CSK Vs RCB: கேதர் ஜாதவ் நீக்கம், தமிழக வீரர் சேர்ப்பு - சென்னை அணி வெற்றிப்பாதைக்கு திரும்புமா? மற்றும் பிற செய்திகள்

சென்னை அணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

துபாயில் இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற விராட் கோலி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து ஏழாவது முறையாக சேசிங் செய்கிறது. 

இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை தொடர்ந்து மோசமாக செயல்பட்டு வந்த கேதர் ஜாதவ் இந்த போட்டியில், அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நாராயண் ஜெகதீசன் சேர்க்கப்பட்டிருக்கிறார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். 

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜெகதீசனுக்கு 24 வயதாகிறது. இவரை 2018-ம் ஆண்டு 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது சென்னை. 

தொடர் தோல்விகள் மூலம் புள்ளிப்பட்டியலில் சரிவில் இருக்கும் சென்னைக்கு, ஜெகதீசன் வரவு வெற்றிப்பாதைக்கு திரும்ப உதவுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

பெங்களூரு அணியில் இன்று மொயின் அலி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பௌலிங் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

அர்மீனியா - அஜர்பைஜான் போர் நிறுத்தம்: பிணங்களை எடுத்துக்கொள்ள அனுமதி

A man walks by a market in Tartar, Azerbaijan, damaged in a shelling attack

பட மூலாதாரம், Getty Images

நாகோர்னோ - காராபாக் எனும் மலைப் பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக சண்டையிட்டு வந்த அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகள் தற்காலிக சண்டை நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளன.

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நற்பகல் முதல் இந்த தற்காலிக சண்டை நிறுத்தம் அமலுக்கு வரும்.

போர் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை பரிமாற்றம் செய்துகொள்ளவும், எதிர் தரப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இருந்து தங்கள் தரப்பினரின் இறந்த உடல்களை மீட்கவும் இந்த சண்டை நிறுத்தம் பயன்படுத்திக்கொள்ளப்படும்.

கடந்த இரு வாரங்களாக நடக்கும் மோதலில் இரு நாட்டு ராணுவத்தினர், பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். சுமார் 70,000 பேர் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேறினார்.

இந்த சண்டை நிறுத்த அறிவிப்பை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் வெளியிட்டார்.

(L-R) Azerbaijan's Foreign Minister Jeyhun Bayramov, Russian Foreign Minister Sergei Lavrov and Armenian Foreign Minister Zohrab Mnatsakanyan during trilateral talks

பட மூலாதாரம், EPA

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களுக்கும் இடையே 10 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த அதே நேரத்தில் இருநாட்டு எல்லையிலும் ராணுவங்கள் மோதிக்கொண்டிருந்தன.

நாகோர்னோ - காராபாக் எனும் மலைப் பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவும் பிரச்சனை, செப்டம்பர் 27 அன்று ஆயுத மோதலாக உருவெடுத்தது.

நாகோர்னோ - காராபாக் பகுதி அலுவல்பூர்வமாக அஜர்பைஜான் நாட்டுக்கு சொந்தமானது. ஆனால், அப்பகுதி அர்மீனிய இனத்தவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

அர்மீனியா - அஜர்பைஜான் இடையே நடக்கும் எல்லை மோதல் குறித்து கீழே உள்ள இணைப்பில் விரிவாகப் படிக்கலாம்.

நரேந்திர மோதி சீனாவின் பெயரை தவிர்ப்பது ஏன்?

மோடி ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், MIKHAIL SVETLOV

குவாட் அமைப்பின் உறுப்பு நாடுகளான இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், டோக்கியோவில் சந்தித்து, சீனாவின் செல்வாக்கைக் குறைப்பதற்கும் அதைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் வழிமுறைகளை ஆராய்ந்தன.

அதிகாரபூர்வமற்ற முறையில், குவாட் அமைப்பானது, சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு முயற்சியை மேற்கொள்ளும் 'ஆசியாவின் நேட்டோ' என்று கருதப்படுகிறது.

TRP என்றால் என்ன? சேனல்களில் ஏன் இவ்வளவு அடிதடி?

தொலைக்காட்சி

பட மூலாதாரம், HINDUSTAN TIMES

டிவியில் எந்த நிகழ்ச்சி அல்லது சேனல்கள் அதிகம் பார்க்கப்படுகின்றன என்பதை மதிப்பிட ஒரு மீட்டர் பொருத்தப்படும்.

அது மக்களின் தேர்வைக் காட்டுகிறது மற்றும் இது டிவியில் காட்டப்படும் நிகழ்ச்சிகளுடன் நேரடியாக தொடர்புடையது.

கடல்கள் காணாமல் போனால் என்னவாகும்?

இந்த உலகில் உள்ள கடல்கள் எல்லாம் காணாமல் போனால் என்னாகும்?

பட மூலாதாரம், Athanasios Gioumpasis

இந்த உலகில் உள்ள கடல்கள் எல்லாம் காணாமல் போனால் அல்லது இல்லாமல் போனால் என்னாகும் என்று யோசித்து இருக்கிறீர்களா?

நடிகர் சூரி புகார்: விஷ்ணு விஷால் தந்தை மீது வழக்கு பதிவு

நிலம் வாங்கி தருவதாக கூறி தன்னிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக விஷ்ணு விஷாலின் தந்தை உள்பட இருவர் மீது நடிகர் சூரி புகார் அளித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டை விஷ்ணு விஷால் மறுத்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: