திருக்கிறது. அதனால் 4 புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. அந்த அணியின் ரன்ரேட் 1.117. அடுத்ததாக அந்த அணி வங்கதேசத்துடன் மோத இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை காலையில் அந்தப் போட்டி நடக்கிறது.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும்பட்சத்தில் அந்த அணி 6 புள்ளிகளைப் பெறும். எனினும் அடுத்து நடக்கும் இந்தியா-ஜிம்பாப்வே ஆட்டத்துக்காக பாகிஸ்தான் காத்திருக்க வேண்டும். இந்தியா தோல்வியடையும் பட்சத்தில் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் சென்றுவிடும்.

இந்தியாவுக்கு என்ன சிக்கல்?

இந்தியா இதுவரை 4 போட்டிகளில் ஆடி மூன்று போட்டிகளில் வென்று 6 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. இப்போதைக்கு பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், பாகிஸ்தானும் தென்னாப்பிரிக்காவும் அடுத்த போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவை முந்திவிடும் நிலை ஏற்படும்.

அடுத்த ஆட்டத்தில் இந்தியா குறைந்தபட்சம் ஒரு புள்ளியையாவது பெற வேண்டும். அதாவது மழையாவது பெய்ய வேண்டும்.

பாகிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு 'ஆபத்து'

பட மூலாதாரம், Getty Images

ஏனென்றால் இந்தியாஅதனால் இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டுமானால் ஜிம்பாப்வே அணியுடன் வெற்றி பெற்றாக வேண்டும். இல்லையென்றால் அரையிறுதிக்குச் செல்ல முடியாது.

ஜிம்பாப்வேயுடனான போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடக்க இருக்கிறது.

தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்குச் சென்றுவிட்டதா?

தென்னாப்பிரிக்க அணி 4 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வென்றும் ஒரு போட்டியில் மழையால் பாதிக்கப்பட்டும் 5 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. அந்த அணியின் ரன் ரேட் 1.441. அடுத்ததாக நெதர்லாந்து அணியுடன் மோதுவதால் அந்த அணிக்கு அரையிறுதிக்குச் செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவே கருதலாம்.

வங்கதேசத்துக்கு வாய்ப்பிருக்கிறதா?

வங்கதேச அணி இப்போது 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி அடுத்தாக பாகிஸ்தானுடன் ஆடவுள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான சிறு வாய்ப்புக் கிடைக்கும். எனினும் தற்போது அந்த அணியின் ரன் ரேட் குறைவாக இருப்பதால், அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியிருக்கும்.

மற்ற அணிகளுக்கு என்ன வாய்ப்பு?

இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் தவிர பிரிவு-2 இல் உள்ள ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகள் இனி அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை.

அரையிறுதிக்குத் தகுதிபெறப் போவது யார் என்பதைத் தெரிந்து கொள்ள வரும் ஞாயிற்றுக்கிழமை வரை காத்திருக்க வேண்டும்.

பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா போட்டியில் என்ன நடந்தது?

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை எடுத்தது. தடுமாறிய பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இரண்டாவது ஓவரில் நோர்ஜே வீசிய பந்தில் ஒரு சிக்சரை அடித்த முகமது ஹாரிஸ் அடுத்த பந்திலேயே எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து தடுமாறிவரும் பாகி்ஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசமும் லுங்கி நிங்கிடி பந்துவீச்சில் வெறும் 6 ரன்களுக்கு ரபாடாவிடம் பிடி கொடுத்தார்.

பாகிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு 'ஆபத்து'

பட மூலாதாரம், Getty Images

அடுத்த ஓவரிலேயே நோர்ஜேவின் பந்துவீச்சில் ஷான் மசூத் இரண்டே ரன்களுக்கு பவுமாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

7-ஆவது ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்களுக்கு எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. ஆனால் அதன் பிறகு களத்தில் இருந்த முகமது நவாஸும், இப்திஹார் அகமதுவும் பொறுப்பாக ஆடத் தொடங்கினர்.

ரன் ரேட் குறைவாக இருந்தாலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர். 28 ரன்களை எடுத்திருந்த நவாஸ், ஷம்சியின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு இஃப்திகாரும் சதாப்கானும் இணைந்து பாகிஸ்தானின் ஸ்கோரை வேகமாக உயர்த்தத் தொடங்கினர்.

பாகிஸ்தானுக்கு கிடைத்த 'நோ பால்' சிக்சர்

19-ஆவது ஓவரில் நோர்ஜே வீசிய முழு நீளப் பந்து சதாப்பின் இடுப்பு உயரத்துக்கு மேல் வந்தது. அதை மிட் ஆன் திசையில் சிக்சராக மாற்றினார் சதாப். அது நோபால் என அறிவிக்கப்பட்டதால் ஃப்ரீ ஹிட்டாக கிடைத்த அடுத்த பந்திலும் சதாப் சிக்சர் அடித்தார். இதன் மூலம் 20 பந்துகளில் அரைச் சதத்தைக் கடந்தார்.

எனினும் அந்த ஓவரின் 5-ஆவது பந்தில் எல்லைக் கோட்டைத் தாண்டும் வகையில் அவர் அடித்த பந்தை ஸ்டப்ஸ் அற்புதமாகக் குதித்துப் பிடித்தார். அது பாகிஸ்தானின் ரன்குவிப்புக்கு தடையாக அமைந்தது.

பாகிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு 'ஆபத்து'

பட மூலாதாரம், Getty Images

அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகள் விழுந்தன. இறுதியில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை எடுத்தது பாகிஸ்தான் அணி. டி20 கிரிக்கெட்டில் இது ஓரளவுக்கு வெற்றிபெறும் எண்ணிக்கை கருதப்படுகிறது.

குயின்டன் டி காக் விட்ட கேட்ச்

பாகிஸ்தான் அணி 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக், இப்திகார் அகமதுவை ரன் அவுட் செய்யும் ஒரு வாய்ப்பைத் தவற விட்டார். அப்போது அவர் வெறும் 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அந்த விக்கெட்டை அப்போதே எடுத்திருந்தால் பாகிஸ்தான் அணி இன்னும் குறைவான ரன்களையே எடுக்க முடிந்திருக்கும்.

தடுமாறிய தென்னாப்பிரிக்கா

பாகிஸ்தான் அணியைப் போலவே தென்னாப்பிரிக்க அணியும் தொடக்கத்திலேயே தடுமாறத் தொடங்கியது. ஷாகின் ஷா அப்ரிடியின் முதல் ஓவரிலேயே குயின்டன் டி காக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்

மூன்றாவது ஓவரில் ரூசோப் ஆட்டமிழந்தார். பின்னர் ஹாரிஸ் ராஃப் அதிரடியாக ஆடி ஓரளவு ரன்களைக் குவித்தார். ஆனால் எட்டாவது ஓவரில் சதாப் வீசிய பந்தில் பவுமாவும், மார்க்ரமும் ஆட்டமிழந்தனர். இதனால் 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்க அணி தடுமாறியது.

மழையால் தடைபட்ட ஆட்டம்

9ஆவது ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 69 ரன்களை எடுத்திருந்த போது மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஸ்டப்ஸ், கிளாஸன் ஆகியோர் தலா 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

பாகிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு 'ஆபத்து'

பட மூலாதாரம், Getty Images

மழை நின்ற பிறகு ஆட்டம் 14 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவுக்கு 142 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஏற்கெனவே 9 ஓவர்கள் முடிந்த நிலையில் மேலும் 5 ஓவர்களில் 73 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் தென்னாப்பிரிக்க வீரர்கள் அதிரடியாக ஆடத் தொடங்கினார்கள்.

ஆனால் 11-ஆவது ஓவரில் ஷாகின் ஷா அப்ரிடி வீசிய பந்தில் கிளாசன் ஆட்டமிழந்தார். இறுதியில் அந்த அணி 14 ஓவரில் 108 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 33 ரன்கள் வித்தியாத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

காணொளிக் குறிப்பு, விராட் கோலியின் 'போலி ஃபீல்டிங்' வங்கதேச ரசிகர்களைக் கடுப்பாக்கியது ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: