ம.தி.மு.கவில் துரை வையாபுரி: வைகோ தயக்கம் காட்டுவது ஏன்?

- எழுதியவர், விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ம.தி.மு.கவில் வைகோவின் மகன் துரை வையாபுரியை முன்னிறுத்த நிர்வாகிகள் ஆர்வம் காட்டுகின்றனர். புதன்கிழமையன்று அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் வையாபுரியை வரவேற்கும்விதமாக ஒருமித்த குரல்கள் எழுந்தாலும் வைகோவிடம் இருந்து ஒப்புதல் வரவில்லை. மகனின் வருகை குறித்து என்ன நினைக்கிறார் வைகோ?
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்குட்பட்ட உத்தரகோசமங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் மங்களசாமி. இவர் குவைத் நாட்டில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், வாதநோய் ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தவரை சொந்த ஊருக்குக் கொண்டு வர அவரின் மனைவி கோவிந்தம்மாள் கடுமையாக முயற்சி செய்தார்.
இதனை அறிந்த துரை வையாபுரி, குவைத் தூதரக அதிகாரிகள் மூலம் மங்களசாமியை சொந்த ஊருக்குக் கொண்டு வந்தார். இதற்காக கடந்த ஜனவரி மாதம் மங்களசாமியின் மனைவி கண்ணீர் ததும்ப வையாபுரிக்கு நன்றி தெரிவித்தபோது, `இது எங்கள் கடமை. உங்களைப் போன்ற சாமானிய மக்களுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருப்போம்' என்றார். இதனைக் கவனித்த ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க நிர்வாகிகள், `உங்கள் அப்பாவைப் போலவே உங்களுக்கும் உதவும் குணம்' என நெகிழ்ந்தனர்.
இது சிறு உதாரணம்தான். அண்மைக் காலமாக தான் களமிறங்க முடியாத பணிகளுக்கெல்லாம் மகன் துரை வையாபுரியை அனுப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார் வைகோ. இதன் நீட்சிதான், புதன்கிழமையன்று ம.தி.மு.கவின் உயர்நிலைக் குழு, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வெளிப்பட்டது. இதுகுறித்து, ம.தி.மு.க இளைஞரணி மாநிலச் செயலாளர் கோவை ஈஸ்வரனிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். `` அவர் (துரை வையாபுரி) முதலில் கட்சிப் பணிகளுக்கு வரட்டும். பிறகு இதுகுறித்துப் பேசுகிறேன்" என்றார்.
இதையடுத்து, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். வையாபுரி கட்சிக்கு வருவது, கட்சிக்கு பலத்தைக் கொடுக்கும் என்கிறார் அவர். பேட்டியிலிருந்து:

கே. புதன்கிழமை கூட்டத்தில், `சேர, சோழ, பாண்டிய நாடுகளைத் தொடர்ந்து பல்லவ நாடும் துரை வையாபுரியை வரவேற்கிறது' எனப் பேசியிருக்கிறீர்கள். அப்படியானால், தமிழகம் முழுவதும் துரை வையாபுரிக்கு வரவேற்பு இருப்பதாக இதனை எடுத்துக் கொள்ளலாமா?
ப. ஆமாம். நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். அவ்வாறு செல்லும்போது கட்சித் தொண்டர்களின் விருப்பத்தைக் கேட்கிறேன். `அவர் வர வேண்டும்' என விரும்புகிறார்கள். அதனால் வரவேற்கிறோம் என்றேன். கட்சியின் சார்பில் ஒரு புதிய முகம் வரும்போது, `அவர் என்ன சொல்ல வருகிறார்?' என்ற ஆர்வம் எல்லோருக்குமே இருக்கும். அறிவார்ந்த சமூகத்துக்கு எப்போதும் ஒரு தேடல் இருக்கும். அந்தத் தேடல் இப்போதும் இருக்கிறது.
கே. பேரறிவாளன் விடுதலை உள்பட கட்சிக் கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் வையாபுரியை கட்சிக்குள் கொண்டு வருவதற்கு வைகோ ஆர்வம் காட்டவில்லை என்கிறார்களே?
ப. உண்மைதான். நேற்றைய கூட்டத்தில், `இதைப் பற்றிப் பேச வேண்டாம்' எனத் தலைவர் கூறிவிட்டார்.
கே. அப்படியானால், `கட்சிப் பதவிக்கு துரை வையாபுரி வர வேண்டும்' என மாவட்ட செயலாளர்கள் கூறியதை எப்படிப் புரிந்து கொள்வது?
ப. நாங்கள் அவரை வரவேற்கிறோம். எங்களைப் பொறுத்தவரையில் எங்கள் தலைவரின் சுமைகளைப் பகிர்ந்து கொள்ள ஒருவர் வேண்டும். ம.தி.மு.க பொதுச் செயலாளராக வைகோ இருக்கிறார். அவரது மகன் மறுமலர்ச்சி தி.மு.கவில் பணியாற்றினால்தானே சிறப்பாக இருக்கும். அவர் மாற்றுக் கட்சிகளுக்கோ மாற்று இயக்கங்களுக்கோ சென்று பணியாற்றினால்தானே விமர்சனங்கள் வரும்? தலைவரின் மகனாக கட்சித் தோழர்களின் சுமைகளில் பங்கேற்பது எங்கள் கட்சிக்குக் கூடுதல் பலமும்கூட. அப்படித்தான் பார்க்கிறோம்.
கே. துரை வையாபுரியின் பல்வேறு சமூகப் பணிகளை அண்மைக்காலமாக பார்க்க முடிகிறது. வைகோவும் இதையேதான் செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக அவரது மகனும் கட்சிப் பதவிக்கு வருவது விமர்சனத்தை ஏற்படுத்தாதா?
ப. எப்படிப் பார்த்தாலும் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். ஓர் இயக்கமானது அதன் பயணத்திலும் கொள்கையிலும் ஏதேனும் சமரசம் செய்துள்ளதா என்றுதான் பார்க்க வேண்டும். நாங்கள் எந்தவகையிலும் எங்கள் கொள்கையில் சமரசம் செய்து கொண்டதில்லை. இந்தக் காலகட்டத்தில் அவர் கட்சிப் பதவிக்கு வருவது பலத்தைக் கொடுக்கும். விதை ஒன்று போட்டால் செடி ஒன்றா முளைக்கும் என்பார்கள். தலைவர் என்ன மனநிலையில் கட்சியைக் கடந்து தமிழகம் முழுவதும் சமூகப் பணிகளை மேற்கொண்டாரோ அதே பாணியில்தான் அவரது மகனும் செய்து வருகிறார்.

பட மூலாதாரம், FACEBOOK
கே. `சட்டமன்றத் தேர்தலில் துரை வையாபுரி களமிறங்க வேண்டும்' என்ற குரலும் கூட்டத்தில் எதிரொலித்ததே?
ப. எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், அந்தக் கருத்தை வலியுறுத்தினார்கள். இதுகுறித்து முடிவெடுக்க வேண்டியது எங்கள் கட்சியின் தலைவர். எனவே, நாங்கள் எதுவும் பேச முடியாது.
கே. தனிப்பட்ட முறையில் துரை வையாபுரியின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ப. அவர் தொடர்ந்து சமூகப் பணிகளைச் செய்து வருகிறார். இதுநாள் வரையில் எந்த வெளிச்சமும் இல்லாமல்தான் செய்து வருகிறார். அவர் மேற்கொண்டு வரும் சமூகப் பணிகள், எங்கள் இயக்கத்துக்கு இன்னமும் கூடுதல் பலத்தைக் கொடுக்கும்.
கே. வையாபுரியைக் கட்சிக்குள் கொண்டு வருவதற்கு வைகோ தயக்கம் காட்டுவது ஏன்?
ப. அது எப்போதுமே இருக்கத்தான் செய்யும். இந்தச் சமூகம் என்ன சொல்லுமோ என்ற எண்ணம்தான் காரணம். அப்படியொரு பார்வையும் இருக்கிறது. அதைக் கடந்துதான் நாம் பார்க்க வேண்டும். அவருடைய செயல்பாடுகள் நன்றாக இருப்பதால்தான் தொண்டர்கள் வரவேற்கிறார்கள். வைகோவுக்குத் தயக்கம் இருக்கிறது. அதனைப் போக்க வேண்டும் என்பதற்காகத்தான் மாவட்ட செயலாளர்கள் பேசினார்கள். `நீங்கள் அழைக்கவில்லை; நாங்கள்தான் அழைக்கிறோம்' என்றார்கள். விரைவில் துரை வையாபுரியை கட்சிப் பணிகளில் எதிர்பார்க்கலாம்.
கே. முன்பு போல வைகோவின் கர்ஜனைக் குரலைக் கேட்க முடியவில்லை. உடல் நலிவுற்றிருப்பதும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறதே?
ப. அவர் உடல்நலம் சற்று பாதிப்பில்தான் இருக்கிறது. ஆனால், அது சரியாகிவிடும். அவர் கடுமையான மனதிடம் கொண்டவர். நெஞ்சில் உறுதியுள்ளவர். விரைவில் வழக்கம்போலச் செயல்படுவார்.
பிற செய்திகள்:
- மியான்மரில் ஃபேஸ்புக்கை முடக்கியது ராணுவம் - என்ன நடக்கிறது அங்கே?
- "பௌத்த சித்தாந்தங்களுக்கு அமையவே இலங்கையை ஆட்சி செய்வேன்" - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
- அஸ்வின் ராமன்: நாள் முழுவதும் கால்பந்து பார்ப்பதற்கு பணம் பெறும் 17 வயது இளைஞர்
- `எங்களுக்கு ரியானா, கிரேட்டாவை தெரியாது; போராட்டத்துக்கு அவர்கள் ஆதரவு அளிப்பதில் என்ன பிரச்னை?`
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












