இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை ஆட்டம் பற்றி கூகுளின் சுந்தர் பிச்சை ட்விட்டர் பதிவு

பட மூலாதாரம், Getty Images
விராட் கோலி நீண்ட நாட்களாக ஃபார்மில் இல்லாமல் இருந்தது அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று இந்தியா, பாகிஸ்தான் ஆடிய டி20 உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி அந்தக் கவலைகள் அனைத்திற்கும் பதிலடி கொடுத்தார்.
சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து, தான் மீண்டும் ஃபார்முக்கு மீண்டுவிட்ட செய்தியை கோலி கிரிக்கெட் உலகுக்குத் தெரியப்படுத்தினார்.
இந்நிலையில், அக்டோபர் 23ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி ஆடிய ஆட்டத்திலும் கோலி தன்னுடைய உறுதியான ஆட்டத்தை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தார்.


இந்த ஆட்டத்தைக் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, "தீபாவளி வாழ்த்துகள்! தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அனைவரும் சிறப்பாக பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
நான் நேற்றைய ஆட்டத்தின் கடைசி மூன்று ஓவர்களை இன்று மீண்டும் பார்த்து பண்டிகையைக் கொண்டாடினேன். என்னவொரு போட்டி, என்னவொரு ஆட்டம்," என்று டீம் இந்தியா, டி20 உலகக் கோப்பை 2022 ஆகிய ஹேஷ்டேக்குகளோடு ட்விட்டரில் பதிவிட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
''நீங்கள் முதல் ஓவர்களை கட்டாயம் பார்க்க வேண்டும்'' என்று அதற்கு பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் பதிவிட்ட பின்னூட்டத்திற்கு, ''அதையும் பார்த்தேன். புவி மற்றும் அர்ஷ்தீப் எப்படி வீசினார்கள் என்பதையும் பார்த்தேன்' என்று அவர் பதிலளித்துள்ளார்.
அந்த ரசிகர் இந்தியா பேட் செய்த முதல் மூன்று ஓவர்களைக் குறிப்பிட்டார். ஆனால், சுந்தர் பிச்சை பாகிஸ்தான் பேட் செய்த முதல் மூன்று ஓவர்களைக் குறிப்பிட்டு பதிலளித்தது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவையும் பாராட்டையும் சமூக ஊடகங்களில் பெற்றுள்ளது.

பட மூலாதாரம், Quinn Rooney/Getty Images
நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால், அடுத்து ஆடிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேல் என்று முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர்.
இந்தியா 11வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. முகமது நவாஸ் வீசிய 12வது ஓவரில் இருந்து தான் இந்தியா ரன்களை பெரியளவில் அடிக்கவே தொடங்கியது.
தன்னோடு நின்ற ஹர்திக் பாண்ட்யாவோடு இணைந்து விராட் கோலி தனது ஆட்டத்தைத் தொடங்கினார். கிரிக்கெட் வரலாற்றிலும் கோலியின் வாழ்விலும் மறக்க முடியாத நாளாக நேற்றைய தினம் இருக்கும் அளவுக்கு அவருடைய ஆட்டம் இருந்தது.
இந்திய அணி ஆடிய கடைசி மூன்று ஓவர்களும் மிக முக்கியமானது. கிரிக்கெட் ரசிகர்களை, குறிப்பாக இந்திய ரசிகர்களை, தங்கள் அணி வெல்லுமா வெல்லாதா என்ற பதட்டத்தை வைத்திருந்த அதே நேரத்தில், வெற்றிக்கான தங்கள் இலக்கை நோக்கிய அதிரடியையும் பேட்ஸ்மேன்கள் காட்டிக் கொண்டிருந்தனர்.
கடைசி ஓவர் இரண்டு அணிகளுக்குமே சவாலாக அமைந்தது. ஒரு ஓவருக்கு 16 ரன்கள் என்ற நிலையில் கடைசி ஓவரை எதிர்கொண்டது இந்திய அணி. முதல் பந்தில் ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்து ஆட வந்த தினேஷ் கார்த்திக் விக்கெட்டும் ஐந்தாவது பந்தில் பறிபோனது.
இறுதி ஓவரின் இரண்டு பந்துகள் முடிந்திருந்த நிலையில் 4 பந்துகளுக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் பாகிஸ்தான் அணியும் பதற்றத்தில் நோ பாலும் வைட் பாலுமாக வீசிக் கொண்டிருந்தது. கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. மூன்றாவது பந்தில் இரண்டு ரன்களை மட்டுமே கோலியால் எடுக்க முடிந்தது.
ஆனால், அதற்கு அடுத்த பந்தில் கோலி சிக்சர் அடித்தார். அதேவேளையில் அந்த பந்து நோ பாலாகவே, பந்து செலவின்றி இந்தியாவுக்கு 7 ரன்கள் கிடைத்தன. பதற்றத்தில் இருந்த முகமது நவாஸ், மறுபடியும் 4வது பந்தை வைடாக வீசினார். பந்து செலவின்றி இந்தியாவுக்கு மீண்டும் ஒரு ரன்.
இப்படி இறுதி மூன்று ஓவர்களில் ஒவ்வொரு பந்தையும் பார்த்துப் பார்த்து செதுக்கி ஆடிய ஆட்டத்தில் இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி மயிர்க்கூச்செறியும் போட்டியாக இருந்தது. அத்தகைய ஒரு போட்டியின் முக்கியமான ஓவர்களைதான் மீண்டும் பார்த்து இன்று பண்டிகை நாளைக் கொண்டாடியதாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது பதிவில் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














