பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி அறிவிப்பு: காத்திருக்கும் சவால்கள் என்னென்ன?

ரோஜர் பின்னி

பட மூலாதாரம், ThE hindu

    • எழுதியவர், சுரேஷ் மேனன்
    • பதவி, விளையாட்டு எழுத்தாளர்

இவர் மிகவும் நல்லவர் எனக் கூறும் இவருடைய பல நண்பர்கள் இவரை 'ரோஜர் மைக்கேல் ஹம்ப்ரி பின்னி' என்று முழு பெயரில் அழைக்கவே விரும்புகிறார்கள்.

பல ஆண்டுகளாக இருந்த உறுதியற்ற தன்மை, பணக்கார விளையாட்டு நிர்வாகக் குழுவை சம்பந்தப்படுத்திய நீதிமன்ற வழக்குகள் போன்றவற்றுக்கு பிறகு, ரோஜர் பின்னி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக வருவது காலத்துக்கு ஏற்றது, மிகவும் அவசியமானது.

பிசிசிஐ தலைவராக அலுவல்பூர்வமாக இன்று தான் அறிவிக்கப்பட்டுள்ளார் ரோஜர் பின்னி. ஆனால், உள்ளூர் ஊடகங்களும் நிபுணர்களும் அவரை முன்னணியில் வைத்துப் பேசி வந்தனர்.

இயற்கையான திறமை கொண்ட விளையாட்டு வீரரான பின்னியை நான் முதன்முதலாக பள்ளி விளையாட்டுகளின் காலகட்டத்தில் சந்தித்தபோதே (ஹாக்கி, கால்பந்து, தடகளம்), தனக்கென ஒரு பெயரைப் பெற்றிருந்தார்.

நான் கர்நாடக மாநிலத்தின் மிகச் சிறந்த ஜூனியர் கிரிக்கெட் வீரர்கள், பல்கலைக்கழக நட்சத்திரங்களைக் (மற்றும் விளையாட்டின் எதிர்கால வீராங்கனைகள்) கொண்டிருந்த ஓர் அணிக்குள் இடம் பெற வேண்டும் என்ற நம்பிக்கையோடு, அப்போது கல்லூரி காலத்தில், தேர்வுக்கான சோதனை ஆட்டத்தில் இருந்தேன்.

அந்த ஆண்டு கல்லூரியில் சேர்ந்த பின்னியும் தேர்வுக்கு வந்திருந்தார். அது அவருக்கு அவசியமில்லை. அவர் ஏற்கெனவே ரஞ்சி கோப்பையில் கர்நாடகாவுக்காக பேட்டிங் ஆடியிருந்தார். அந்த அணிக்காக இரானி கோப்பையில் விளையாடியிருந்தார். இந்தியாவுக்காக விளையாடுவதற்கான வாய்ப்பு அவருக்கு மிக அருகிலேயே இருந்தது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

'இரானி கோப்பை' என்பது ரஞ்சி கோப்பையின் சாம்பியன்களுக்கும் மற்ற இந்திய மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த வீரர்களைக் கொண்ட அணிக்கும் இடையிலான போட்டி.

என் மீது தாக்கத்தை ஏற்படுத்திய அவருடைய பணிவும் கிரிக்கெட் நெறிமுறை குறித்த உணர்வும் அவரை விட்டு விலகவே இல்லை. இறுதியில், அவர் எங்களுக்காக விளையாடவில்லை. அவரை தங்களுக்காக விளையாட வைக்க முயன்று கொண்டிருந்த வங்கியுடனான ஒப்பந்தத்தில் அவர் இறுதியாகக் கையெழுத்திட்டார்.

ஒரு சர்வதேச, திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரராக, தேர்வாளராக, பயிற்சியாளராக, நிர்வாகியாக, ஒரு ஆல்-ரவுண்டராக, கிரிக்கெட் தான் அவருடைய எதிர்காலமாக இருந்தது.

பிசிசிஐயின் முந்தைய தலைவர் எவருக்கும் பின்னியின் தகுதி வரம்பு இல்லை. அவருடைய பதவி உயர்வு குறித்த செய்தியில் பல திருப்தி ஏற்படக் காரணமாக இருப்பது, ஓர் அடித்தட்டு மனிதர் உயர் பதவியைப் பெறுவது தான்.

1986ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த தொடரில் இந்தியா இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்றபோது (அதோடு அந்தத் தொடரில் 2-0 என வென்றபோது), திலீப் வெங்சர்க்கரின் பேட்டிங் மற்றும் பின்னியின் பந்துவீச்சு(முதல் இன்னிங்ஸில் 40 ரன்களுக்கு 5 விக்கெட்) அதற்குக் காரணமாக இருந்தது.

அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, உலகக் கோப்பையில் பின்னியின் 18 விக்கெட்டுகள் இந்தியா உலகக் கோப்பையை வென்றதில் முக்கியப் பங்கு வகித்தது. கொல்கத்தாவில்(அப்போது கல்கத்தா) பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் டிராவில் 56 ரன்களுக்கு 6 விக்கெட் எடுத்தார்.

1983 உலகக் கோப்பையில் பின்னியின் (வலமிருந்து இரண்டாவது) 18 விக்கெட்டுகள் இந்தியா பட்டத்தை வெல்வதில் முக்கியப் பங்காற்றியது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1983 உலகக் கோப்பையில் பின்னியின் (வலமிருந்து இரண்டாவது) 18 விக்கெட்டுகள் இந்தியா பட்டத்தை வெல்வதில் முக்கியப் பங்காற்றியது.

இந்தியாவின் விநோதமான சாதனைகளில் பின்னியுடையதும் ஒன்று

உள்நாட்டு கிரிக்கெட்டில், அவர் ஆற்றல் கொண்ட, நுணுக்கமான பேட்ஸ்மேனாக இருந்தார். சில நேரங்களில் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளில் சிக்ஸராக அடித்தார். இருப்பினும், சர்வதேச கிரிக்கெட்டில் அவர் தனது ஸ்விங் பெளலிங் மற்றும் கொஞ்சம் வழக்கத்திற்கு மாறான அதிரடி கொண்ட பந்து வீச்சாளராக இருந்தார்.

ரஞ்சி கோப்பையில் இரட்டை சதம், சஞ்சய் தேசாய் உடனான உடைக்கப்படாத பார்ட்னர்ஷிப்பில் எடுத்த 451 ரன்கள் தேசிய சாதனையாக இருந்தது. அவர் எங்கு விளையாடினாலும், அவர் அவுட்ஃபீல்டில் இருந்து தெளிவாகப் பந்தை வீசக்கூடிய ஃபீல்டராக இருந்தார்.

அவர் 27 டெஸ்ட் மற்றும் 72 சர்வதேச போட்டிகளில் விளையாடினார். மேலும், முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் அவருடைய பேட்டிங்கின் சராசரி ரன் விகிதம் 34 மற்றும் 205 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

அவருடைய சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் ஆட்டம் மிகுந்த அழுத்தத்திற்கு நடுவே வந்தது. மும்பையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஜூபிலி டெஸ்டில் அவர் இந்தியாவுக்காக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார்.

இரண்டு டெஸ்ட் வீரர்களை மட்டுமே பிசிசிஐ முழுநேர தலைவர்களாக அதன் 94 ஆண்டுகால வரலாற்றில் இருந்துள்ளனர். பின்னிக்கு முன்பாக இருந்த செளரவ் கங்குலி மற்றும் விஜயநகரத்தின் மகராஜ்குமார் (1954-56). ஷிவ்லால் யாதப், சுனில் கவாஸ்கர் தற்காலிகமாக சுருக்கமான காலகட்டத்திற்கு இருந்தனர்.

ரோஜர் பின்னி

பட மூலாதாரம், AFP

பின்னி பதவியேற்கும் போது அவரது தனிப்பட்ட வரலாறோ, கிரிக்கெட் வாரியத்தின் வரலாறோ அவர் மீது பெரிய சுமையை வைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.

அதன் அனைத்து உள் அரசியல், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் அதன்மீது காட்டும் சிறப்பு ஆர்வம் மற்றும் சமீப ஆண்டுகளில் நிர்வாகக் குழுவின் சந்திப்பு அறைகளில் நடக்கும் விசித்திரமான நிகழ்வுகளால் ஆகியவற்றால் தேசிய கிரிக்கெட் அணிகள், சமீப ஆண்டுகளில் அவ்வப்போது பாதிக்கப்பட்டுள்ளன.

விளையாட்டில் மிகவும் செல்வாக்கு மிக்க தேசிய வாரியமாக, இந்தியா என்ன நினைக்கிறது, சொல்கிறது என்பது உலகளவில் விளையாட்டை வடிவமைக்கும்.

இங்குதான் பின்னியின் மிகப்பெரிய சவால் உள்ளது. அவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கும் சிவப்புப் பந்து கிரிக்கெட்டுக்கும் இடையே, முந்தையதன் மிகைப்படுத்திவிடாமல், பிந்தையதன் முக்கியத்துவத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் வகையிலான ஒரு பாதையை வடிவமைக்க வேண்டும்.

உள்நாட்டில் முதல் தர கிரிக்கெட், பெண்கள் கிரிக்கெட் செழித்து வளர்வதை அவர் உறுதி செய்ய வேண்டும். மேலும், இங்கும் கீழ் மட்டத்தில் உள்ள வீரர்கள் விளையாட்டைத் தொடர்ந்து விளையாடுவது நிதிரீதியாக பயனுள்ளதாக இருக்கும் வகையிலும் செய்ய வேண்டும்.

ரோஜர் பின்னி

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, பின்னி(வலது) உலகக் கோப்பையை வென்ற அணியினரான கபில் தேவ், சுனில் கவாஸ்கர், சையத் கிர்மானியுடன்

பிசிசிஐயின் கட்டமைப்பானது, உண்மையான அதிகாரம் செயலாளரிடம் உள்ளது. தலைவரின் பணி, இலக்கைத் தீர்மானிப்பதைவிட அதை அடைவதற்கான பாதையை வகுத்துச் செல்வதாக இருக்கும்.

பின்னியின் கிரிக்கெட் திறமை, அவருடைய அணியில் விளையாட்டில் எந்தப் பின்னணியும் இல்லாமல் வந்திருப்பவர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யலாம் அல்லது செய்யாமலும் இருக்கலாம். அது அவர் கவனிக்க வேண்டிய மற்றுமொரு சமநிலைக்குரிய சவால்.

அவரிடம் உள்ள பல நல்ல விஷயங்களில், மிக கடினமான சூழ்நிலையை அவர் அமைதியாக கையாளும் விதமும், மக்களை ஒன்றிணைந்து செயல்பட வைக்கும் திறனும் மிக முக்கியமானவை.

'நல்லவர்கள்' சில நேரங்களில் கெட்டவர்களின் வடிவமைப்புகளை முறியடிக்க வேண்டும். ரோஜர் பின்னி அதை எவ்வளவு சிறப்பாகச் செய்கிறார் என்பது அவருடைய மரபைத் தீர்மானிக்கும்.

Banner
காணொளிக் குறிப்பு, இந்தியா-பாகிஸ்தான்: நம்பிக்கை நாயகனாக மாறி வரும் ஹர்திக் பாண்டியா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: