டோக்யோ ஒலிம்பிக்: மேரி கோமின் தோல்விக்காக இந்தியா ஏன் வருந்துகிறது? இது இவரது கடைசி ஒலிம்பிக்கா?

மேரி கோம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், வந்தனா
    • பதவி, பிபிசி இந்தி

கடந்த ஒன்பது ஆண்டுகளாக மேரி கோமுக்கு ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே இருந்தது. இரண்டு முறை குத்துச்சண்டையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையைப் பெற வேண்டும்.

2012, லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு டோக்யோவிலும் வெல்ல அவர் கடுமையாக உழைத்து வந்தார். ஆனால் இன்று அவர் கொலம்பியாவைச் சேர்ந்த போட்டியாளரிடம் தோற்று ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார்.

இந்த ஒலிம்பிக் தோல்வி அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும், குத்துச்சண்டை உலகில் அவரது சாதனைகள் ஒலிம்பிக்கையும் கடந்த புகழ் நாட்டி பறந்து கொண்டிருக்கிறது.

அவரது வயது 38. உயரம் ஐந்து அடி இரண்டு அங்குலம். ஆனால் அவரது துணிச்சலுக்கும் மன உறுதிக்கும் எல்லையே இல்லை.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த மன உறுதியின் துணையுடன் சாதனை மேல் சாதனையாகச் செய்து வருகிறார். டோக்கியோ ஒலிம்பிக் இந்த பயணத்தின் ஒரு மைல்கல்.

மேரியின் வாழ்க்கை வரலாறு, அனைத்துச் செய்தித்தாள்களிலும் காட்சி ஊடகங்களிலும் இடம் பிடித்துள்ளன. ஒரு திரைப்படம் கூட வெளியாகியுள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் புதிதாக ஒரு சாதனையைச் செய்து, புதிதாக எழுதத் தூண்டுகிறார்.

உலக குத்துச்சண்டை சாம்பியன், ஒலிம்பிக் சாம்பியன், நாடாளுமன்ற உறுப்பினர், குத்துச்சண்டை அகாடமி உரிமையாளர், தாய் மற்றும் மனைவி என மேரி கோம் ஒரே நேரத்தில் பல பாத்திரங்களை ஏற்றுத் திறம்பட செயலாற்றுகிறார்.

மேரி கோம்

பட மூலாதாரம், Getty Images

அவர் 'அயர்ன் லேடி' என்று அழைக்கப்படுவதில் வியப்பொன்றுமில்லை. குத்துச்சண்டையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் இவர். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் பெற்றார்.

2001 ஆம் ஆண்டில் முதல் உலக சாம்பியன்ஷிப்பை வென்றார், அதன் பின்னர் 2019 வரை, உலக சாம்பியன்ஷிப்பில் மொத்தம் எட்டு பதக்கங்களை வென்றுள்ளார்.

அவர் குத்துச்சண்டை வளையத்திற்குள் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் பல சிரமங்களை எதிர்கொண்டார்.

2011 ஆம் ஆண்டில், மேரி கோமின் மூன்றரை வயது மகனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அதே நேரத்தில், மேரி கோம் சீனாவில் நடைபெறும் ஆசிய கோப்பைக்கும் செல்ல வேண்டியிருந்தது. முடிவெடுப்பது கடினமாக இருந்தது.

இறுதியில் மேரி கோமின் கணவர் ஒன்லர் மகனுடன் தங்கியிருந்தார், மேரி கோம் ஆசிய கோப்பைக்குச் சென்று தங்கப் பதக்கம் வென்றார்.

மணிப்பூரில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த மேரி கோமின் குடும்ப உறுப்பினர்கள் அவர் குத்துச்சண்டைக்குச் செல்வதை விரும்பவில்லை. ஒரு குழந்தையாக, மேரி கோம் வீட்டு வேலைகளைச் செய்து வயல் வேலைகளையும் செய்து வந்தார்.

உடன்பிறந்தவர்களைக் கவனித்துக் கொண்டு இடையே பயிற்சியும் செய்து வந்தார்.

மேரி கோம்

பட மூலாதாரம், Getty Images

1998-ல் டிங்கோ சிங் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார். அதிலிருந்து மேரி கோமுக்கும் குத்துச்சண்டை மீது தீராக் காதல் ஏற்பட்டுவிட்டது. மேரி கோம் குத்துச்சண்டை செய்வது அவரது பெற்றோருக்கு வெகு காலம் வரை தெரியாமலே இருந்தது.

2000 ஆம் ஆண்டில், செய்தித்தாளில் வெளியிடப்பட்ட மாநில சாம்பியன் புகைப்படத்தில் இவர் படத்தைப் பார்த்துத் தான் அவர்களுக்கு விஷயமே தெரிந்தது. குத்துச்சண்டையில் காயம் ஏற்பட்டால், சிகிச்சை பெறுவது கடினம் என்றும் திருமணத்திலும் சிக்கல் இருக்கும் என்று தந்தை பயந்தார்.

ஆனால் மேரி கோம் ஒப்புக்கொள்ளவில்லை. பெற்றோர்கள் தான் பிடிவாதத்தை விட நேர்ந்தது. மேரி 2001 முதல் மூன்று முறை உலக சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். இதற்கிடையில், அவருக்குத் திருமணம் நடந்தது. இரட்டையர்கள் பிறந்தனர்.

உலக சாம்பியனான மேரி கோம், தாயான பிறகும் பல உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களையும் ஒலிம்பிக் பதக்கங்களையும் வென்றார்.

2012 ஒலிம்பிக்கில், மேரி கோம் தனது 48 கிலோ எடைப்பிரிவில் இல்லாமல் 51 கிலோ பிரிவில் விளையாட வேண்டியிருந்ததும் ஒரு சவாலாக இருந்தது. இந்த எடைப்பிரிவில் அவர் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தார்.

மேரி கோம் தனது வாழ்க்கையில் மோசமான நாட்களையும் சந்தித்துள்ளார். 2014 ஆம் ஆண்டில் கிளாஸ்கோவிலும், பிறகு ரியோ ஒலிம்பிக்கிலும் தகுதி பெற முடியவில்லை.

மேரி கோம் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளார். இந்துஸ்தான் டைம்ஸில் வெளியான, தனது மகன்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், தனது 17 ஆவது வயதில் பாலியல் வன் கொடுமைக்கு ஆளானதாகக் குறிப்பிட்டார்.

மேரி கோம்

பட மூலாதாரம், Getty Images

மணிப்பூரில் முதல் முறையாகவும் பின்னர் டெல்லி மற்றும் ஹிசாரிலும் தனது துறையில் முன்னேற அவர் போராடிக்கொண்டிருந்த நேரத்தில் இதையெல்லாம் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனது மூன்றாவது உலக சாம்பியன்ஷிப்பை வென்று வீடு திரும்பியபோது, ​​அவரது மாமனார் கொலை செய்யப்பட்டார்.

ஆனால் ஒவ்வொரு முறையும், மேரி அந்தக் கட்டத்தை வென்று மேலெழுந்தார். குத்துச்சண்டை வளையத்தில், அவர் வேறு உருவெடுக்கிறார்.

பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் ஒருமுறை, "இது ஒரு வகையான தண்டனை தரும் விளையாட்டு. வளையத்தில் இரண்டு குத்துச்சண்டை வீரர்கள் மட்டுமே உள்ளனர். அங்கு சென்று கோபாவேசத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் சிறந்த குத்துச்சண்டை வீரராகக் கருதப்பட முடியாது" என்றார்.

தனக்குள் இருந்த இந்தக் கோபத்தை விளையாட்டில் வெளிப்படுத்தி சாம்பியனானார் மேரி கோம்.

ஒரு அனுபவமுள்ள வீரரைப் போல, மேரியும் காலப்போக்கில் தனது நுட்பத்தை மாற்றி வந்துள்ளார்.

மேரி கோம்

பட மூலாதாரம், Getty Images

பிபிசியுடனான உரையாடலில், "இன்றைய மேரிக்கும் 2012 க்கு முந்தைய மேரிக்கும் வித்தியாசம் உள்ளது. அப்போது தொடர்ந்து குத்துவதை ஒரு பாணியாகக் கொண்டிருந்தேன். இப்போது, தாக்குவதற்கான சரியான தருணத்துக்காக மேரி காத்திருக்கிறாள். இதனால் ஆற்றல் சேமிக்கப்படுகிறது." என்றார் மேரி கோம்.

2020 டோக்யோ ஒலிம்பிக்கில் பதக்கங்கள் ஏதும் பெறாமல், கொலம்பியா வீராங்கனை உடனான போட்டியில் தோல்வி கண்டிருக்கிறார்.

38 வயதில் இது தான் அவருக்குக் கடைசி ஒலிம்பிக் என்று சிலர் கருதுகிறார்கள்.

இதை முடிவு செய்வது அவராகத் தான் இருக்க முடியும். ஆனால் மேரி குறித்து அறிந்தவர்கள், முடியாததை முடிப்பதற்கு மேரியால் முடியும் என்று அறிவார்கள்.

"என்னால் முடியும் போது, உங்களால் ஏன் முடியாது?" என்கிற அவர் வார்த்தைகள் தான் இச்சமயத்தில் நினைவுக்கு வருகிறது.

Please wait..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :