இந்தியா Vs நமீபியா டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடந்தது என்ன? ஐபிஎல் Vs ஐசிசி தொடர் விவகாரம் முற்றுகிறதா?

நமீபிய கிரிக்கெட் அணியை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.

பட மூலாதாரம், Alex Davidson / getty images

படக்குறிப்பு, நமீபிய கிரிக்கெட் அணியை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.
    • எழுதியவர், விவேக் ஆனந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பைத் தொடரில் அரை இறுதிக்கு தகுதி பெறவில்லை; கத்துக்குட்டியாக வலம்வரும் நமீபியா அணிக்கு எதிராகத்தான் நேற்றைய ஆட்டம் நடந்தது.

பலருக்கும் வேலைநாளான திங்கள்கிழமை மாலையில்தான் போட்டி நடந்தாலும் இந்திய அணியின் ஆட்டத்தை பார்க்க ஆர்வம், அப்படியொன்றும் குறைந்துவிடவில்லை.

அதற்குக் காரணம், இது விராட் கோலி தலைமையில் இந்தியா விளையாடும் 50வது சர்வதேச டி20 போட்டி என்பது மட்டுமல்ல, உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் முக்கியமானவராகக் கருதப்படும் விராட் கோலி தலைமையில் இந்திய அணி விளையாடும் கடைசி டி20 போட்டி என்பதே.

டாஸ் வென்றார் விராட் கோலி. பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக ராகுல் சாஹர் விளையாடுவார் என்றார். ''இந்திய அணிக்கு தலைமை தாங்குவது எனக்கு கிடைத்த பெரும் கவுரவம்; இந்த வாய்ப்புக்கு நன்றியுள்ளவனாக இருந்தேன்; என்னால் முடிந்ததைச் செய்தேன்'' என போட்டி தொடங்கும் முன் பேசினார்.

போட்டி தொடங்கியது. நமீபியாவால் 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. தொடக்க வீரர் ரோகித் ஷர்மா விக்கெட் விழுந்தபோது, அடுத்ததாக விராட் கோலி களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க, சூர்யகுமார் யாதவ் களமிறங்கினர்.

அதன்பின்னர் விராட் கோலி களமிறங்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. 28 பந்துகள் மீதம்வைத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

தொடக்க வீரர்கள் ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல் இருவருமே அரைசதம் விளாசினர். இந்த போட்டியின் சுருக்கம் இதுதான்.

பயன்படாத ரன்ரேட்

virat kohli

பட மூலாதாரம், Getty Images

2021 டி20 உலகக்கோப்பைத் தொடரில் சூப்பர் 12 சுற்றில், குரூப் 2-ல் இடம்பெற்றிருந்த இந்திய அணிதான் அந்தப் பிரிவில் அதிக ரன்ரேட் பெற்றுள்ளது. அதாவது +1.747.

உண்மையில் குரூப் 12 சுற்றில், விளையாடிய 12 அணிகளில் அதிகபட்ச ரன்ரேட் பெற்றிருக்கும் இரண்டாவது அணி இந்தியாதான். முதலிடத்தில் இங்கிலாந்து அணி இருக்கிறது. இரண்டு போட்டிகளில் படுதோல்வியைச் சந்தித்தும் மீதமுள்ள 3 போட்டிகளின் மூலம் அபார ரன்ரேட் பெற்றிருக்கிறது இந்திய அணி.

ஆனால், இந்த விவரம் எல்லாம் இனி தேவை இல்லை. ஏனெனில், குரூப் 1-ல் அரைஇறுதி வாய்ப்பு யாருக்கு என்பதை ரன்ரேட்தான் நிர்ணயித்தது. குருப் 2-ல் அதற்கு அவசியமேதும் ஏற்படவில்லை.

குரூப் 1-ல் தென்னாப்ரிக்க அணி, தான் விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கில் வென்றிருந்தது. ஒரே ஒரு தோல்விதான். அதுவும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வியடைந்த, அந்த போட்டியில் கடைசி ஓவரில்தான் தோற்றது. ஆனால் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்திடம் படுமோசமாக 12வது ஓவரிலேயே தோல்வியடைந்தது. தலா எட்டு புள்ளிகளை பெற்றிருந்த ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா ஆகிய அணிகளில் அதிக ரன்ரேட் பெற்றிருந்த ஆஸ்திரேலியா அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

விளையாடிய ஐந்து போட்டிகளில், நான்கில் வென்றும் ஒரு போட்டியில் கடைசி ஓவர் வரை ஆட்டத்தை நகர்த்தியும் சென்ற, தென்னாப்ரிக்க அரைஇறுதிக்கு முன்னரே தனது நாட்டுக்கு மூட்டை முடிச்சைக் கட்டவேண்டிய சூழல் ஏற்பட்டது.

தென்னாப்ரிக்க அணி அளவுக்கு இந்தியாவுக்கு பரிதாபகரமான நிலை ஏதும் ஏற்படவில்லை.

இந்திய அணி தனது முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளிடம் படுதோல்வி அடைந்தபோதே இந்திய அணியின் அரை இறுதி கனவு கிட்டதட்ட தகர்ந்தது.

எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை இந்திய அணிக்கும் நூலிழையில் ஒரு வாய்ப்பு இருந்தது.

உண்மையில், இந்தியா - நமீபியா போட்டியை விடவும் ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டிக்குத்தான் அதிக எதிர்பார்ப்பு நிலவியது.

முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான், நியுசிலாந்து அணிகளிடம் இந்தியா தோற்றது.

பட மூலாதாரம், MICHAEL STEELE-ICC

படக்குறிப்பு, முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான், நியுசிலாந்து அணிகளிடம் இந்தியா தோற்றது.

ஆனால், நியூசிலாந்து அணி நேர்த்தியாக அந்தப் போட்டியை வெல்ல, இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது.

ஐபிஎல் மீது விமர்சனம் ஏன்?

விராட் கோலி அணித் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் இந்திய அணி அயல் மண்ணில் குறிப்பாக ஆசியாவுக்கு வெளியே அபாரமான சாதனைகளை படைத்து வருகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்ரிக்க மண்ணில் டி20 தொடர்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. குறிப்பாக நியூசிலாந்தில் அந்த அணியை 5-0 என ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் உலகக்கோப்பை டி20 தொடர் இது என்பதால், இந்தியாவை கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாகவே கிரிக்கெட் நிபுணர்கள் கருதினர். ஆனால் இந்திய அணி அரை இறுதிக்குக் கூடத் தகுதி பெறாமல் வெளியேறுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பை தொடரில் அரை இறுதிக்குக் கூட தகுதி பெறாமல் வெளியேறுவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே மகேந்திர சிங் தோனி தலைமையில் விளையாடியபோது 2009, 2010, 2012 உலகக்கோப்பை டி20 தொடர்களிலும் அரைஇறுதிக்கு தகுதிபெறவில்லை.

பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர், சர்வதேச அளவில் பணக்கார கிரிக்கெட் லீக்-களில் ஒன்றாகும்.

ஐபிஎல் தொடர் என்பது சர்ச்சைகளுக்கு அப்பால், இளம் வீரர்களை வார்த்தெடுப்பதும், சர்வதேச வீரர்களுடன் விளையாடும் அனுபவம் இந்தியாவின் இளம் வீரர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதும் இதன் முக்கியமான அம்சமாக பார்க்கப்பட்டது.

டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் முதல் உலகக்கோப்பையை வென்றது இந்தியாதான்.

2007-ல் அது நடந்தது. அதன்மூலம் மகேந்திர சிங் தோனி என்ற பெயர் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பரவியது.

ஐபிஎல் vs ஐசிசி

ஐபிஎல் தொடர் 2008-ல் துவங்கியது. ஆனால் அதன்பின்னர் இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்லவே இல்லை. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமெனில் ஒருமுறை மட்டுமே இறுதிப்போட்டி வரை வந்தது.

பன்னாட்டு வீரர்களுடன் இந்தியாவின் இளம் வீரர்கள் விளையாடுவதற்கான நல்வாய்ப்பாக ஐபிஎல் பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், IPL/BCCI

படக்குறிப்பு, பன்னாட்டு வீரர்களுடன் இந்தியாவின் இளம் வீரர்கள் விளையாடுவதற்கான நல்வாய்ப்பாக ஐபிஎல் பார்க்கப்படுகிறது.

இந்த முரண், ஐபிஎல் vs ஐசிசி தொடர் எனும் விவாதத்துக்கு வழிவகுக்கத் தொடங்கி இருக்கிறது.

சமூக வலைத்தளங்களின் ரசிகர்கள் இது தொடர்பாக தங்களது கருத்துகளை பதிவிடத் துவங்கி இருக்கிறார்கள்.

ஐபிஎல்லா ஐசிசி தொடரா? வீரர்களுக்கு எது முக்கியம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மற்றும் இந்திய அணி வீரர் மதன்லால் உள்ளிட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, கோலி, ரோகித் ஷர்மா, பும்ரா உள்ளிட்டட நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையில் ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி இலங்கை மண்ணில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது அப்போது இந்திய அணி டி20 தொடரில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நான்காவது டெஸ்ட் போட்டியை இந்தியா வென்றது, அப்போது இந்திய அணி 2-1 என தொடரில் முன்னிலை வகித்தது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செப்டம்பர் 10 -14 தேதிகளில் நடக்கவிருந்தது.

ஆனால், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்டவர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதையடுத்து,

இந்திய அணி முகாமில் கோவிட் பரவல் அச்சத்தை கருத்தில் கொண்டு இந்திய அணியால் விளையாட முடியாத சூழலால் போட்டி ரத்து செய்யப்படுகிறது எனும் அறிவிப்பு, ஐந்தாவது டெஸ்ட் போட்டி தொடங்கவிருந்த நேரத்தில் வெளிவந்ததது.

2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாகம் செப்டம்பர் 19-ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்டில் தொடங்கவிருந்தபோது, தனி விமானத்தில் கோலி உள்ளிட்ட சில வீரர்களை ஐபிஎல் அணி நிர்வாகங்கள் இங்கிலாந்தில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு அழைத்துச் சென்றதாக செய்திகள் வெளியானது, சர்ச்சையைக் கிளப்பியது.

வெற்றியை ருசிக்காமல் வெளியேறும் தலைமை

நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் உடன் விராட் கோலி

பட மூலாதாரம், ALEX DAVIDSON / Getty Imag

படக்குறிப்பு, நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் உடன் விராட் கோலி

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு மூன்று நாட்கள் முன்பு, அதாவது செப்டம்பர் 16-ம் தேதி 2021 உலகக்கோப்பை டி20 தொடரோடு டி20 ஃபார்மெட்டில் இந்திய அணியின் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக விராட் கோலி அறிவித்தார். சில நாட்களில் இந்த சீசனோடு, ஐபிஎல்லில் ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகுகிறேன் என கோலி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

கோலி தலைமையிலான ஆர்சிபி அணி பிளே ஆஃபோடு வெளியேற, இந்திய அணி அரை இறுதிக்கே தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது.

விராட் கோலி இந்திய அணியின் அணித் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து நான்கு ஐசிசி தொடர்களில் தலைமை தாங்கியுள்ளார். இவற்றில் பெரும்பாலும் நியூசிலாந்து அணி தொடர்ந்து இந்திய அணியின் கோப்பை கனவை தவிடுபொடியாக்கி வருகிறது.

2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றது இந்தியா.

2019-ல் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அரை இறுதியில் நியூஸிலாந்திடம் மண்ணை கவ்வியது.

2021-ல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றது.

2021 டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைய, நாக்அவுட் போட்டி போல நியூசிலாந்துடனான ஆட்டம் கருதப்பட்ட நிலையில், அந்த போட்டியிலும் நியூசிலாந்துடன் தோற்றது இந்திய அணி.

அடுத்த டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டே ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறவுள்ளது. புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய டி20 அணியின் அடுத்த அணித்தலைவர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :