அஸ்வின் ராமன்: நாள் முழுவதும் கால்பந்து பார்ப்பதற்கு பணம் பெறும் 17 வயது இளைஞர்

பட மூலாதாரம், ASHWIN RAMAN
உங்களுடைய 17-வது வயதில் நீங்கள் என்ன செய்து கொண்டிருப்பீர்கள்? நல்ல கல்லூரியில் சேர்வதைக் குறித்தும், நல்ல வேலை தொடர்பாகவும் சிந்தித்துக் கொண்டிருந்திருப்பீர்கள் தானே?
நிச்சயமாக நீங்கள் ஒரு கால்பந்தாட்ட க்ளப்புக்கு வேலை செய்திருக்கமாட்டீர்கள்.
இந்தியாவின் பெங்களூரு நகரத்தை சேர்ந்த அஸ்வின் ராமனுக்கு `டண்டே யுனைடெட்` என்கிற ஸ்காட்லாந்து கால்பந்தாட்ட க்ளப்பில் பகுதிநேர `ஸ்கவுட்` (கிளப்பின் சார்பாக கால்பந்து ஆட்டத்தை பார்த்து தரவுகளை சேகரிப்பது) மற்றும் பகுப்பாய்வாளராக பணி கிடைத்ததில் இருந்து அவரது கனவு நினைவாகிவிட்டது எனலாம்.
இவர் தன் பள்ளி இறுதி ஆண்டில் இருக்கிறார். இவர் 2003-ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர், ஆனால் இந்தியாவின் பெங்களூரில் வளர்ந்து வருகிறார்.
"இது உண்மை தானா என நானே என்னை கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன். என்னால் இப்போதும் நம்ப முடியவில்லை" என ரேடியோ 1 நியூஸ் பீட்டிடம் தெரிவித்தார் அஸ்வின் ராமன்.
அஸ்வின் இந்த கால்பந்தாட்டக் க்ளப்பில் 2019-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இது காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடையும் வேலை கிடையாது.
நாம் எல்லோரும் கொரோனா பெருந்தொற்றால் வீட்டில் இருந்தே வேலை செய்யப் பழகி வருகிறோம். ஆனால் அஸ்வின் ராமனோ முழு நேரமாக, சுமாராக 8,225 கிலோமீட்டர் தொலைவில், பெங்களூரூவில் இருந்த படியே வேலை செய்து கொண்டிருக்கிறார்.

பட மூலாதாரம், ASHWIN RAMAN
கால்பந்தாட்டம் குறித்த புத்தகங்களை அஸ்வின் படித்த பிறகு தான், வலைப்பூவின் பக்கம் திரும்பினார்.
"என் 13-வது பிறந்தநாளில் நான் ஒரு வலைப் பூவைத் தொடங்கி எழுதினேன், அவைகளைத் திரும்பிப் பார்க்கும் போது அது அத்தனை மோசமானதாக இருக்கிறது" என சிரிக்கிறார்.
வலைதளத்தில் தன்னுடைய கால்பந்தாட்டம் தொடர்பான பகுப்பாய்வுகளைப் பதிவிட பதிவிட, அஸ்வினை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. கடந்த 2019-ம் ஆண்டு அஸ்வினுக்கு ஒரு சிறப்புச் செய்தி வந்தது.
"டண்டே யுனைடெட் என்கிற கால்பந்தாட்ட க்ளப்பின் முதன்மை ஸ்கவுட்டான ஸ்டீவி க்ரீவி என்பவர் ட்விட்டர் செயலி மூலம் நேரடியாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். உங்களுக்கு எங்கள் க்ளப்பில் ஒரு வேலை வேண்டுமானால் கூறுங்கள் என அக்குறுஞ்செய்தியில் குறிப்பிட்டிருந்தார்" என்கிறார் அஸ்வின்.
அதுவரை அஸ்வின் என்ன செய்து கொண்டிருந்தாரோ, அதையே ஒரு கால்பந்தாட்ட க்ளப்பில் தாக்கங்களை ஏற்படுத்தும் வகையில் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது.
தரவுகளைப் பார்வையிட மற்றும் காணொளிகளைப் பகுப்பாய்வு செய்வதற்கு பல மணி நேரங்களை மடிக் கணிணியில் செலவழிப்பது பலரின் கனவாக இருக்காது. ஆனால் அஸ்வினுக்கு அதுதான் கனவு, அக்கனவைத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
"இப்போது ஒரு கால்பந்தாட்டக் க்ளப்புக்கு வேலை செய்ய எனக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. என் பணிகள் ஒரு கால்பந்தாட்டக் க்ளப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது," என்கிறார் அஸ்வின்.
பெரும்பாலான நேரங்களில், அவர் வேலை பார்க்கும் கால்பந்தாட்ட க்ளப்புக்கு எந்த புதிய வீரர்களைத் தேர்வு செய்யலாம் என்பதில் செலவழிக்கிறார். அஸ்வின் ஒரு கால்பந்தாட்ட ரசிகர். எனவே இந்த பணி அவருக்கு இயல்பானது.
"எந்த மாதிரியான வீரர்கள் நமக்குத் தேவை என எனக்கு விளக்கப்பட்டது. எனவே எந்த வீரர்கள் நம் தேவைக்கு சரிப்பட்டு வருவார்கள் என்பதை பாருங்கள்" எனக் கூறினார்கள்.
"அதே போல ஒரு வீரரைத் தேர்வு செய்யப் போகிறோம் என்றால், அவரைக் குறித்து பல மணி நேரம் செலவழித்து தெரிந்து கொண்டு, அவரைத் தேர்வு செய்வது சரி தானா எனக் அறிக்கைகளைச் சமர்ப்பிப்பேன்" என்கிறார் அஸ்வின்.
17 வயதில் யாரும் இப்படி பொழுதைக் கழிக்கமாட்டார்கள், ஆனால் தனக்கு இது பிடித்திருக்கிறது என்கிறார் அஸ்வின் ராமன்.
இருப்பினும் தான் மாணவனாக இருப்பதால் தனது பணியை தனக்கேற்ற நேரங்களில் செய்து கொள்ள முடியும் என்று கூறும் அஸ்வின், "தற்போது எனக்கு தேர்வு நேரம் எனவே நான் அதிகம் பணி செய்யவில்லை" என்கிறார்.
இந்தியா மற்றும் பிரிட்டன் நேரத்துக்கு கணிசமான கால வித்தியாசம் இருக்கிறது. ஆனால், அஸ்வின் தொடர்ந்து ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளைக் கண்டு வருவதால், கிட்டத்தட்ட அவர் ஐரோப்பிய நேரப்படி தான் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- "இந்த பட்ஜெட் பொருளாதாரத்தை மீட்காது": ஜோதி சிவஞானம்
- உதவிக்கு யாரும் இல்லாதவரின் சடலத்தை சுமந்து சென்ற பெண் எஸ்.ஐ - குவியும் பாராட்டுகள்
- ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டம் துவங்கியது; கூட்டத்தொடரைப் புறக்கணிக்க தி.மு.க. முடிவு
- மூளையில் பொருத்திய சிப் மூலம் வீடியோ கேம் விளையாடும் குரங்கு - ஈலோன் மஸ்கின் புதிய அறிவிப்பின் பின்னணி என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












