SRH Vs RR - மீண்டும் அசத்திய டெவாட்டிய – ஐதராபாத் அணியை வீழ்த்திய ராஜஸ்தான்

பட மூலாதாரம், BCCI / IPL
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் சன் ரைஸர்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் ராகுல் டெவாட்டியா மற்றும் ரியான் பராக். 7.5 ஓவர்களில் 85 ரன்கள் சேகரித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளனர் இந்த இருவரும்.
ராஜஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ச்மேன்கள் எல்லாம் அவுட் ஆகி 12 ஓவர்களில் 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில்தான் இவர்கள் கூட்டு சேர்ந்தனர்.
வெற்றி இலக்காக 159 ரன்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள ஐந்து விக்கெட்டுகளை கொண்டு 82 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது ராஜஸ்தான் அணி. கூடுதலாக ஒரு விக்கெட் வீழ்ந்திருந்தாலும் அந்த அணியின் வெற்றி காணாமல் போயிருக்கும்.

பட மூலாதாரம், BCCI / IPL
டெவாட்டியா ஆட்டமிழக்காமல் 28 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் இரு சிக்ஸர்கள் என 45 ரன்களை எடுத்தார். பராகும் ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 42 ரன்களை எடுத்தார்.
இந்த கூட்டணி மூலம் ராஜஸ்தான் இந்த தொடரில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன்பும் அடுத்தடுத்த சிக்ஸர்களால் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார் டெவாட்டியா.
கடந்த நான்கு போட்டிகளில் இரு இலக்க ரன்கள் ஏதும் எடுக்காதிருந்த சஞ்சு சாம்சன் இந்த போட்டியில் 28 ரன்களை எடுத்தார்.
பிரகாசிக்காத ஐதராபாத்
டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட் செய்தது ஆனால் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பேரிஸ்டோவ் மற்றும் டேவிட் வார்னரை பெரிதாக ரன் ஏதும் எடுக்காமல் அழுத்தம் கொடுத்தனர் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள்.
ராஜஸ்தான் அணி ஐதராபாத் அணிக்கு முதல் மூன்று ஓவர்களில் வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தது. அதன்பின் நான்காவது ஓவரில் பேரிஸ்டோவின் விக்கெட்டை வீழ்த்தியது.
அதன்பிறகு கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் மனிஷ் பாண்டே கூட்டுச் சேர்ந்து அணிக்கு ரன்களை சேர்த்தனர். ஐதராபாத் அணி பத்து ஓவர்களில் 50 ரன்களை தாண்டியது.
அதன்பின் டேவிட் வார்னர் 48 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆக, மனிஷ் பாண்டே தனது அரை சதத்தை நிறைவு செய்தார். 17ஆவது ஓவரில் 54 ரன்களை எடுத்திருந்த பாண்டே ஜெதேவ் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
அதன்பின் வந்த கேன் வில்லியம்சன் இரு சிக்ஸர்களையும், பிரியம் கார்க் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸரையும் விளாசி கடைசி இரு ஓவர்களில் 34 ரன்களை சேர்த்தனர். இதன்மூலம் இருபது ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத் அணி 158 ரன்களை எடுத்திருந்தது.
பிற செய்திகள்:
- பறக்கும் விமானத்தில் பிறந்த குழந்தை: எப்படி நடந்தது அந்த `அதிசயம்` - மருத்துவரின் ஆச்சரிய அனுபவம்
- 'என் பெற்றோர் மதுவிற்கு அடிமை..' பிக் பாஸ் பாலாஜி கண்ணீர்
- கேதர் ஜாதவ் நீக்கம், தமிழக வீரர் சேர்ப்பு - CSK வெற்றிப்பாதைக்கு திரும்புமா?
- KKIP Vs KKR: 360 டிகிரியில் சுழன்று விளாசிய தினேஷ் கார்த்திக் - பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த கொல்கத்தா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












