இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாறு: ஒரே வீரர் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் விளையாடிய தருணம்

அமீர் இலாஹி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமீர் இலாஹி (இடது)

இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதம். அண்டை நாடான பாகிஸ்தானிலும் கிரிக்கெட் மீது அபாரமான மோகம் உள்ளது. களத்தில் இரு நாட்டு அணிகளும் மோதிக் கொள்ளும் போதெல்லாம், கடும் பரபரப்பு நிலவுகிறது.

தேசியவாதம் வளர்கிறது. இரண்டு நாடுகளுக்கிடையே போட்டியில் ஏற்படும் வெற்றி தோல்வி நாடுகளுக்கு இடையிலான வெற்றி தோல்வி போலவே பார்க்கப்படுகிறது. இப்போது இப்படியென்றால், 75 ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

75 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் இல்லை. இன்று பாகிஸ்தானின் அங்கமாக இருக்கும் பகுதிகள் அப்போது இந்தியாவின் அங்கமாக இருந்தன. அப்போது இந்தியா என்ற ஒரேயொரு கிரிக்கெட் அணிதான் இருந்தது.

இந்தியா 1932ஆம் ஆண்டிலேயே டெஸ்ட் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியது. முப்பதுகளில், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திலும் உள்நாட்டிலும் பல டெஸ்ட் தொடர்களை விளையாடியது. ஆனால் இந்தியா எந்தப் போட்டியிலும் வெற்றி பெற்றதில்லை.

தேசப் பிரிவினைக்குப் பிறகு நிலைமை மாறியது. ஒன்றாக இருந்த அணி இரண்டாகப் பிரிந்தது. இந்திய அணியின் பல வீரர்கள் பாகிஸ்தான் சென்றனர். ஒரு காலத்தில் ஒன்றாக விளையாடிய வீரர்கள் ஒருவருக்கொருவர் போட்டியாளர்களாக மாறினர்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

அத்தகைய ஒரு வீரர்தான் அமீர் இலாஹி. பரோடா அணிக்காக விளையாடி வந்தார். அப்போது பரோடா அணி, இந்திய கிரிக்கெட் அணியாகவே இருந்தது.

பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் சென்றார் இலாஹி

ஆனால் நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, அமீர் இலாஹி பாகிஸ்தானுக்குச் செல்ல முடிவு செய்தார். அவர் தனது குடும்பத்துடன் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார்.

அமீர் தனது புதிய நாட்டிற்குச் சென்றிருந்தார். அவருடைய பழைய அணி அவரை விட்டுப் பிரிந்தது. பின்னர் இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனி அணிகளை உருவாக்கின.

அமீர் இலாஹியின் பேரன் மனன் அகமது தற்போது அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். கனிஷ்க் தரூர் பிபிசிக்காக அவரிடம் பேசினார்.

தனது தாத்தா அமீர் இலாஹி மிகப் பெரிய கிரிக்கெட் வீரர் அல்ல என்று மனன் கூறினார். விளையாட்டு மைதானத்தில் பெரிய வெற்றிக் கொடிகளை அவர் நாட்டியதில்லை என்றும் ஒரு சராசரி வீரராகவே இருந்ததாகவும் அவர் கூறுகிறார். ஓரளவு பந்துவீசுவதுடன் வாய்ப்புக் கிடைக்கும்போது பேட்டிங் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தவர். மொத்தத்தில், அவர் அணியின் சாதாரண வீரர் மட்டுமே.

भारत-पाक मैच

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1952, அக்டோபர் 20 அன்று எடுக்கப்பட்ட படம். இந்திய அணியின் பங்கஜ் ராய் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் முகமது கானின் பந்தை புது டெல்லியில் எதிர்கொண்ட தருணம்

ஆனால், அமீர் இலாஹி பாகிஸ்தானின் தீவிர ஆதரவாளராக இருந்ததாக மனன் கூறுகிறார். அதனால்தான் நாடு பிளவுபட்டபோது அணியை விட்டு வெளியேறி பாகிஸ்தான் சென்றார். பின்னர் பாகிஸ்தான் அணியிலும் தேர்வு செய்யப்பட்டார்.

அமீர் இலாஹியின் செயல்பாடு

1953 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி முதல் முறையாக பாரதம் வந்தது. இந்த சுற்றுப்பயணத்தில் அமீர் இலாஹியும் வந்தார். இங்கே அவர் தனது பழைய அணி வீரர்களைச் சந்தித்தார். எல்லா நினைவுகளும் புத்துணர்ச்சியடைந்தன. ஆனால் பாகிஸ்தான் அணியின் இந்த முதல் இந்தியச் சுற்றுப்பயணத்தில் கூட, அந்தந்த நாடுகளின் வெற்றியின் உற்சாகம் அளப்பரியதாக இருந்தது.

முதல் சுற்றுப்பயணத்தில் இந்தியக் கிரிக்கெட் அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்த வேண்டும் என்று அமீர் இலாஹியும் விரும்பியதாக மனன் அகமது கூறுகிறார். எனினும் இது நடக்கவில்லை. அந்தத் தொடரில் இந்தியா வென்றது. அமீர் இலாஹியின் செயல்பாடும் சிறப்பாக இல்லை.

பிற்காலத்திலும், அமீர் இலாஹி தனது நாட்டில் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று விரும்பினார்.

विजय हज़ारे

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1952 டெஸ்ட் போட்டியில், விஜய் ஹசாரே பேட்டிங்

மனன் தனது குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்து, கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, பாட்டி தனக்கு விளையாட தாத்தாவின் கிட்டைக் கொடுத்ததாகக் கூறுகிறார். ஆனாலும் மனன் அதைப் பயன்படுத்தவில்லை.

மனன் அகமது தனது தாத்தா அமீர் இலாஹியின் ஸ்வெட்டரை அணிந்திருந்தார். அவர் அந்த நாளை நினைவு கூர்ந்து தாத்தாவின் ஸ்வெட்டரை அணிந்திருப்பது மிகவும் நன்றாக இருந்தது என்று கூறுகிறார். அணியின் மிகச் சிறந்த வீரர் அவர் தான் என்று தனக்குத் தோன்றியதாகக் கூறினார்.

மியூசியமும் அமைக்கப்படவில்லை பொருட்களும் கிடைக்கவில்லை

அமீர் இலாஹி தனது கிரிக்கெட் விளையாடும் உபகரணங்களை நிறைய சேகரித்து வைத்திருந்தார். ஒருமுறை தன்னை ஒருவர் சந்தித்து, லாகூரில் கிரிக்கெட் மியூசியம் ஒன்று திறக்கப்படவிருப்பதாகக் கூறியதையடுத்து அமீர் இலாஹி தன்னிடம் இருந்த பல பொருட்களை அவரிடம் கொடுத்தார். அவற்றைப் பெற்றுக்கொண்ட அந்த மனிதர் பிறகு காணாமலே போய்விட்டார். மியூசியமும் திறக்கப்படவில்லை. பொருட்களும் கிடைக்கவில்லை. அந்த மனிதரையும் காணவில்லை.

இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம், AFP

ஒருவேளை அந்தப் பொருட்கள் கறுப்புச் சந்தையில் விற்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார் மனன்.

தற்போது மனன் அகமது அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். தாத்தாவின் நினைவுகள் இன்னும் அவர் மனதில் பசுமையாகப் பதிந்துள்ளன.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு கிரிக்கெட் வெகுதூரம் முன்னேறியுள்ளது. இரு நாடுகளும் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றுள்ளன. பரஸ்பர போட்டியில் கூட, சில நேரங்களில் ஒரு அணியும் சில நேரங்களில் எதிர் அணியும் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

ஆனால், இன்றும் இரு நாட்டு வீரர்களும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகக் கருதப்படும் நிலையில், ஒரு காலத்தில் ஒரே நாட்டிற்காகவும் ஒரே அணிக்காகவும் வீரர்கள் விளையாடியுள்ளார்கள் என்பது சுவாரஸ்யமானது.

சிவப்புக் கோடு
காணொளிக் குறிப்பு, 'பாகுபலி' சவால் - 30 வகை உணவுகளை 30 நிமிடங்களில் சாப்பிட்டால் ஒரு லட்சம் பரிசு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :