IND Vs ENG: அதிரடி சதம் அடித்த கேப்டன் ரூட்: விக்கெட்டுகளை எடுக்க திணறும் இந்திய பவுலர்கள்

Ind Vs Eng முதல் டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம், Getty Images

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று இங்கிலாந்து அணித்தலைவர் ரூட் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார்.

தன் 100வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில், தற்போது ஜோ ரூட் இடம் பெற்றுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, இன்று காலை 9.30 மணியளவில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. ராரி பர்ன்ஸ் மற்றும் டாம்னிக் சிப்லி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள்.

முதல் நாளான இன்று தற்போது மூன்றாவது செஷன் தொடங்கியுள்ள நிலையில், 80 ஓவர் முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களை எடுத்துள்ளது.

ராரி பர்ன்ஸ் 33 ரன்களோடு அஸ்வின் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து பும்ரா வீசிய 26-வது ஓவரில் எல்.பி.டபிள்யூ முறையில் டக் அவுட் ஆனார் டேனியல் லாரன்ஸ்.

முதல் நாளான இன்று அதிரடியாக ஆடிய கேப்டன் ரூட் சதம் விளாசியுள்ளார்.

ரூட்

பட மூலாதாரம், Stu Forster

இப்போது வரை ரூட்டுடன் சிப்லி நிதானமாக விக்கெட்டைப் பறிகொடுக்காமல் மெல்ல ரன்களைக் குவித்து வருகிறார்.

முதல் நாளில் இரண்டாவது செஷனில் இந்தியா விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.

Ind Vs Eng முதல் டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம், Getty Images

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சார்பாக இஷாந்த் ஷர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷாபஸ் நதீம், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பந்துவீசிக் கொண்டிருக்கின்றனர்.

பும்ரா மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார்கள்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில்,கோவிட்-19 கட்டுப்பாடுகளுடன் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் விக்கெட் கீப்பராக மீண்டும் ரிஷப் பந்த் இருக்கிறார்.

சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் மூட்டு வலி காரணமாக இன்று அணியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ராகுல் சாஹர் மற்றும் ஷாபஸ் நதீம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Ind Vs Eng முதல் டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம், Getty Images

இந்த டெஸ்ட் போட்டிகள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தகுதி பெற கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையிலான சுற்றுப் பயணம் கொரோனாவால் ரத்தாகிவிட்டதால், நியூசிலாந்து அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்குச் சென்றுவிட்டது. தற்போது ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து போன்ற அணிகள் நியூசிலாந்துடன் விளையாடலாம்.

இந்தியாவை 3-1 அல்லது 3-0 அல்லது 4-0 என்கிற கணக்கில் தோற்கடித்து இங்கிலாந்து தொடரை வென்றால் இங்கிலாந்து தகுதி பெறும்.

இதுவே இங்கிலாந்தை 2-0, 2- 1, 3-0, 3- 1, 4- 0 என்கிற கணக்கில் தோற்கடித்து இந்தியா தொடரை வென்றால், இந்தியா தகுதி பெறும். ஆஸ்திரேலியாவும் தகுதி பெற வாய்ப்பிருக்கிறது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: