தேவேந்திர ஜஜாரியா: டோக்யோவில் மூன்றாவது தங்கத்தைக் குறிவைக்கும் உலக சாதனையாளரின் ஈட்டி

பட மூலாதாரம், Getty Images
பாராலிம்பிக் போட்டி தடகள பிரிவில் இந்தியா சார்பாக முதல் தங்கப் பதக்கம் வென்றவர் என்ற பெருமையுடன் உலக சாதனையை தக்க வைத்துக் கொண்டிருக்கும் தேவேந்திர ஜஜாரியா டோக்யோவில் மூன்றாவது தங்கத்தைக் குறி வைத்திருக்கிறார்.
ஏதென்ஸ் பாரலிம்பிக் போட்டியில் முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்றபோது அவருக்கு வயது 23. அதன் பிறகு 12 ஆண்டுகள் கழித்து 2016 ரியோ ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கப் பதக்கம் வென்றார்.
இப்போது அவருக்கு 40 வயதாகிறது. இன்றும் புதிய உலக சாதனையைப் படைக்க வேண்டும் என்ற அதே முனைப்புடன் டோக்யோவுக்குச் சென்றிருக்கிறார்.
வாழ்வைப் புரட்டிய நிகழ்வு
ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தேவேந்திர ஜஜாரியா. 8 வயதாக இருந்தபோது அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட அந்தச் சம்பவம் நடந்தது.
தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஜஜாரியா ஒரு மரத்தில் ஏறியபோது, தவறுதலாக உயர் மின் அழுத்தக் கம்பியைத் தொட்டுவிட்டார். மயங்கி விழுந்த அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால் இடது கையை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறிவிடவே, கனத்த இதயத்துடன் அதை ஜஜாரியாவின் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டனர். ஒலிம்பிக்ஸ்.காம் இணையதளம் இந்த நிகழ்வைப் பதிவு செய்திருக்கிறது.
கையை இழந்த பிறகும் தனது கனவுகளை ஜஜாரியா விட்டுவிடவில்லை. மற்ற விளையாட்டு வீரர்களைப் போலவே மிகக் கடுமையாகப் பயிற்சிகளை மேற்கொண்டார். விமர்சனங்களையும் கேலிப் பேச்சுகளையும் புறந்தள்ளினார். இன்று அவர்தான் இந்தியாவின் மிக வெற்றிகரமான பாரலிம்பிக் விளையாட்டு வீரர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
2004-ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் முதல் முறையாகப் பங்கேற்ற ஜஜாரியா அதில் 62.15 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து உலக சாதனை படைத்தார். அதற்கு முன்பு 59.77 மீட்டர் தொலைவு ஈட்டி எறியப்பட்டதை உலக சாதனையாக இருந்தது. இந்தச் சாதனை மூலம் இந்தியாவுக்கு பாராலிம்பிக் தனிநபர் போட்டிகளில் முதல் தங்கப் பதக்கம் வென்ற நபர் என்ற பெருமையைப் பெற்றுக் கொடுத்தார் ஜஜாரியா.
பாராலிம்பிக்கில் ஜஜாரியா பங்கேற்பது F-46 என்ற பிரிவு. இதில் எஃப் என்பது ஃபீல்ட் அதாவது களப் பிரிவு என்பதையும 46 என்பது ஒரு கை இல்லாதவர்கள் என்பதையும் குறிக்கக் கூடியது. ஏதென்ஸ் போட்டியில் பங்கேற்ற பிறகு, பெய்ஜிங்கிலும், லண்டனிலும் நடந்த பாரலிம்பிக் போட்டிகளில் எஃப்-46 பிரிவு சேர்க்கப்படவில்லை. அதனால் புதிய சாதனையைப் படைப்பதற்கு ஜஜாரியா 12 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
ரியோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய தேசியக் கொடியை ஏந்தி அணியை வழிநடத்தும் பெருமை அவருக்கு ஜஜாரியாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. எதிர்பார்த்தபடியே ரியோ பாராலிம்பிக்கிலும் மிகச் சிறப்பாக ஈட்டி எறிந்தார் ஜஜாரியா.
இந்த முறை 63.97 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தனது முந்தைய உலக சாதனையை முறியடித்தார். இன்று வரை F-46 ஈட்டி எறியும் பிரிவில் இதுதான் உலக சாதனை.

பட மூலாதாரம், Getty Images
இந்தச் சாதனைக்காக இந்திய விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ஜஜாரியாவுக்கு வழங்கப்பட்டது.
புதிய உலக சாதனைக்கு வாய்ப்பு
பெரும்பாலான விளையாட்டு வீரர்களைப் போலவே கொரோனா பொதுமுடக்கத்தால் ஜஜாரியாவின் பயிற்சியும் பாதிக்கப்பட்டது. சில விளையாட்டுகளைப் போல வீட்டில் இருந்தபடியே பயிற்சி எடுப்பதும் சாத்தியமில்லை. ஆயினும் இந்தத் தடைகள் எதுவும் அவரது திறனை சிறிதும் குறைத்துவிடவில்லை.
அண்மையில் பாராலிம்பிக் போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வின் போது இது வெளிப்பட்டது. இந்தப் போட்டியின் போது 65.71 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து வியப்புக்குள்ளாக்கினார் ஜஜாரியா. இது ரியோ ஒலிம்பிக்கில் அவர் எறிந்ததை விட சுமார் 2 மீட்டர் அதிகம்.
ஜஜாரியாவைப் போலவே ஈட்டி எறிதல் போட்டிகளில் அஜீத் சிங், சுந்தர் சிங் குர்ஜார் ஆகியோரும் பஙகேற்கிறார்கள். இவர்கள் தவிர சந்தீப் சவுத்ரி மற்றும் சுமித் அன்டில் ஆகியோர் F64 ஈட்டி எறிதல் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு காலில் குறைபாடு இருப்போர்களுக்கான பிரிவு இது.
இவர்கள் தவிர உயரம் தாண்டுதலில் ரியோவில் தங்கம் வென்ற தமிழ்நாட்டின் மாரியப்பன் தங்கவேலு உள்பட 54 பேரைக் கொண்ட குழு டோக்யோவை முற்றுகையிட்டிருக்கிறது. இதுவரையில் அனுப்பப்பட்ட குழுவில் இதுவே மிக அதிக எண்ணிக்கையிலான வீரர்களைக் கொண்டது.
5 தங்கப் பதக்கம் உள்பட குறைந்தது 15 பதக்கங்களை இந்தியா வெல்லும் என்ற இந்திய நிர்வாகிகள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
ஆகஸ்ட் 24 -ஆம் தேதி முதல் செப்டம்பர் 5-ஆம் தேதி வரை 22 விளையாட்டுகளைக் கொண்ட பாராலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன. பேட்மிண்டனும், டேக்வாண்டோவும் முதல்முறையாக இதில் அறிமுகமாகின்றன.
ஒலிம்பிக் போட்டிகளைப் போன்று பாராலிம்பிக் போட்டிகளுக்கு ஓரளவுக்குக் கூட முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்ற புகார் நீண்ட காலமாகவே இருக்கிறது.
உதாரணத்துக்கு டோக்யோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை நாடே கொண்டாடியது. அத்தகைய சாதனையை 17 ஆண்டுகளுக்கு முன்பே படைத்தவர் தேவேந்திர ஜஜாரியா. ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே பாராலிம்பிக் போட்டிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கையை அவரது சாதனைகள் நினைவுபடுத்துகின்றன.
பிற செய்திகள்:
- ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி தப்புவதற்கு அமீரகத்தை தேர்வு செய்தது ஏன்? தாலிபன்கள் விட்டுவிடுவார்களா?
- பாஜகவின் 'அருந்ததியர்' அரசியல்: கொங்கு மண்டல கணக்கால் திமுக, அதிமுக அதிர்ச்சியா?
- மனம் பதற்றமாகி இதயத்துடிப்பு அதிகரிக்கும்போது என்ன செய்ய வேண்டும்? - நிபுணரின் விளக்கம்
- சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சிறுவனுக்கு மாரடைப்பு: ரூ.1.25 கோடி நிதியுதவி
- தடுப்பூசி போட்டுக் கொள்வதைவிட கொரோனா வருவதே நல்லதா? முக்கிய கேள்விகள், ஆழமான பதில்கள்
- உங்கள் பணத்தை எந்தெந்த வழிகளில் சேமிக்கலாம் - ஆனந்த் ஸ்ரீநிவாஸன் ஆலோசனை
- அலைபேசி ஆபத்து: சமூக ஊடகங்களுக்கு அடிமை ஆனவர்கள் மீள்வது எப்படி?
- இன்கா நாகரிகம்: ஆன்மிகம், ஆவியுலகம், நம்பிக்கை துரோகத்தை அனுபவித்த வரலாறு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












