பிபிசியின் சிறந்த இந்திய வீராங்கனை விருது 2020: வெற்றியாளர் இன்று அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான பிபிசியின் சிறந்த இந்திய வீராங்கனை (பிபிசி இந்தியன் ஸ்போர்ட்ஸ் வுமன் ஆஃப் த இயர்) விருதை வெல்லப்போவது யார்? என்ற கேள்விக்கான பதில், சர்வதேச மகளிர் தினமான இன்று (மார்ச் 8, திங்கட்கிழமை) தெரிந்துவிடும்.
இந்த விருதுக்காக இந்த வருடம் பரிந்துரைக்கப்பட்டவர்கள், தடகள வீராங்கனை டூட்டி சந்த், செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி, ஏர் கன் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், ஃப்ரீஸ்டைல் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாத் மற்றும் தற்போது இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டனாக இருக்கும் ராணி.
இந்த விருதின் வெற்றியாளர் குறித்து, இன்று மாலை 8 மணிக்கு நடைபெறும் இணைய விழா நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும். இந்த விழாவை பிபிசியின் இந்திய மொழி சேவைகளான தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி ஆகியவற்றின் சமூக வலைத்தள பக்கங்களில் பார்க்கலாம்.
மேலும் சாதனை புரிந்த விளையாட்டு வீராங்கனை ஒருவருக்கு பிபிசியின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படும்.
பரிந்துரை செய்யப்பட்டவர்களில் ஒரு வீராங்கனைக்கு `பிபிசி இந்தியன் எமர்ஜிங் ப்ளேயர் விருதும்` (வளர்ந்து வரும் வீராங்கனைக்கான விருது) வழங்கப்படும்.
தேர்வு முறை
பிபிசியால் தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவர் குழு, இந்திய விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலை தேர்வு செய்தது. அந்த குழுவில் இந்தியா முழுவதும் உள்ள விளையாட்டு செய்திகள் பிரிவு பத்திரிகையாளர்கள், நிபுணர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்றனர்.
நடுவர் குழுவால் அதிக வாக்குகளை பெற்றவர்கள் பொதுமக்கள் வாக்குகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். அந்த வாக்களிப்பு முறை பிப்ரவரி 8 - 24 வரை நடைபெற்றது.
இந்த வருடம் ஒரு சிறப்பு `விளையாட்டு ஹேக்கதான்` நிகழ்ச்சியும் ஒருங்கிணைக்கப்பட்டது. அதன் நோக்கம் இந்திய மொழிகளில் உள்ள வீக்கிப்பீடியா பக்கத்தில் அதிக பெண் வீராங்கனைகள் குறித்த தகவல்களை சேர்க்க வேண்டும் என்பதே. இந்த வீராங்கனைகள் குறித்து இணையத்தில் குறைந்த அளவே அல்லது தகவல்கள் ஏதும் இல்லாமல் இருந்தது.
இந்த முயற்சியின் மூலம் இந்தியா முழுவதும் 13 பல்கலைக்கழகங்கள் மூலம் இருந்து வந்த 300 இதழியல் துறை மாணவர்களுடன் இணைந்து ஐம்பது இந்திய வீராங்கனைகள் குறித்த 300 விக்கிப்பீடியா பக்கங்கள் உருவாக்கப்பட்டன.
மேலும் ஐந்து உத்வேகமளிக்கக்கூடிய வீராங்கனைகளில் கதைகளும் தயாரிக்கப்பட்டன. அந்த `சேஞ்ச்மேக்கர்` தொடரில் பாரா பேட்மிண்டன் வீராங்கனை பாருள் பர்மர், ஹெப்டத்லான் வீராங்கனை சுவப்னா பர்மன், பாரா ஸ்கேட்டர் பிரியங்கா தேவன், முன்னாள் கோ-கோ வீராங்கனை சரிகா காலே மற்றும் மல்யுத்த வீராங்கனை திவ்யா காக்ரன் ஆகியோரின் கதைகள் இடம்பெற்றிருந்தன.
பரிந்துரைக்கப்பட்டவர்கள்
1.மனு பாக்கர்
வயது 19, விளையாட்டு: துப்பாக்கிச் சுடுதல்

பட மூலாதாரம், ISSF-SPORTS
2018ஆம் ஆண்டு 16 வயதான மனு பாக்கர், இன்டர்நேஷனல் ஷூட்டிங் ஃஸ்போர்ட் ஃபெடரேஷன் உலகக் கோப்பையை வென்ற இளம் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றுள்ளார். 2018ஆம் ஆண்டு இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அதே வருடம், காமன்வெல்த் போட்டியில் பெண்களுக்கான பத்து மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 240.9 புள்ளிகளை எடுத்து சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றார். 2019ஆம் ஆண்டு பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டர் பிரிவு உலகக் கோப்பை இறுதி போட்டியில் வென்றார்.
2. டூட்டி சந்த்
வயது: 25, விளையாட்டு: தடகளம்

பட மூலாதாரம், AFP
பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தையத்தின் தற்போதைய இந்திய சாம்பியன், டூட்டி சந்த். 2019ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற வேர்ல்ட் யூனிவர்சியாட் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார். 2020ஆம் ஆண்டு அவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
2016ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேர்வான ஒரே இந்திய பெண் டூட்டி சந்த் ஆவார். 2018ஆம் ஆண்டு ஜகார்தாவில் நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்றார். 1998ஆம் ஆண்டிற்கு பிறகு அந்த போட்டியில் இந்தியா பதக்கம் பெறுவது அதுவே முதல்முறை. 2014ஆம் ஆண்டு `ஹைப்பர் ஆண்ட்ரோஜெனிசம்` என்று கூறி டூட்டி சந்துக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால் 2015ஆம் ஆண்டு சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்து வெற்றி பெற்றார். டூட்டி சந்த் இந்தியாவின் முதல் வெளிப்படையான தன்பால் ஈர்ப்பு தடகள வீரர் இவர். மேலும் இவர் மிக எளிமையான பின்புலத்திலிருந்து வந்தவர்.
3. கோனேரு ஹம்பி
வயது: 33, விளையாட்டு: செஸ்
உலகின் அதிக வேக செஸ் சாம்பியன், 2019

பட மூலாதாரம், Getty Images
செஸ் வீராங்கனைகளில் கொனேரு ஹம்பி ஒரு சிறந்த வீராங்கனை. இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இளம் வயதில் இவரது தந்தை இவரின் திறமையை அடையாளம் கண்டார். 2002ஆம் ஆண்டு 15 வயதில் மிக இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார். இந்த சாதனை சீனாவின் ஹூ யிஃபான் வீராங்கனையால் 2008ஆம் ஆண்டு முறியடிக்கப்பட்டது. தற்போது உலகின் அதிக வேக செஸ் சாம்பியன் கொனேரு ஹம்பிதான். இந்த சிறப்பை இரண்டு வருடம் மகப்பேறு இடைவேளிக்கு பிறகு அவர் 2019ஆம் ஆண்டு பெற்றார்.
கார்ன்ஸ் கோப்பையை 2020ஆம் ஆண்டு வென்றார். அர்ஜூனா விருதை 2003ஆம் ஆண்டு பெற்றார். 2007ஆம் ஆண்டு இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை பெற்றார்.
4. வினேஷ் போகாத்
வயது 26, விளையாட்டு: மல்யுத்தம்
வெண்கலம், உலக மல்யுத்த சாம்பியன் போட்டி

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச மல்யுத்த வீராங்கனைகளை கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர் வினேஷ் போகாத். 2018ஆம் ஆண்டு ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் ஆவார். மேலும் காமன் வெல்த்தில் இரு தங்க பதக்கங்களை பெற்றுள்ளார். காமன் வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டி இரண்டிலும் தங்கப் பதக்கம் வெற்ற ஒரே இந்திய மல்யுத்த வீராங்கனை இவர் ஆவார். 2019ஆம் ஆண்டு முதன்முதலில் தனது உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை வென்றார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம், வினேஷ் போகட் ரோம் ராங்கிங் தொடரில் தங்கப் பதக்கம் வென்றார். மேலும், கடந்த ஆண்டு கொரோனா வைரஸிலிருந்தும் மீண்டு வந்தார்.
5. ராணி; 26, விளையாட்டு: ஹாக்கி
இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன்

பட மூலாதாரம், Hindustan Times
2020ஆம் ஆண்டு "வேல்ட் கேம்ஸ் அத்லெட் ஆஃப் த இயர்" விருதை வென்ற முதல் ஹாக்கி போட்டியாளர் ராணி. நவம்பர் 2019ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியில் ராணி அடித்த கோலால், இந்திய அணி டோக்கியோ ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ளது. 2016 ரியோவில் பங்குபெற்ற இந்திய அணியிலும் இவர் இடம் பெற்றிருந்தார்.
2010ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் மிக இளம் வயதில் விளையாடிய இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றதோடு, `போட்டியின் இளம் வீராங்கனை` என்ற விருதையும் ராணி பெற்றார். 2018ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றது. 2018ஆம் ஆண்டு உலக கோப்பையில் கால் இறுதி சுற்றுக்குள் நுழைந்தது. அதே ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் நான்காம் இடத்தை வென்றது. ஹரியாணாவில் ஒரு ஏழை ரிக்ஷா தொழிலாளியின் மகளாக பிறந்தவர் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருதை 2020ஆம் ஆண்டு வென்றார்.

பிற செய்திகள்:
- பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டு: இளவரசர் ஹாரி, சீமாட்டி மேகன் மார்க்கல் அதிர்ச்சிப்பேட்டி
- உதயசூரியன் சின்னத்தில் போட்டி ஏன்? ஸ்டாலின் தலையீடும் வைகோ முடிவின் பின்னணியும்
- இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு அதிகாரி மீனாட்சியின் தன்னம்பிக்கை பயணம்
- குடும்பத் தலைவிகள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ. 1000: தி.மு.கவின் உறுதிமொழி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












