'இரண்டாம் குத்து' பட சர்ச்சை: இயக்குநர் சந்தோஷ் - பாரதிராஜா மோதல்

சந்தோஷ் ஜெயக்குமார்

பட மூலாதாரம், YOUTUBE

சந்தோஷ் ஜெயக்குமார் என்பவர் இயக்கியுள்ள 'இரண்டாம் குத்து' படத்தின் ட்ரெய்லர், போஸ்டர் ஆகியவை வெளியாகியிருக்கும் நிலையில், அவை ஆபாசமாக இருப்பதாகக் கூறி, இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து' 2018ல் வெளியானது. அந்தப் படத்தின் 2-ம் பாகமாக 'இரண்டாம் குத்து' என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை சமீபத்தில் வெளியாகின. இந்த டீஸரும் போஸ்டரும் சமூகவலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சினிமாவினால் சாதி ஒழிப்பு சாத்தியப்பட்டிருக்கிறது.

சினிமாவினால் மதம் கடந்த மனங்கள் இணைவது சாத்தியப்பட்டிருக்கிறது. நேர்மையும் துணிவுமிக்க இளைஞர்களை உருவாக்குவது சாத்தியப்பட்டிருக்கிறது.

தார்மீகப் பொறுப்புகளோடு சமூக பாதிப்புகள் நேராது கண்ணியத்தோடு பேணிக்காத்த சினிமாவை இன்று வியாபாரம் என்ற போர்வையில் கண்ணியமற்று சீரழிக்கிறோமோ என்ற கவலை மேலிட ஒரு வலியோடு பார்க்கிறேன்.

சினிமா வியாபாரமும்தான்... ஆனால் வாழைப்பழத்தை குறிகளாகச் செய்து அதைக் கேவலமான பதிவோடு பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் நிலைக்கு அவ்வியாபாரம் வந்து நிற்பது வேதனையடையச் செய்கிறது.

பாரதிராஜா

பட மூலாதாரம், FACEBOOK

இப்படி படுக்கையை எடுத்து நடுத் தெருவில் வைப்பது எந்தவிதத்தில் சரி என்பது? நான் கலாச்சார சீர்கேடு எனக் கூவும் நபரல்ல. ஆனால் என் வீட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என நினைப்பவன்.

"இரண்டாம் குத்து" என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்?? நாளை இன்னும் என்ன என்ன கேவலங்களை சாணியறைவார்களோ என்று கவலைகொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

இந்த அறிக்கை ஊடகங்களில் வெளியானதும், இரண்டாம் குத்து படத்தின் இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார், பாரதிராஜா இயக்கிய டிக்..டிக்..டிக்.. படத்தின் போஸ்டரை வெளியிட்டு பதிலளித்துள்ளார்.

"அனைவரும் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். 1981ஆம் ஆண்டு 'டிக்.. டிக்.. டிக்..' படத்தில் இதைப் பார்த்துக் கூசாத கண்ணு, இப்போது கூசிருச்சோ..?" என்று கூறி டிக்..டிக்..டிக்... படத்தின் போஸ்டரையும் தனது பதிவில் இணைத்துள்ளார்.

திரையரங்குகள் திறக்கப்பட்டால், அக்டோபர் மாத இறுதியில் 'இரண்டாம் குத்து' வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: