IPL 2021 PBKS vs RR: போட்டியை வென்ற பஞ்சாப், இதயங்களை வென்ற சஞ்சு சாம்சன், சதத்தை சிம்ஃபனி என்ற வர்ணனையாளர்

பஞ்சாப் கிங்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

    • எழுதியவர், கௌதமன் முராரி
    • பதவி, பிபிசி தமிழுக்காக

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2021 தொடரின் 4-வது போட்டி, நேற்று (12 ஏப்ரல், திங்கட்கிழமை) மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச தீர்மானித்தது. விறுவிறுப்பான சினிமா போல முதல் ஓவரிலிருந்து ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

மயங்க் அகர்வால் மற்றும் கே.எல். ராகுல் பவர் ப்ளேயில் மெல்ல ரன்களைக் குவிக்கத் தொடங்கினர். இளம் வீரர் சேதன் சகரியா வீசிய 3-வது ஓவரில், ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார் மயங்க் அகர்வால்.

கிறிஸ் கெய்ல் ராகுலுடன் கை கோர்த்தார். இந்த இடது - வலது பேட்ஸ்மேன்கள் இணை அருமையாக பலன் கொடுத்தது. 9-வது ஓவரில் ராகுல் திவாட்டியா வீசிய ஐந்தாவது பந்தை கெய்ல் அடிக்க, அது திவாட்டியவிடமே திரும்பி வந்தது, எனினும் அவர் கேட்சை தவறவிட்டார்.

ராகுல் - கெய்ல் இணை 67 ரன்களைக் குவித்திருந்தது. பவுண்டரி, சிக்ஸர் என பறக்கவிட்டுக் கொண்டிருந்த கெய்ல் ஒருவழியாக 10-வது ஓவரில் வீழ்ந்தார்.

அடுத்து ராகுலுடன் அதிரடியாக ரன் குவிப்பில் இறங்கினார் தீபக் ஹூடா. எதிர் கொண்ட 28 பந்துகளில் 6 சிக்ஸர், 4 பவுண்டரி என விளாசித் தள்ளினார். மறு பக்கம் ராகுல் நங்கூரமிட்டு நின்று அணியின் ரன் ரேட் அதிகரிப்பதை உறுதி செய்து கொண்டிருந்தார். ராகுல் தீபக் இணை 47 பந்துகளில் 105 ரன்களை குவித்து ராஜஸ்தான் அணிக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுத்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

முஸ்தஃபிசுர் ரஹ்மான் வீசிய 15-வது ஓவரின் முதல் பந்தில் தீபக் ஹூடா ஒரு கேட்ச் கொடுத்தார். அதை தவறவிட்டு பெருந்தவறு இழைத்தது ராஜஸ்தான் அணி. அப்போதே தீபக்கின் விக்கெட்டை வீழ்த்தி இருந்தால் அவரை 39 ரன்களோடு பெவிலியனுக்கு அனுப்பி இருக்கலாம்.

கடைசியில் க்ரிஸ் மோரிஸ் வீசிய 18-வது ஓவரில் ஹூடாவின் விக்கெட் வீழ்ந்தது. 17.3 ஓவரில் பஞ்சாப் அணி 3-வது விக்கெட்டை இழந்திருந்த போது 194 ரன்களைக் குவித்திருந்தது.

தன் விக்கெட்டை இழக்காமல் நிதானம் காட்டி வந்த ராகுலை கடைசி ஓவரில் வீழ்த்தியது ராஜஸ்தான். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் 221 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

ஒட்டுமொத்தமாக பஞ்சாப் அணி மட்டும் 18 பவுண்டரிகள் 13 சிக்ஸர்கள் என தெறிக்கவிட்டிருந்தார்கள். ராகுல் 91, தீபக் 64, கெய்ல் 40 என பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் தங்கள் தரப்பில் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். இத்தனை பெரிய ஸ்கோரை சேஸ் செய்வது மும்பை வான்கடே மைதானத்திலேயே கொஞ்சம் சிரமம் தான் எனக் கூறப்பட்டது.

சரியான நேரத்தில் ராஜஸ்தான் விக்கெட்டுகளை எடுக்காதது, கிடைத்த வாய்ப்புகளை (கேட்ச்களை) தவறவிட்டது எல்லாம் ராஜஸ்தான் அணி ரசிகர்களை கவலை கொள்ளச் செய்தது. அதோடு ராஜஸ்தான் அணியிலிருந்து மொத்தம் 8 பேர் பந்துவீசியும் பஞ்சாபின் ரன் ரேட்டைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

சேதன் சகாரியா மட்டுமே ஆறுதல் அளிக்கும் விதத்தில் 4 ஓவர்களை வீசி 31 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். மற்றபடி ராஜஸ்தானில் அதே பழைய கதை தான் நிலவுகிறது என வர்ணனையாளர்கள் விமர்சித்தனர்.

மிகுந்த பரபரப்புடன் தொடங்கியது ராஜஸ்தானின் பேட்டிங் இன்னிங்ஸ். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் பென் ஸ்டோக்ஸ் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆனார். ராஜஸ்தான் அணியினருக்கு தலையில் இடி இறக்கியது போலிருந்தது. அடுத்து களமிறங்கினார் சஞ்சு சாம்சன். மறு பக்கம் மனன் வோஹ்ரா விளையாடிக் கொண்டிருந்தார்.

சஞ்சு சாம்சன்

பட மூலாதாரம், BCCI/IPL

சாம்சன் - மனன் வோஹ்ரா இணை ஒருங்கிணைந்து ஆடத் தொடங்குவதற்குள்ளேயே, மனன் வோஹ்ராவின் விக்கெட்டை 3.2-வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார். மனன் அடித்த பந்து, பந்துவீச்சாளர் அர்ஷ்தீப்பிடமே சரணடைந்தது.

அதே ஓவரில் அர்ஷ்தீப் வீசிய 3-வது ஓவரின் 4-வது பந்து, சாம்சன் பேட்டில் பட்டு வந்ததை, பஞ்சாப் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் ராகுல் தவறவிட்டார். ஒருவேளை அந்த கேட்சை பிடித்திருந்தால், சாம்சன் 12 ரன்களோடு பெவிலியன் திரும்பி இருப்பார்.

அதிர்ஷ்டம் சாம்சன் பக்கம் இருந்தது. ஆனால் அவருக்கு கச்சிதமாக களத்தில் நின்று உதவத் தான் ராஜஸ்தான் அணியில் ஆள் இல்லை என்பது போலிருந்தது சூழல்.

அடுத்தடுத்து வந்த ஜோஸ் பட்லர், ஷிவம் தூபே, ரியான் பராக், ராகுல் திவாட்டியா போன்றவர்கள் அதிரடியாக ஆடினர். ஆனால் தலா 25 ரன்களுக்குள் சுருண்டனர். எந்த ராஜஸ்தான் பேட்ஸ்மேனும் பந்துகளை வீணடிக்கவில்லை என்பது தான் ஆறுதலான விஷயம்.

ராகுல் கேட்சை தவறவிட்டது போல, ரிலே மெரிடித் வீசிய 8.3-வது ஓவர் பந்தில் மீண்டும் ஒரு கேட்சை தவறவிட்டது பஞ்சாப் அணி. அந்த கேட்ச் பிடிக்கப்பட்டிருந்தால் சாம்சன் 35 ரன்களோடு வீழ்த்தப்பட்டிருப்பார்.

அதே போல ரிலே மெரிடித் வீசிய 10.5-வது பந்தில் சாம்சன் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனதாக நடுவர் அறிவித்தார். சிறிதும் யோசிக்காமல் சாம்சன் ரிவ்யூ கேட்டு தான் களத்தில் விக்கெட் இழக்காமல் நிற்பதை உறுதி செய்தார்.

பஞ்சாப் அணி, ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், சாம்சனின் விக்கெட்டை வீழ்த்தாதது அவர்களுக்கு பெரிய அழுத்தத்தைக் கொடுத்தது. அதற்கு விலையாக ரன்களைக் கொடுக்க வேண்டி இருந்தது.

கடைசியில் ஒரு பந்துக்கு 5 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் ஸ்ட்ரைகில் சாம்சன் நின்று கொண்டிருந்தார். அர்ஷ்தீப் வீசிய கடைசி பந்தை சிக்ஸ் அடித்து முடிக்க முயன்றார் சாம்சன். பஞ்சாப் அணியின் தீப் ஹூடா பவுண்டரி லைனுக்கு அருகில் பிடித்த கேட்ச், சாம்சனின் முயற்சிக்கும், ராஜஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்புக்கும் முற்றுப் புள்ளி வைத்தது.

பஞ்சாப் போட்டியை வென்றது. எதற்கும் அசராமல் ஒரு நல்ல தலைவனாக களமாடிய சாம்சன், கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை வென்றார். பஞ்சாப் காட்டிய அதிரடிக்கு, ராஜஸ்தான் ராயல்ஸும் சற்றும் சளைக்காமல் 22 பவுண்டரிகள் 11 சிக்ஸர்கள் என வான வேடிக்கை காட்டினார்கள்.

அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களை வீசி 35 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சஞ்சு சாம்சன் 119 ரன்களைக் குவித்ததற்காக ஆட்ட நாயகனானார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

"சஞ்சு சாம்சன் 25 ரன்களைக் குவித்த போது அது ஒரு இனிமையான இசையாக இருந்தது. அவருடைய சதம் ஒரு சிம்ஃபனி. அதைப் பார்க்கவே அத்தனை பிரமாதமாக இருந்தது" என தன் ட்விட்டர் பக்கத்தில் சஞ்சு சாம்சனின் சதத்தை பாராட்டி இருக்கிறார் கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே.

"நான் எதையும் கூடுதலாகச் செய்யவில்லை. என் உடல் விளையாடவில்லை, என் மனம் விளையாடிக் கொண்டிருந்தது" என கூறினார் சஞ்சு சாம்சன்.

இன்று மாலை 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: