டி20 உலகக் கோப்பை: இந்தியா தோற்றதால் பாகிஸ்தானுக்கு 'பை-பை' - என்ன காரணம்?

பாபர்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், எம். மணிகண்டன்
    • பதவி, பிபிசி தமிழ்

டி20 உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்க அணியுடன் இந்திய அணி தோல்வியடைந்ததால், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்வதில் மேலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இந்திய அணி தோல்வியடைந்ததும் பை-பை என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகத் தொடங்கியது. காரணம் வேறொன்றுமில்லை. பாகிஸ்தான் அணி இனி வீட்டுக்குப் போகவேண்டியதுதான் என்ற பொருளில் இந்தக் ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டது.

உண்மையில் அதுதான் நிலைமையா?

இந்தியா மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, ஞாயிற்றுக்கிழமை நெதர்லாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி மற்றும் அதன் ரசிகர்களின் பார்வை இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியின் மீதே இருந்தது.

இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று இதற்கு முன்னர் பாகிஸ்தான் ரசிகர்கள் விரும்பியிருப்பார்களா எனத் தெரியவில்லை. ஆனால் இந்தப் போட்டியின்போது இந்திய அணி வெற்றியே பாகிஸ்தான் ரசிகர்களின் விருப்பமாக இருந்திருக்கும்.

ஒருவேளை தென்னாப்பிரிக்க அணியுடனான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு சற்று அதிகரித்திருக்கும். ஆனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றுப் போனது.

இனி பாகிஸ்தானுக்கு என்ன நடக்கும்?

குரூப்-2 இன் சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வேயிடம் முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த பின்னர், பாகிஸ்தானுக்கு அரையிறுதிக்கான வாய்ப்பு மங்கிவிட்டது. தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியடைந்து விட்டதால் பாகிஸ்தானின் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.

குரூப் இரண்டில், நெதர்லாந்துக்கு எதிராக வென்ற பாகிஸ்தான் இரண்டு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா தனது கணக்கில் 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இந்தியா நான்கு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஞாயிற்றுக்கிழமை ஜிம்பாப்வேயை மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய வங்கதேசம் நான்கு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. ரன் ரேட்டில் இந்தியாவை விட பின்தங்கி வங்கதேசம் உள்ளது.

பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

ஜிம்பாப்வேயின் கணக்கில் மூன்று புள்ளிகள் உள்ளன, மேலும் பாகிஸ்தானை விடவும் ஜிம்பாப்வே முன்னிலையில் உள்ளது. பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால், எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறுவது மட்டுமின்றி, மீதமுள்ள அணிகளின் வெற்றியும் தோல்வியை பார்க்க வேண்டும்.

நவம்பர் 3ஆம் தேதி தென்னாப்பிரிக்காவையும், நவம்பர் 6ஆம் தேதி வங்காளதேசத்தையும் எதிர்கொள்கிறது பாகிஸ்தான்.

இந்தியாவின் தோல்வி பாகிஸ்தானுக்கு ஏன் பின்னடைவு?

ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்ற போட்டி பாகிஸ்தானுக்கு முக்கியமானதாக இருந்தது. இந்தியா தென்னாப்பிரிக்காவை வீழ்த்த வேண்டும் என பாகிஸ்தான் ரசிகர்கள் விரும்பினர். அப்படி இருந்திருந்தால், பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற ஒரு வாய்ப்பு இருந்திருக்கும்.

ஆனால் தென்னாப்பிரிக்கா இந்தியாவை தோற்கடித்த பிறகு, பாகிஸ்தானுக்கு அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைந்துவிட்டது. இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி தற்போது தனது கணக்கில் ஐந்து புள்ளிகளையும், இந்தியா தனது கணக்கில் நான்கு புள்ளிகளையும் பெற்றுள்ளன. இனி நெதர்லாந்துடன் தென்னாப்பிரிக்கா விளையாடுகிறது. தென் ஆப்பிரிக்க அணியின் தற்போதைய ஃபார்மைப் பார்க்கும்போது, ​​நெதர்லாந்திற்கு எதிரான அவர்களின் வெற்றி பிரமாண்டமாகவே இருக்கலாம்.

இன்னொரு பக்கம், இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் தோற்றிருந்தாலும், வங்கதேசத்தையும் ஜிம்பாப்வேயையும் வெல்ல முடியும் என்று நம்பலாம். இந்தியாவின் ரன் ரேட் +0.844. ரன் ரேட்டில் இந்தியாவை விட தென் ஆப்ரிக்கா மட்டுமே முன்னிலையில் உள்ளது.

பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

தென்னாப்பிரிக்கா ஏற்கனவே ஜிம்பாப்வேயை விட ரன்ரேட்டில் அதிகமாக உள்ளது. அவர்களின் ரன் விகிதம் +2.772. வியாழக்கிழமை வங்கதேசத்தை 104 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் தென்னாப்பிரிக்கா இந்த முன்னிலை பெற்றது. ஜிம்பாப்வே அணி அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்ல முடியாது.

மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அதன் கணக்கில் 6 புள்ளிகள் இருக்கும். அப்போதும் அந்த அணி மற்ற அணிகளின் தோல்விக்காகக் காத்திருக்க வேண்டும். அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் தோற்றால் மட்டுமே, பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற வழி கிடைக்கும். ஆனால் இதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

பாகிஸ்தானின் நம்பிக்கைக்கு மழையும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு எப்படி?

நடப்பு டி20 தொடரில் இந்தியா முதல் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. பாகிஸ்தான், நெதர்லாந்துக்கு எதிராக அடுத்தடுத்து 2 வெற்றிகளால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா, தற்போது அதே 4 புள்ளிகளுடன் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வங்கதேசமும் 4 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. எதிர்வரும் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே உடனான போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும்.

ஒருவேளை இந்தியா தோல்வியடைந்தால் புள்ளிப்பட்டியலில் அடுத்த இடங்களை வகிக்கும் வங்கதேசம், ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகளுக்குள் போட்டி நிலவும்.

இந்தியா

பட மூலாதாரம், PAUL KANE

வங்கதேசத்துக்கு என்ன வாய்ப்பு?

வங்கதேசம் 3 போட்டிகளில் ஆடி நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதன் ரன் ரேட் மைனஸ் 1.533. இன்னும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் மோத வேண்டியிருக்கிறது. இந்தியாவை விட ரன்ரேட்டில் மிகவும் குறைவாக இருப்பதால் அந்த அணிக்கான வாய்ப்புக் குறைவுதான்.

எனினும் இந்தியா தோல்வியைச் சந்தித்து, ரன்ரேட்டும் குறைந்தால் வங்கதேசத்துக்கு வாய்ப்புக் கிடைக்கும். அந்த அணி குறைந்தது இன்னும் ஒரு போட்டியில் வென்றாக வேண்டும். இரண்டு போட்டிகளிலும் வென்றால் சந்தேகமே இல்லாமல் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும்.

தென்னாப்பிரிக்கா தகுதி பெற்றுவிட்டதா?

மூன்று போட்டிகளில் ஆடியுள்ள தென்னாப்பிரிக்கா 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதன் ரன் ரேட் 2.772. இன்னும் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் ஆட வேண்டியிருக்கிறது. இதில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே அரையிறுதிக்கான வாய்ப்பு பெரும்பாலும் உறுதியாகிவிடும்.

வங்கதேசமோ, ஜிம்பாப்வேயோ இரு போட்டிகளிலும் வென்று ஏழு, எட்டு புள்ளிகளைப் பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா தகுதி பெற்றுவிடும்.

ஜிம்பாப்வேக்கு வாய்ப்பு இருக்கிறதா?

மூன்று போட்டிகளை ஆடியுள்ள ஜிம்பாப்வே அணி மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதன் ரன் ரேட் மைனஸ். 0.050. நெதர்லாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுடன் ஜிம்பாப்வே மோத வேண்டியிருக்கிறது. இருபோட்டிகளிலும் வெற்றிபெற்றால் அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்புக் கிடைக்கும். இந்தியாவுடன் தோற்றுவிட்டால் அரையிறுதிக்குச் செல்ல முடியாது.

நெதர்லாந்து அணியைப் பொறுத்தவரை அந்த அணி மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துவிட்டதால் ஏற்கெனவே அரையிறுதிக்கான தகுதியை இழந்துவிட்டது.

காணொளிக் குறிப்பு, பாகிஸ்தான் அணி இனி அரையிறுதிக்குச் செல்ல முடியுமா?
1px transparent line

பிபிசி தமிழில் வெளியான சில சுவாரஸ்யமான கட்டுரைகள்

பெண்களைத் தொடர்புபடுத்தி நீண்ட காலமாகப் பேசப்படும் கன்னித்திரை பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக் கதைகள் பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்தக் கட்டுரை உதவும்

மனிதர்கள் இறப்பது ஏன்?

சாகாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் மனித குல வரலாற்றில் புதியது அல்ல. ஆனால், அதை நோக்கிய ஆய்வுகளில் காலந்தோறும் புதிய புதிய வெளிச்சங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில், சாகாமல் வாழ்வதற்கு உடலில் என்ன இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடையை வழங்கியிருக்கிறது ஹைட்ரா என்னும் நீர்வாழ் உயிரி.

மனித வாழ்வில் மறுபிறப்பு சாத்தியமா? அறிவியல் சொல்வது என்ன?

இது மாதிரி எகிப்தின் மக்கள் சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்னரே வலிமையான பிரமிடை அமைத்துப் பதப்படுத்தப்பட்ட இறந்த உடலைப் பாதுகாத்து வைத்துள்ளனர். இது மட்டுமல்ல நம் ஊர் தாழிகளிலும் பிரமிடுகளிலும் இறந்தவர்கள் உடலுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்துவைத்துள்ளனர். பண்டையகால மக்கள் ஏன் இப்படி இறந்தவர்கள் உடலைப் பாதுகாக்க வேண்டும்? உடலுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து ஏன் பாதுகாக்க வேண்டும்? இதற்கான காரணம் சுவாரஸ்யமானது. அவர்கள் மறுபிறவியில் நம்பிக்கை உடையவர்களாக இருந்துள்ளனர். இதுபற்றிய சுவாரஸ்யமான கட்டுரை.

அதிசயக் கிணறு; தோண்டத் தோண்ட மர்மம்

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே முதுமொத்தான் மொழி, ஆயன்குளத்தில் அதிசய கிணறு அமைந்துள்ளது. கடந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை காலங்களில் நொடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் கிணற்றுக்குள் சென்றது. அந்த கிணற்றுக்குள் பல நாட்களாக தண்ணீர் சென்றபோதும் அது நிரம்பவில்லை. இதையடுத்து அந்த இடத்தை 'அதிசய கிணறு' என உள்ளூர்வாசிகள் அழைத்தனர். அந்த கிணறு குறித்து ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வு நடத்தினர். இந்தக் கிணறு பற்றித் தெரிந்து கொள்ள

மனிதர்கள் ஏன் முத்தமிட்டுக் கொள்கிறார்கள்?

மனிதர்கள் ஒருவருக்கொருவர் முத்தமிடும்போது, அவர்களின் சுவாசம் ஆழமடைந்து சீரற்றதாக மாறும்; இதயத்துடிப்பு அதிகரிக்க தொடங்கும்; கண்கள் விரிவடையும். இது முத்தமிடும்போது பலரும் தங்கள் கண்களை மூடுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

முத்தமிடுவது பற்றி, ஒருவர் மூன்று விஷயங்களை தெரிந்துக்கொள்ளவேண்டும். அவை என்னென்ன என்பது பற்றித் தெரிந்து கொள்ள

உடல்நலம்: 100 ஆண்டுகள் வாழ என்ன செய்ய வேண்டும்?

ஜப்பானில் நூறு வயதைக் கடந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அங்கு வயதானவர்களின் விகிதம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உலகில் எல்லோராலும் நூறு ஆண்டுகள் வாழ முடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும். இந்தக் கட்டுரையைப் படியுங்கள்

1px transparent line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: