IND Vs ENG 2-வது டெஸ்ட்: அஸ்வினின் சுழலில் சிக்கி 134 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து

IND Vs ENG 2-வது டெஸ்ட்: 329 ரன்களுக்கு சுருண்டது இந்தியா; இங்கிலாந்து திணறல் ஆட்டம்

பட மூலாதாரம், Twitter/BCCI

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

இங்கிலாந்து அணி மொத்தமாக 60 ஓவர்கள் கூட நிலைத்து நின்று விளையாடவில்லை. 59.5 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

இந்தியாவில் 350 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இங்கிலாந்தின் சுழலில் இந்தியா எப்படி திணறியதோ, அதே போல அஸ்வினின் சுழலில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சரிந்தனர். ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இந்தியா 329 ரன்களுக்கு தன் 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து, முதல் இன்னிங்ஸை ஆடக் களமிறங்கியது இங்கிலாந்து. முதல் ஓவரிலேயே இஷாந்த் ஷர்மா, ராரி பர்ன்ஸின் விக்கெட்டை வீழ்த்தினார்.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

அடுத்தடுத்து டாம் சிப்லி, டான் லாரன்ஸ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை 25 ஓவர்களுக்குள்ளேயே வீழ்த்திவிட்டது இந்தியா.

பென் ஸ்டோக்ஸ் தன் விக்கெட்டை இழந்தபோது இங்கிலாந்து 52 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

ஓரளவுக்கு நிதானம் காட்டி ஆடிய ஒலி போப் மற்றும் பென் ஃபோக்ஸின் இணையை 39-வது ஓவரில் உடைத்தார் மொஹம்மத் சிராஜ்.

குறிப்பாக, இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் யாரும் 25 ரன்களைக் கூட கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்வரிசை பேட்ஸ்மேன்கள் மொயின் அலி, ஓலி ஸ்டோன், ஜேக் லீச் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்துக்காக கடைசியாக களமிறங்கிய ஸ்டூவர்ட் ப்ராட் டக் அவுட் ஆனார்.

முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்களின் பொறுமையைச் சோதித்த ஜோ ரூட்டின் விக்கெட்டை அக்ஸர் படேல் வீழ்த்தினார்.

புஜாரா

பட மூலாதாரம், Twitter/BCCI

படக்குறிப்பு, நேற்றைய ஆட்டத்தின்போது, இந்திய வீரர் புஜாரா பேட்டிங் செய்தபோது, பந்து அவரது வலது கையில் பலமாக பட்டதால், அவர் இன்று பீல்டிங் செய்யமாட்டார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மையம் கொண்ட சுழல்

இந்திய அணி எப்படி மொயின் அலி மற்றும் ஜாக் லீச்சின் சுழலில் சிக்கியதோ, அதே போல, இங்கிலாந்து பேட்ஸ்மேன்களும் அஸ்வினின் சுழலில் சிக்கி தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். டாம் சிப்லி, டான் லாரன்ஸ், பென் ஸ்டோக்ஸ் என முக்கியமான மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பினார் அஸ்வின். சுருக்கமாக சென்னையில், அஸ்வினின் சுழல் மைய கொண்டிருக்கிறது எனலாம்.

இந்த போட்டியின்போது, இந்தியாவில் 350-வது சர்வதேச விக்கெட்டை வீழ்த்திய மூன்றாவது இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

அனில் கும்ப்ளே (476 விக்கெட்டுகள்), ஹர்பஜன் சிங் (376 விக்கெட்டுகள்) ஆகிய இரு ஸ்பின்னர்கள் தான் உள்நாட்டில் 350-க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஒட்டுமொத்தமாக தன் டெஸ்ட் வாழ்கையில் 389 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் அஸ்வின். டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய வரலாற்று சாதனை படைத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இடம் பிடிக்க, அஸ்வினுக்கு இன்னும் 11 விக்கெட்டுகள் தேவைப்படுகின்றன.

IND Vs ENG 2-வது டெஸ்ட்: 329 ரன்களுக்கு சுருண்டது இந்தியா; இங்கிலாந்து திணறல் ஆட்டம்

பட மூலாதாரம், Twitter/BCCI

329 ரன்களுக்கு சுருண்ட இந்தியா

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 300 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது இந்தியா. இன்று ரிஷப் பண்ட் மற்றும் அக்ஸர் படேல் மீண்டும் தங்கள் இன்னிங்ஸைத் தொடர்ந்தார்கள்.

ஆனால், ஆட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள் ரிஷப் பண்ட் தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஆட்டமிழந்துவிட்டனர். இதனால், 329 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்தியா.

அக்ஸர் படேல், இஷாந்த் ஷர்மா, குல்தீப் யாதவ், மொஹம்மத் சிராஜ் ஆகியோர் ஒட்டுமொத்தமாக 10 ரன்களுக்குள் தங்கள் விக்கெட்டுகளைப் பறிகொடுத்துவிட்டார்கள். இதில் இருவர் ரன்கள் ஏதும் எடுக்கவில்லை.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்தின் அனுபவமிக்க மொயின் அலி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரைத் தொடர்ந்து புதிய வேகப்பந்து வீச்சாளரான ஒலி ஸ்டோன் 3 விக்கெட்டுகளையும், சர்வதேச கிரிக்கெட் போட்டி அனுபவம் அதிகம் இல்லாத சுழற்பந்து வீச்சாளர் ஜால் லீச் 2 விக்கெட்டுகளையும், ஜோ ரூட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

95.5 ஓவர் முடிவில் 329 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது இந்தியா.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: