நடிகர் சூரி புகார்: விஷ்ணு விஷால் தந்தை மீது நில மோசடி வழக்கு பதிவு - என்ன நடந்தது?

பட மூலாதாரம், VISHNU VISHAL / FACEBOOK
நிலம் வாங்கி தருவதாக கூறி தன்னிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக விஷ்ணு விஷாலின் தந்தை உள்பட இருவர் மீது நடிகர் சூரி புகார் அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை விஷ்ணு விஷால் மறுத்திருக்கிறார்.
கடந்த 2015ஆம் ஆண்டு விஷ்ணு விஷாலைக் கதாநாயகனாக வைத்து, 'வீர தீர சூரன்' என்ற திரைப்படத்தை எடுப்பதாக முடிவுசெய்யப்பட்டு, அதில் நடிக்க நடிகர் சூரியையும் ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்தப் படத்தில் அவருக்கு 40 லட்ச ரூபாய் சம்பள பாக்கி இருந்துள்ளதாக சூரி தரப்பு தெரிவிக்கிறது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் விஷாலின் தந்தையான ரமேஷ் குடவாலாவும் சூரியை அணுகி, மேலும் 2.70 கோடி ரூபாய் கொடுத்தால் நிலம் ஒன்றை வாங்கித்தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சூரி பணம் கொடுத்தபோதும், நிலம் ஏதும் வாங்கித்தரப்படவில்லையென்றும் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, வெறும் நாற்பது லட்ச ரூபாயை மட்டும் தந்துவிட்டு, ரூ. 2.70 கோடியை தரவில்லை என்றும் சூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக 2018ஆம் ஆண்டே சூரி சென்னை அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றும் முடியாததால், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், சூரியின் புகாரைப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதற்குப் பிறகு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சூரி புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் அடையாறு காவல்நிலையத்தில் அன்புவேல் ராஜன், ரமேஷ் குடவாலா ஆகியோர் மீது 406, 420, 465, 468, 471 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஆனால், சூரியின் புகார் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் விஷ்ணு விஷால், "என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்த போது மிகுந்த அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது.
உண்மையில் சூரிதான், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தைத் திரும்பத் தர வேண்டும். "கவரிமான் பரம்பரை" என்ற படத்திற்காக 2017 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணம் அது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது. சட்டத்தின் மீதும் நீதித் துறையின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. எல்லாம் தெளிவான பிறகு சட்டப்படி சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்" என்று அவர் கூறியிருக்கிறார்.
2009ஆம் ஆண்டில் வெளியான வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம்தான் விஷ்ணு விஷாலும் சூரியும் அறிமுகமாகினர். அதற்குப் பிறகு, குள்ளநரிக் கூட்டம், கதாநாயகன், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் ஆகிய படங்களில் ஒன்றாக நடித்தனர்.
விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா, தமிழக காவல்துறையில் டிஜிபி அந்தஸ்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்தால் அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்கியதாக நடிகர் சூரி தரப்பில் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்தே அவர் நீதிமன்றத்தை அணுகியிருப்பதாக அவரது தரப்பு கூறுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












