டி20 உலகக் கோப்பை: இந்தியா சறுக்கியது எங்கே? அரையிறுதி வாய்ப்பு எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அஷ்ஃபாக் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய அணியின் குறைகளைக் காண வேண்டிய அந்த நாள் இதோ வந்துவிட்டது. கே.எல்.ராகுல் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்புவது, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக்கின் ஆகியோரின் தடுமாற்றம், பந்துவீசும்போது மிடில் ஓவரில் எதிரணியை கட்டுப்படுத்த முடியாமல்போனது... இன்னும் பல உண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில்.
டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி முதல் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.
தென்னாப்பிரிக்க அணியின் மில்லர் எடுத்த அந்த ஒரு ரன் Suicidal Single என வர்ணிக்கப்பட்டது. அப்படி ஒரு ஆபத்தான சிங்கிள் எடுக்கும் முயற்சி அது. மார்க்ரமை எளிதில் ரன் அவுட் செய்ய அது ஒரு அற்புதமான வாய்ப்பு. கேப்டன் ரோஹித் சர்மா அதை மோசமாக தவறவிட்டார்.
முன்னதாக மார்க்ரம் 35 ரன்கள் எடுத்திருந்த போது அவர் அடித்த பந்து கேட்சாக மாறியது. அதை கோலி நழுவவிட்டார். பரபரப்பான தருணத்தில் இந்திய வீரர்களின் தடுமாற்றம் தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் போர்டில் எதிரொலித்தது. முடிவில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா.


முன்னதாக இந்தியாவின் நம்பிக்கையான வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 133 ரன்கள் மட்டுமே இந்திய அணியால் குவிக்க முடிந்தது.
தடுமாறிய பேட்ஸ்மேன்கள் - தூக்கி நிறுத்திய சூர்யகுமார்
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்து அரைசதம் பதிவு செய்த விராட் கோலி மீதான எதிர்ப்பார்ப்பு இன்றைய ஆட்டத்தில் அதிகமாகவே இருந்தன. இருப்பினும் அவர் 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அக்சர் பட்டேலுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்ட தீபக் ஹூடா டக் அவுட். ஹர்திக் 2, தினேஷ் கார்த்திக் 6 ரன்களில் வெளியேறினர்.
9 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட்களை பறிகொடுத்து வெறும் 51 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. இந்தியாவை நூறு ரன்களுக்குள் சுருட்டிவிடலாம் என எண்ணிய தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களின் கனவு சூர்யகுமாரின் பேட்டிங்கால் கானல் நீரானது.

பட மூலாதாரம், Getty Images
அணியின் மீட்பராக செயல்பட்ட சூர்யகுமார் பொறுப்பாக ஆடி சரிவில் இருந்த இந்தியாவை தூக்கி நிறுத்தினார். 40 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்சர், 6 பவுண்டரிகள் விளாசி 68 ரன்கள் குவித்தார். நடப்பு தொடரில் பெர்த் மைதானத்தில் தனியொருவர் விளாசிய அதிகபட்ச ரன்கள் இதுவாகும். இதர 8 பேரும் சேர்ந்து 80 பந்துகளை எதிர்கொண்டு 57 ரன்களை மட்டுமே சேர்த்தனர். இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் சேர்த்தது.
ஆட்டத்தின் போக்கை மாற்றிய அந்த இரு ஓவர்
2வது ஓவரை வீச வந்த அர்ஷ்தீப் சிங் முதல் பந்திலேயே மிரட்டலான பேட்ஸ்மன்கள் டி காக் மற்றும் ரூசோவை அடுத்தடுத்து வெளியேற்றி மிரட்டினார். இந்தியாவின் வேகத்தால் தென்னாப்பிரிக்கா 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 40 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆனால் இதன் பிறகு ஆட்டம் தென்னாப்பிரிக்கா வசம் மெல்ல நகரத் தொடங்கியது. 11வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார்.
அந்த ஒரு ஓவரில் மட்டும் தென்னாப்பிரிக்கா 3 பவுன்டரிகள் உள்பட 16 ரன்களை சேர்த்தது. அஷ்வின் வீசிய 14வது ஓவரில் 2 சிக்சர் உள்பட 17 ரன்களை சேர்த்தது தென்னாப்பிரிக்கா. மார்க்ரம் 52 ரன்களில் வெறியேறினாலும் மில்லர் இறுதி வரை களத்தில் நின்று 59 ரன்கள் விளாசியதுடன் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கும் வித்திட்டார். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
வேகப்பந்து வீச்சுக்கு பேர் போன பெர்த்
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 ஆட்டம் வேகப்பந்துவீச்சுக்கு பேர் போன பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதல் பேட்டிங் ஆட முடிவு செய்தது. பெர்த்தில் நடைபெற்ற 21 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணிகள் 13 முறை போட்டியை வென்றுள்ளன.

பட மூலாதாரம், PAUL KANE
ஆடுகளம் வேகப்பந்துவீச்சிற்கு குறிப்பாக பவுன்சிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் முதல் இன்னிங்ஸ் சராசரி வெறும் 133 ரன்கள்தான் என்கிறது சில முன்னணி கிரிக்கெட் ஊடகங்கள். பெர்த் மைதானம் எப்படி இருக்கிறது என்பதை தென்னாப்பிரிக்கா வீசிய முதல் ஓவரே காட்டிவிட்டது. பார்னெல் வீசிய முதல் ஓவரை எதிர்கொண்ட கே.எல்.ராகுலால் ஒரு ரன் கூட எடுக்க முடியாததால் அது மெய்டன் ஓவராக மாறியது. தென்னாப்பிரிக்காவின் வேகம் ராகுல் ரோஹித் இருவரின் கால்களையும் சற்று பதம் பார்த்தது.
கே.எல்.ராகுல் தொடர்ந்து சொதப்புவது ஏன்?
லுங்கி நிகிடி வீசிய பந்தில் ரோஹித் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழக்க, கே.எல் ராகுல் 9 ரன்களில் வெளியேறினார். டாப் ஆர்டரில் ரோஹித்தும், கோலியும் அரைசதங்கள் விளாசிய நிலையில், கே.எல்.ராகுல் இதுவரை பெரியளவுக்கு தொடரில் பங்களிப்பு செய்யவில்லை.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கிரிக்கெட் எழுத்தாளர் தினேஷ் அகிரா, "இன்றைக்கு உலக கிரிக்கெட்டில் ராகுலுக்கு நிகரான திறமையான பேட்ஸ்மேன் என ஒரு சிலரைத்தான் சொல்ல முடியும். சரக்கு இல்லாவிட்டால் லாரா, பீட்டர்சன் மாதிரியான மேதைகள் ஏன் அவரை கொண்டாடப் போகிறார்கள்? ஆனால் வருத்தம் என்னவென்றால் ராகுல், தனது திறமைக்கு இதுவரை முழுமையாக நியாயம் செய்யவில்லை என்பதுதான்.
கடந்த காலங்களில் ராகுல் எப்போதெல்லாம் ஃபார்மை தொலைத்தார் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒரு பேட்டர்ன் இருப்பதைப் பார்க்க முடியும். ஒன்று தோல்வியைக் கண்டு அஞ்சுவது அல்லது இல்லை அப்படியே அதற்கு நேரெதிராக வெற்றியைத் தக்கவைக்க வேண்டும் என்ற அழுத்தத்தில் தடுமாறுவதாக இருக்கும்.
ஒருவர் தொடர்ந்து தன்னுணர்வு உடன் இருப்பாரானல் அது அவருடைய சக்தியை உறுஞ்சி அவரை சோர்வடைய செய்துவிடும். ஆற்றல் குறையும் போது அது கவனமின்மைக்கு இட்டுச் செல்கிறது. முக்கியமான தொடர்களில் ராகுல் பதட்டமடைவதும் சொதப்புவது இதன் காரணமாகத்தான்.

பட மூலாதாரம், PAUL KANE
மற்றபடி அவருக்கு டெக்னிக்கலாக எல்லாம் பெரிய பிரச்சினை எதுவுமில்லை. இதுபோன்ற விசித்திரங்கள் கிரிக்கெட்டுக்கு ஒன்றும் புதிதல்ல. மார்க் வாஹ், கார்ல் ஹூப்பர் போன்ற மேதைகள் கடைசி வரைக்கும் தங்களுடைய உச்சத்தை வெளிப்படுத்தாமலே தங்களது ஆட்டத்தை முடித்துக் கொண்டதைப் பார்த்திருக்கிறோம். இது அந்தந்த வீரரின் ஆளுமை மற்றும் மன வார்ப்பைப் பொறுத்தது. இப்போதைக்கு ராகுலுக்கு தேவை ஒரு நல்ல மென்டர்" என்றார்
இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு எப்படி?
நடப்பு டி20 தொடரில் இந்தியாவுக்கு இது முதல் தோல்வி. பாகிஸ்தான், நெதர்லாந்துக்கு எதிராக அடுத்தடுத்து 2 வெற்றிகளால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா, தற்போது அதே 4 புள்ளிகளுடன் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வங்கதேசமும் 4 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. எதிர்வரும் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே உடனான போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும்.


ஒருவேளை இந்தியா சொதப்பும் பட்சத்தில் புள்ளிப்பட்டியலில் அடுத்த இடங்களை வகிக்கும் வங்கதேசம், ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகளுக்குள் போட்டி நிலவும். ஜிம்பாப்வேயிடம் அதிர்ச்சி தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான், இன்று நெதர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. எஞ்சிய ஆட்டங்களில் வெற்றியும், இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் தங்கள் இதர போட்டிகளில் தோல்வியைத் தழுவினால் மட்டுமே பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும். ஆனால் இதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளது.
அணி விவரம்
இந்தியா: 1 கேஎல் ராகுல், 2 ரோகித் சர்மா (கேப்டன்), 3 விராட் கோலி, 4 சூர்யகுமார் யாதவ், 5 தீபக் ஹூடா, 6 ஹர்திக் பாண்டியா, 7 தினேஷ் கார்த்திக் 8 அஸ்வின், 9 முகமது ஷமி, 10 புவனேஷ்வர் குமார், 11 அர்ஷ்தீப் சிங்
தென்னாப்பிரிக்கா: 1 குயின்டன் டி காக் , 2 டெம்பா பவுமா, 3 ரிலீ ரோசோவ், 4 மார்க்ரம், 5 டேவிட் மில்லர், 6 டிரிஸ்டன் ஸ்டப்ஸ், 7 வெய்ன் பார்னெல், 8 கேசவ் மகராஜ், 9 அன்ரிச் நார்ட்ஜே, 10 லுங்கி நிகிடி, 11. ரபாடா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













