IPL final DC vs MI: டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளில் யார் பலசாலி?

பட மூலாதாரம், Ipl / bcci
- எழுதியவர், விவேக் ஆனந்த்
- பதவி, பிபிசி தமிழ்
டெல்லி கேபிட்டல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோதுகிறது.
முதல்முறையாக ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்லத் துடிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த முடியுமா?
முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியை பற்றி பார்ப்போம். இந்த ஐபிஎல் சீசனில் முதலில் பேட்டிங் செய்தாலும் சரி, சேசிங் செய்தாலும் சரி திறம்பட வெற்றிகளை வாரிக் குவித்த அணி எதுவெனில் அது மும்பை இந்தியன்ஸ் அணிதான்.
தோல்விப் பாதையில் இருந்த இரு போட்டிகளில் சூப்பர் ஓவர் வரை சென்றது மும்பை. ஆனால் இரண்டிலும் தோல்வியடைந்தது. சேசிங் செய்த சமயங்களில் பெங்களூரு அணிக்கு எதிரான ஒரே ஒரு போட்டியில் சூப்பர் ஓவர் வரை சென்று தோல்வியடைந்தது.
அதைத்தவிர மற்ற போட்டிகளில் மும்பை சேசிங்கில் தோற்றதே இல்லை. எத்தகைய இலக்கையும் திறம்பட விரட்டும் திறன் படைத்திருக்கிறது.
ஆனால் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் 170 ரன்களை எட்டவே சிரமப்பட்டன என்பதே உண்மை நிலவரம்.
மும்பை அணிக்கு எதிராக 200 ரன்களை அனாயசமாக எடுத்த ஒரே அணி பெங்களூரு மட்டுமே. மும்பை அணியில் பும்ரா, போல்ட் கூட்டணி எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு கடும் குடைச்சல் தந்துவருகிறது.

பட மூலாதாரம், Bcci / ipl
அதேபோல மும்பை அணி முதலில் பேட்டிங் செய்யும்பட்சத்தில் 190 ரன்கள் என்பதை மிகச்சாதாரணமாக எடுத்து வந்திருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர்களில் ரோகித் ஷர்மா மட்டுமே இன்னும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. குயிண்டன் டீ காக் நல்ல தொடக்கத்தை தருகிறார்.
சூரிய குமார் யாதவ் பொறுப்பாக விளையாடுகிறார். இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா இணை எந்தவொரு கட்டத்திலும் மிக அதிரடியாக விளையாடும் திறன் படைத்தது.
பொல்லார்டு பேட்டில் பந்துகள் பட்டால் சின்னாபின்னமாகின்றன. இதனால் கடைசி 5 ஓவர்களில் மும்பை அணியின் ரன்ரேட் சரமாரியாக எகிறுகிறது. இதைச் சமாளிப்பது எந்த அணிக்கும் கடினம்.
டெல்லி கேபிட்டல்ஸ் அணியை பார்த்தால், இந்த ஐபிஎல் சீசனில் அந்த அணி வென்ற 9 போட்டிகளில் ஏழு முறை முதலில் பேட்டிங் செய்தபோதுதான் வென்றுள்ளது.
சேசிங்கின்போது மூன்று முறை மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. அதாவது இந்த மூன்று போட்டிகளிலும் 50 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது.
இதுதான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் டெல்லிக்கும் இருக்கும் முரண்.
மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் டெல்லி இந்த சீசனில் மூன்று முறை தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் டெல்லி அணிக்கு எதிரானவை. கடந்த 10 நாட்களுக்குள் இரண்டு முறை மும்பையிடம் படுதோல்வி அடைந்தது டெல்லிக்கு சோர்வைத் தரக்கூடும்.

பட மூலாதாரம், Bcci /ipl
ஆனால் டெல்லி அணி முதல்முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடுகிறது.
ஏற்கனவே மூன்று முறை மும்பையிடம் தோல்வியடைந்துவிட்டதால் இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற மனநிலையில் தெம்புடன் விளையாடும் வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனில் மதயானை கூட்டம்போல விளையாடி இருக்கிறது. டெல்லியை ஏற்கனவே புரட்டி எடுத்திருக்கிறது.
இந்த சீசனில் வென்றுவிட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எளிதில் எட்ட முடியாத வகையில் 5 ஐபிஎல் கோப்பைகளோடு மும்பை அணி வலம்வர முடியும்.
ஆகவே மும்பை அணிக்கு டெல்லியிடம் தோற்றுவிட கூடாது என கூடுதல் அழுத்தம் இருக்கவே செய்யும்.
டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் குறைந்தது 180 ரன்களுக்கு மேல் குவித்தால் வெற்றிக்கான வாய்ப்பு சற்று அதிகரிக்கும். ஆனால் அது ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் இருவரின் அதிரடி ஆட்டத்தை பொறுத்தே இருக்கிறது.

பட மூலாதாரம், BCCI/IPL
அஷ்வின் இதுவரை மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு அச்சுறுத்தலாகவே இருந்திருக்கிறார்.
ஆகவே மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யும்போது சுழற்பந்து வீச்சாளர்கள் மூலம் மும்பையை 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி, டெல்லி வீரர்கள் விக்கெட் இழக்காமல் பொறுப்பாக விளையாடும்பட்சத்தில் வெற்றி வாய்ப்பு அதிகாமாகக்கூடும்.
மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை தனது வழக்கமான ஆட்டத்தை எந்த பதற்றமும் இன்றி விளையாடினாலே டெல்லியை வீழ்த்தமுடியும்.
ஆனால் இந்த கணிப்புகள், புள்ளிவிபரங்கள் எல்லாம் இறுதிப்போட்டியில் முற்றிலும் பொய்த்துப் போகலாம். ஏனெனில் இது இறுதிப்போட்டி. 4 மணிநேரத்தில் என்னவேண்டுமானால் நடக்கலாம் யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆக முடியும்.
ஏனெனில் கடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியிலும் சரி, 2019 ஒருநாள் உலகக்கோப்பை போட்டியிலும் சரி வெற்றி பெற்ற அணிகளுக்கு இடையே வித்தியாசம் வெறும் 22 யார்டுகள் அதாவது வெறும் ஒரு ரன் மட்டுமே என்பதை மறவாதீர்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












