IND Vs ENG - இந்தியாவின் வேகப்பந்து வீச்சு வரலாற்றை மாற்றி எழுதும் நான்கு வீரர்கள்

பும்ரா

பட மூலாதாரம், Cameron Spencer/Getty Images

    • எழுதியவர், மேத்யூ ஹென்றி
    • பதவி, பிபிசி ஸ்போர்ட்ஸ்

இந்தியாவில் சுழல்பந்து வீச்சாளர்கள் மட்டுமே சவால்களை முன்னிறுத்துவதில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா வீழ்த்திய டெஸ்ட் விக்கெட்டுகளில் 60 சதவிகித விக்கெட்டுகள் வேகப்பந்துவீச்சாளர்கள் எடுத்தவை.

முந்தைய 75 ஆண்டுகளை ஒப்பிடும்போது இது 20 சதவிகிதம் அதிகம்.

ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா ஆகிய நால்வரும் இணைந்து இந்த சாதனையை படைத்துள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில், வெள்ளிக்கிழமை (இன்று) தொடங்கும் நான்கு டெஸ்ட் போட்டிகளின் தொடரில் இங்கிலாந்து அணி இந்த பந்து வீச்சாளர்களை கவனமாக எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.

இந்த நான்கு பந்து வீச்சாளர்களில் ஒருவர் போலீஸ் வேலைக்குச் செல்லவிருந்தார். வேறு ஒருவருக்கோ பயிற்சியின் போதும் உறக்கம் வந்தது.

இந்தியாவின் வேகப்பந்து வீச்சின் வரலாற்றில் மிகவும் ஆபத்தான தாக்குதலின் இந்த அம்சங்களை அறிய பிபிசி ஸ்போர்ட்ஸ், சில வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் பேசியது.

ஜஸ்ப்ரீத் பும்ரா

1970 க்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தது 50 விக்கெட்டுகள் எடுப்பதை ஒரு அளவுகோலாக வைத்தால், மேற்கிந்திய தீவுகளின் மால்கம் மார்ஷல், ஜோயல் கார்னர் மற்றும் கர்ட்லி ஆம்ப்ரோஸ் ஆகியோரின் பந்துவீச்சின் சராசரி ஜஸ்ப்ரீத் பும்ராவை விட சிறந்தது.

ஆனால் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஜஸ்ப்ரீத் பும்ரா சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு சூப்பர் ஸ்டார் தான்.

27 வயதான பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்குவதற்கு முன்பு ஐபிஎல்-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடியதன் மூலம், பணமும் புகழும் சம்பாதித்தார்.

"இந்திய கேப்டன் விராட் கோலிக்கு அவரை மிகவும் பிடிக்கும். சிரமமான ஒரு கட்டம் வரும்போதெல்லாம், அவர் பும்ராவிடம் பந்தை கொடுப்பார்," என்று இந்த நான்கு பந்து வீச்சாளர்களுடன் விளையாடியுள்ள முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா கூறினார்.

பும்ரா மிகவும் துல்லியமாக பந்து வீசக்கூடியவர். வெள்ளை பந்தாக இருந்தாலும், சிவப்பு பந்தாக இருந்தாலும் அவர் பந்தை இரு பக்கதிலும் அதி வேகத்தில் சுழற்றக்கூடியவர்.

மிகச் சிறிய ரன்-அப்புடன் பும்ரா பந்து வீசுகிறார். அவர் தனது வீட்டின் ஒரு சிறிய பகுதியில் பந்துவீச்சைக் கற்றுக்கொண்டார். அதன் விளைவை இன்றளவும் நம்மால் காணமுடிகிறது.

ஒரு சிறிய ரன்-அப் இருக்கும்போதிலும், பும்ரா 90 மைல் வேகத்தில் பந்து வீசுகிறார்.

"இந்த பையன் யார்? அவரது பந்துவீச்சின் ஆக்‌ஷன் ஏன் இப்படி உள்ளது? மும்பை இந்தியன்ஸ் அணி அவரை எவ்வாறு தேர்ந்தெடுத்தது? என்று நாங்கள் நினைத்தோம்,"என்று பும்ரா தனது கிரிக்கெட் வாழ்க்கையை துவக்கிய காலகட்டத்தில் அவரது பந்துவீச்சை எதிர்கொண்ட அபிஷேக் ஜுன்ஜுன்வாலா கூறினார்.

பும்ரா மற்ற வேகப்பந்து வீச்சாளர்களைப் போல ஆக்ரோஷமானவர் அல்ல. மைத்தானத்தில் அவர் எப்போதும் புன்னகையுடன் காணப்படுவார். மேலும் அவர் தன்னை நிதானமாக வைத்திருக்க இசை கேட்பதை விரும்புகிறார்.

"நான் உடன் விளையாடிய சிறந்த நபர்களில் மிகச்சிறந்தவர் பும்ரா. அவர் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களைப் போல விக்கெட் எடுக்கும்போது ஆர்பரிக்கமாட்டார். எப்போதுமே சாந்தமாக இருப்பார்," என்று சுரேஷ் ரெய்னா குறிப்பிடுகிறார்.

முகமது ஷமி

ஷமி

பட மூலாதாரம், Andy Kearns/Getty Images

முகமது ஷாமி இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு இன்னிங்ஸில் ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை , ஐந்து முறை வீழ்த்தியுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் அவர்தான்.

30 வயதான ஷமி எப்போதுமே பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். காற்றிலும், ஆடுகளத்திலும் பந்தை நகர்த்தும் திறன் காரணமாக அவர் அணியின் ஒரு முக்கியமான பந்து வீச்சாளர் என்பதை நிரூபித்துள்ளார்.

இருப்பினும், இது எப்போதுமே அப்படி இல்லை. முகமது ஷமியுடன் மேற்கு வங்க அணியில் விளையாடியவரும், அவருடன் அறையில் தங்கியிருந்த ஜூன்ஜூன்வாலா, "ஷமிக்கு சாப்பிடவும் தூங்கவும் மிகவும் பிடிக்கும். போட்டி நடக்காதபோது மற்ற கிரிக்கெட் வீரர்கள் வேறு ஏதாவது செய்துகொண்டிருப்பார்கள், ஆனால் ஷமி வெளியே வரமாட்டார், அவர் எப்போதும் படுக்கையில் தூங்கிக் கொண்டிருப்பார். பந்தயம் இல்லாத நாளில், 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் அவர் தூங்குவார் "என்று குறிப்பிட்டார்.

"அவரது திறனை நாங்கள் அறிவோம். ஆனால் அவரது அணுகுமுறை பற்றி ஒரு கேள்வி இருந்தது. அவரது உடற்தகுதி பற்றி நாங்கள் பேசுவோம். அவர் தனது கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்டால் கண்டிப்பாக அவர் இந்தியாவுக்காக விளையாடுவார் என்று நாங்கள் உணர்ந்தோம்,"என்று அவர் மேலும் கூறினார்.

2012-13 ஆம் ஆண்டில் உள்நாட்டு கிரிக்கெட்டில் அவரது செயல்திறன் சிறப்பாக இருந்தது. இதன் பின்னர், 2013 ஜனவரியில், ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாக அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. பின்னர் விரைவிலேயே அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அடியெடுத்து வைத்தார்.

"பொழுதுபோக்குக்காக தான் ஆடவில்லை, நாட்டிற்காக விளையாடுகிறோம் என்பதை அப்போதுதான் அவர் உணர்ந்தார்," என்று ஜுன்ஜுன்வாலா கூறினார்.

இதற்குப் பிறகு ஷமி களத்திற்கு வெளியேயும் அர்ப்பணிப்பைக் காட்டத் தொடங்கினார்.

"அவர் மிகவும் அமைதியானவர், அவரிடம் ஆக்ரோஷம் இல்லை. பேட்ஸ்மேன்களை தூண்டிவிடுமாறு நாங்கள் அவரிடம் சொல்லுவோம். ஆனால் அவர் அப்படி செய்யமாட்டார். அவர் டிரஸ்ஸிங் ரூமிலும் அதிகம் பேசமாட்டார்," என்று ஜுன்ஜுன்வாலா குறிப்பிட்டார்.

உமேஷ் யாதவ் போலவே ஷமியும் காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார். ஆனால் அதற்குப்பிறகு தொடரில் அவர் பங்கேற்பார்.

உமேஷ் யாதவ்

உமேஷ்

பட மூலாதாரம், Robert Cianflone/Getty Images

கடந்த நான்கு ஆண்டுகளில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்களில் உமேஷ் குமார் திலக் யாதவ் சிறந்த ஸ்ட்ரைக் வீதத்தை (42.0) பெற்றுள்ளார்.

பும்ரா, ஷமி மற்றும் இஷாந்த் காயம் அடைந்தால், 33 வயதான உமேஷ் யாதவ் முதல் மாற்றாகக் காணப்படுகிறார்.

ஸ்ட்ரைக் வீதத்தைப் பொறுத்தவரை உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர்.

கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்ட உமேஷ் யாதவ் தனது வேகப்பந்தால் பேட்ஸ்மேன்களை திகைக்க வைப்பார்.

உமேஷ் யாதவ் இந்திய கிரிக்கெட் உலகிற்கு வராத ஒரு சாத்தியகூறும் இருந்தது. பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், அவர் காவல்துறையில் சேர விண்ணப்பித்தார். வெறும் இரண்டு மதிப்பெண்கள் காரணமாக அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இல்லையெனில் அவர் கிரிக்கெட் வீரராக மாறுவதற்கு பதிலாக காவல்துறையில் சேர்ந்திருப்பார்.

நாக்பூரில் இரண்டாம் பிரிவு கிளப் கிரிக்கெட்டுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை அவர் தொடங்கினார். ஒரு நடுவர் உமேஷின் பந்துவீச்சு வேகத்தை முதலில் கண்டார்.

கூர்முனை இல்லாத காலணிகளுடன் பந்துவீசிய உமேஷ், அவர்மீது தாக்கத்தை ஏற்படுத்தினார்.

அந்த நடுவரின் சகோதரர் ப்ரிதம் காந்தே, விதர்பாவின் முதல் வகுப்பு அணியின் கேப்டனாக இருந்தார். அவர் நெட் பயிற்சியில் பந்து வீச உமேஷை அழைத்தார்.

"உமேஷ் ரன்-அப் இல்லாமல் விக்கெட்டின் பின்னால் இருந்து பந்து வீசினார். ஆனாலும் அவர் வீசிய பந்து மின்னல்வேகத்தில் இருந்தது," என்று காந்தே கூறினார்.

22 ஆண்டுகளாக முதல் தர கிரிக்கெட்டில் விளையாடிய காந்தே, "இந்தப் பந்து வீச்சாளரிடம் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது என்பதை நான் அறிந்தேன்" என்றார்.

அணியின் கேப்டன் உமேஷால் ஈர்க்கப்பட்டார், ஆனால் தேர்வாளர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் நம்பிக்கை வரவில்லை.

"ஆரம்பத்தில் யாரும் மிகவும் ஆர்வம் காட்டவில்லை. அவருக்கு வயது அதிகம் இல்லை. சரியான நீளத்தில் பந்து வீச முடியாது என்று கூறிக்கொண்டிருந்தார்கள். ஆனால் என் சிந்தனை தெளிவாக இருந்தது. நான் அவருக்கு எப்படியாவது ஒரு வாய்ப்பு கொடுக்க விரும்பினேன். ஏனென்றால், அவர் ஒரு ஓவரில் மூன்று பந்துகளை சரியான இடத்தில் வீசினாலும் கூட எதிரணியை அவுட் ஆக்கிவிடமுடியும் என்று நான் நினைத்தேன்," என்று காந்தே கூறினார்,

இப்படியாக பப்லு என்று அழைக்கப்படும் உமேஷ் யாதவ் தனது 21வது வயதில், ரஞ்சி டிராஃபியில், விதர்பா அணி சார்பாக மத்திய பிரதேசத்திற்கு எதிராக விளையாடினார்.

"உமேஷ் வீசிய ஒரு பந்து ஒரு பேட்ஸ்மேனின் ஹெல்மெட் மீதுபட்டபோது, ஹெல்மெட் உடைந்தது. மற்றொரு பேட்ஸ்மேனின் மார்புக் கவசத்தை பந்து தாக்கியதும் அது உடைந்தது," என்று பந்தயத்தை நினைவு கூர்ந்த காந்தே குறிப்பிட்டார்.

"முதலாவது டிரிங்ஸ் இடைவேளையின்போது இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் ரிஷிகேஷ் கனிட்கர் என்னிடம் வந்து," இந்த பையன் யார்? மேற்கிந்திய தீவுகளின் ஒரு வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்வது போல் உணர்கிறேன் என்று சொன்னார்,"என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

முதல் வகுப்பு கிரிக்கெட் பந்தயத்தின் முதல் இன்னிங்ஸில் உமேஷ் யாதவ் 72 ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அவர் இதுவரை 148 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இஷாந்த் ஷர்மா

இஷான் ஷரமா

பட மூலாதாரம், Michael Dodge/Getty Images

கபில் தேவ் மற்றும் ஜாஹிர் கானுக்குப்பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தும் மூன்றாவது பந்து வீச்சாளராக ஆவதற்கு இஷாந்த் ஷர்மா இன்னும் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே சாய்க்கவேண்டும்.

இஷாந்த் இதுவரை இந்தியாவுக்காக 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தியாவின் இந்த நான்கு வேகப்பந்து வீச்சாளர்களில் மிகவும் உயரமானவர் இஷாந்த்.

தான் விரும்பும் போதெல்லாம், ஆடுகளத்திலிருந்து பவுன்ஸை அவர் பெறுகிறார். கூடவே தான் நினைக்கும்போதெல்லாம் பேட்ஸ்மேனின் பேட்களை குறிவைக்கும் முழு நீள பந்துகளையும் அவர் வீசுவார்.

இஷாந்த் ஷர்மா 2018 இல் கவுண்டி கிரிக்கெட்டில் சசெக்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இது அவரது பந்துவீச்சை மேம்படுத்தியது.

19 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் ஒரு காலத்தில் இஷாந்த் சர்மாவுக்கு எதிராக விளையாடிய அணி கேப்டன் பென் பிரவுனை அப்போது மீண்டும் அவர் சந்தித்தார்.

"கோலி அதிரடியாக விளையாடி ஒரு மணி நேரம் 25 ஓவர்களில் இந்தியா வெல்வதற்கு தேவையான ரன்கள் எடுத்த நாட்கள் எனக்கு நினைவிருக்கிறது. இஷாந்த் மிகவும் வேடிக்கையான மனிதர். அவரது நகைச்சுவை உணர்வு மிகவும் நன்றாக இருக்கும்,"என்று பிரவுன் கூறுகிறார்.

"நாங்கள் ஒரு முறை பிரிட்டிஷ் உணவகமான செல் வாகமாமாவுக்குச் சென்றோம். மெனுவில் சிறந்த உணவு ஃபயர் க்ராக்கர்தான் என்று அவர் எங்களிடம் கூறினார். ஆனால் அதில் அதிக மிளகாய் இருக்கும், அதை உங்களால் சாப்பிட முடியாது என்றார். தனக்கென அதை ஆர்டர் செய்துகொண்டார். ஆனால் காரம் காரணமாக அவரே அஜீரணத்தால் பாதிக்கப்பட்டார்." என்று பிரவுன் நினைவு கூர்ந்தார்.

32 வயதான இஷாந்த் விளையாட்டின் பதற்றத்தை எளிதில் கையாளக்கூடியவர் என்று பிரவுன் கூறுகிறார்.

இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் பந்து வீச்சாளராக இஷாந்த் சாதனை படைக்கப்போகிறார். இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகும் விதத்தைப்பார்க்கும்போது, இந்த நிலையை எட்டும் ஒரே பந்து வீச்சாளராக அவர் மட்டுமே இருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: