`எங்களுக்கு ரியானா, கிரேட்டாவை தெரியாது; போராட்டத்துக்கு அவர்கள் ஆதரவு அளிப்பதில் என்ன பிரச்னை?`: ராகேஷ் திகைத் கேள்வி

கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

இன்று 5 பிப்ரவரி 2021 (வெள்ளிக்கிழமை) இந்தியாவில் உள்ள முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான சில முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

எங்களுக்கு ரியானாவையும் தெரியாது, கிரேட்டா டூன்பெர்கையும் தெரியாது. வெளிநாட்டினர் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தால் என்ன பிரச்னை? என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் கேள்வி எழுப்பியுள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள். குடியரசு தினத்தன்று டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைச் சம்பவத்துக்குப்பின் விவசாயிகள் போராட்டம் ஒரு மாதிரியாக திசைமாறத் தொடங்கியது.

ஆனால், பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் கண்ணீருடன் மக்களிடம் பேசி, விடுத்த வேண்டுகோளுக்குப் பின், விவசாயிகள் போராட்டத்தில் முன்பு இருந்ததைவிட கூடுதலாக மக்கள் ஆதரவு பெருகியுள்ளது, வேகமெடுத்துள்ளது.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்துக்கு அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, நடிகை மியா கலிபா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா டூன்பெர்க் ஆகியோர் ஆதரவு தெரிவித்து, கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இவர்களின் கருத்துக்கு மத்திய அரசும், பாஜகவும், இந்திய பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி - உபி எல்லையான காசிபூரில் போராடி வரும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, ராகேஷிடம், போராட்டத்திற்கு வெளிநாட்டினர் ஆதரவு தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு ராகேஷ் பதில் அளி்க்கையில் "எங்கள் போராட்டத்துக்கு எந்த வெளிநாட்டு மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள். எனக்குத் தெரியவில்லை. வெளிநாட்டினர் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது? வெளிநாட்டினர் எங்கள் போராட்டத்துக்கு எதையும் வாரிக் கொடுக்கவில்லை, எங்களிடம் இருந்து எதையும் எடுத்துச் செல்லப்போவதில்லை" எனத் தெரிவித்தார்

அமெரிக்க பாடகி ரியானா, நடிகை கலிபா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா டூன்பெர்க் ஆகியோர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்களே என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ராகேஷ் திகைத், " நீங்கள் குறிப்பிடும் இவர்கள் யாரென்று எங்களுக்குத் தெரியாது. அவர்கள் ஆதரவு அளித்தால் நல்லது தான்" எனக் கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அரியா் தோ்வு அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு 4 வாரம் கால அவகாசம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழகம்

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் அரியா் தோ்வு நடத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு 4 வார கால அவகாசம் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தினமணியில் செய்தி பிரசூரமாகியுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், திருச்செந்தூரைச் சோ்ந்த வழக்குரைஞா் ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பாலகுருசாமி ஆகியோர், அரியா் மாணவா்கள் அனைவரும் தோ்ச்சிப் பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனித்தனியாக வழக்குத் தொடா்ந்தனா். இவ்வழக்கில் பதிலளித்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு, 'அரியா் தோ்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது விதிகளுக்கு முரணானது' எனத் தெரிவித்தன. தமிழக உயா் கல்வித்துறை தாக்கல் செய்த பதில்மனுவில், 'அரியா் தோ்வுகளை ரத்து செய்து மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றதாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், விதிமீறல்கள் எதுவும் இல்லை' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வழக்குரைஞா் ராம்குமார் ஆதித்தன், உயா்நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், 'தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் அரியா் தோ்வு நடத்தாமல் அனைவரும் தோ்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியிட தடை விதிக்க வேண்டும்' எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அரியா் தோ்வை, பல்கலைக்கழகங்கள் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ நடத்த வேண்டும் என அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமா்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், 'தற்போதைய சூழலில் கொரோனா நோய்த்தொற்று தணிந்து கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அரியா் தோ்வு நடத்தியது தொடா்பாக பல்கலைக்கழகங்களிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. எனவே, இதுதொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 4 வார கால அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்திவைத்ததாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூரு சிறையில் இருந்து இளவரசி இன்று விடுதலை

சசிகலா

பட மூலாதாரம், Getty Images

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இதில் தண்டனை காலம் நிறைவு செய்ததோடு, ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதம் செலுத்தியதால் கடந்த ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட்டார்.

இளவரசியும் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதம் செலுத்தி இருந்தார். இதனால் அவர் தண்டனை காலம் நிறைவு பெற்றதும் பிப்ரவரி 5-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இதனிடையே இளவரசி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் சிறைக்கு திரும்பி இருந்தார்.

இந்நிலையில் இன்றுடன் இளவரசியின் தண்டனை காலம் நிறைவடைய உள்ளதால், இன்று காலை 11 மணிக்கு அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளார். இதனிடையே சுதாகரனின் தண்டனை காலம் முடிந்து விட்டநிலையில், இன்னும் அபராத தொகையை செலுத்தாமல் உள்ளதால் அவர் விடுதலை செய்யப்படுவது தள்ளிப்போகிறது என தினத்தந்தி செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: