ரிபப்ளிக் டி.வி சர்ச்சை: TRP என்றால் என்ன? அது பற்றி சேனல்களில் ஏன் இவ்வளவு அடிதடி?

பட மூலாதாரம், SOPA IMAGES
பணம் செலுத்துவதன் மூலம் சேனலின் டிஆர்பியை (டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட்ஸ்) அதிகரிக்க முயற்சிக்கும் மோசடியை கண்டுபிடித்துள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
மும்பை காவல்துறையினரின் கூற்றுப்படி, மூன்று பிரபல தனியார் தொலைக்காட்சிகளுக்கு இதில் தொடர்பு இருக்கிறது.
அதில் ரிபப்ளிக் டிவி என்ற பிரபல ஆங்கில தொலைக்காட்சியின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்ட மும்பை காவல்துறை ஆணையாளர், அந்த தொலைக்காட்சி நிர்வாகம் டிஆர்பி முறையில் முறைகேடு செய்ததாக தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ளார். இருப்பினும், அவரது குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ரிபப்ளிக் டிவி நிர்வாகம் நிராகரித்துள்ளது.
இதற்கிடையில், டிஆர்பி என்றால் என்ன, தொலைக்காட்சிக்கு இது ஏன் முக்கியமானது என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது.
டி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகளுக்கான ஒரு சிறப்பு முறை. இந்த முறைப்படி டிவியில் எந்த நிகழ்ச்சி அல்லது சேனல்கள் அதிகம் பார்க்கப்படுகின்றன என்பதை மதிப்பிட ஒரு மீட்டர் பொருத்தப்படும். அது மக்களின் தேர்வைக் காட்டுகிறது மற்றும் இது டிவியில் காட்டப்படும் நிகழ்ச்சிகளுடன் நேரடியாக தொடர்புடையது.
நிறுவனங்கள் மற்றும் விளம்பர ஏஜென்சி நிறுவனங்கள், இந்த மதிப்பீட்டைப் பயன்படுத்திக் கொள்கின்றன, ஏனெனில் அவர்களின் விளம்பரங்கள் எந்த நிகழ்ச்சியின்போது அதிகமாகக் காட்டப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க இந்த டிஆர்பி கணக்கீட்டு முறை உதவுகிறது.
இதன் பொருள், எந்த நிகழ்ச்சி அல்லது டிவி சேனல், டிஆர்பி மதிப்பீடுகளில் முன்னணியில் இருக்கிறதோ, அதற்கு அதிக விளம்பரங்கள் கிடைக்கும், அதாவது அதிக வருவாய் கிடைக்கும்.
தொலைக்காட்சி பார்வையாளர்களின் அளவீடுகள் தொடர்பாக 2008 ஆம் ஆண்டில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அளித்த பரிந்துரைகளின்படி, "விளம்பரதாரர் தனது முதலீட்டின் மீது முழு லாபத்தை பெறுவதற்காக ஒரு மதிப்பீட்டு முறை உருவாக்கப்பட்டது, ஆனால் இவை தொலைக்காட்சி மற்றும் சேனல் நிகழ்ச்சிகளுக்கு முதன்மை அளிக்கும் அளவுகோலாக மாறி விட்டன.
தொலைக்காட்சி மதிப்பீடுகளை யார் வரையறுக்கிறார்கள்?

பட மூலாதாரம், HINDUSTAN TIMES
2008 ஆம் ஆண்டில், டிஆர்பி மதிப்பீடுகளை வணிக அடிப்படையில் தெரிவிக்கும் பணி, டைம் மீடியா ரிசர்ச் (டைம்) மற்றும் ஆடியன்ஸ் மெஷ்ர்மென்ட் மற்றும் அனலிட்டிக்ஸ் நிறுவனத்துக்கு (ஏஎம்ஏபி) டிராய் வழங்கியது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின்படி (TRAI), இந்த இரண்டு நிறுவனங்களின் பணிகள், ஒரு சில பெரிய நகரங்களுக்கு மட்டும்தான். அதோடு ஆடியன்ஸ்ன் மெஷ்ர்மென்டின் குழு அளவும் குறைவாகவே இருந்தது.
அதே ஆண்டில், இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தொழில் பிரதிநிதிகள் தலைமையிலான சுய ஒழுங்குமுறைக்காக, ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (BARC) ஒன்றை டிராய் பரிந்துரைத்தது.
இதன் பின்னர், ஜூலை 2010 இல் BARC நடைமுறைக்கு வந்தது. இதற்குப் பிறகும், தொலைக்காட்சி மதிப்பீடுகளை வழங்கும் பணியை டைம் மட்டுமே தொடர்ந்தது, AMAP இந்த வேலையை நிறுத்தி விட்டது. ஆனால், டைம் நிறுவனத்தை இந்திய தகவல் ஒலிபரப்புத்துறை அங்கீகரிக்கவில்லை.
இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக பல சுற்று விவாதங்கள் தொடர்ந்தன.
ஜனவரி 2014 இல், தொலைக்காட்சி மதிப்பீட்டு நிறுவனங்களுக்கான கொள்கை வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெளியிட்டது. அதன் கீழ், ஜூலை 2015 இல், இந்தியாவில் தொலைக்காட்சி மதிப்பீடுகளை வழங்கும் அமைப்பாக BARC அங்கீகரிக்கப்பட்டது.
BARC இல் தொழில்துறையின் பிரதிநிதிகளாக, இந்திய ஒளிபரப்பு அறக்கட்டளை, விளம்பரதாரர்களின் இந்தியன் சொசைட்டி மற்றும் இந்திய விளம்பர முகமை ஆகியவை உள்ளன.
மதிப்பீடு எவ்வாறு செய்யப்படுகிறது?
மதிப்பீட்டிற்கு BARC இரண்டு நிலைகளில் செயல்படுகிறது - முதலாவதாக, வீடுகளில் தொலைக்காட்சியில் காணப்படுவது குறித்து பெரிய அளவிலான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதற்காக, தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு வகை மீட்டர் வைக்கப்படுகிறது, இது தொலைக்காட்சியில் பார்க்கப்படும் சேனலைக் கண்காணிக்கும்.
இரண்டாவதாக, மக்கள் அதிகம் பார்க்க விரும்புவதை அறிய, உணவகங்கள் மற்றும் உணவுக் கடைகளில் நிறுவப்பட்ட டிவி செட்களில் எந்த சேனல்கள் மற்றும் எந்த நிகழ்ச்சிகள் காட்டப்படுகின்றன என்ற தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.
தற்போது, 44,000 வீடுகளில் இருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தரவு சேகரிக்கப்படுகிறது. இந்த இலக்கை, 2021 க்குள் 55,000 ஆக அதிகரிக்க BARC முயற்சிக்கிறது. அதே நேரத்தில், உணவகங்கள் மற்றும் உணவுக் கடைகளுக்கான மொத்த மாதிரி அளவு 1050 ஆகும்.
சேகரிக்கப்பட்ட தரவு ஒவ்வொரு வாரமும் வெளியிடப்படும்.

பட மூலாதாரம், Getty Images
விளம்பரம் தொடர்பான மதிப்பீடு
அலுவல்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்தியா 1.3 பில்லியன் மக்கள் வசிக்கும் நாடு, 19.5 மில்லியனுக்கும் அதிகமான தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளன .
நிபுணர்களின் கூற்றுப்படி, இது ஒரு பெரிய சந்தை, இந்த காரணத்திற்காக மக்களை சென்றடைய விளம்பரம் மிகவும் முக்கியமானது
இந்திய தொழிற்துறை வர்த்தக சம்மேளன அறிக்கைப்படி, 2016இல் இந்திய தொலைக்காட்சிகள், விளம்பரம் மூலம் 243 பில்லியனை வருவாயாகவும் சந்தா மூலம் 90 பில்லியனையும் வருவாயாக பெற்றன. இந்த எண்ணிக்கை, 2020 ஆம் ஆண்டில் , விளம்பரத்திலிருந்து 368 பில்லியனாகவும், சந்தாவிலிருந்து 125 பில்லியனாகவும் அதிகரித்துள்ளது.
எனவேதான் இந்த டிஆர்பி ரேட்டிங் பட்டியலில் முன்னணியில் இருப்பது தொலைக்காட்சிகளின் எதிர்காலத்தையும் நிதி ஆதாரத்தையும் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கிறது.
சர்ச்சை எப்படி தொடங்கியது?
தொலைக்காட்சி நிறுவனங்கள், அவற்றின் விளம்பர வருவாயை அதிகரிக்கும் நோக்குடன் தங்களின் பார்வையாளர் எண்ணிக்கையை மிகைப்படுத்திக் காட்ட டிஆர்பி எனப்படும் டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட்ஸ் புள்ளிகள் கணக்கீட்டில் முறைகேடு செய்ததாக ரிப்பப்ளிக் டிவி, ஃபக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய சேனல்கள் மீது சுமத்தப்படும் புகார்கள் தொடர்பாக தற்போது விசாரித்து வருவதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் அசாதாரணமான முறையில் நகர காவல்துறை ஆணையர் பரம் வீர் சிங் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, தனியார் தொலைக்காட்சி சேனல்கள் எவ்வாறு டிஆர்பி ரேட்டிங் முறையில் முறைகேடு செய்கின்றன என்பதை விவரித்தார்.
இந்த விவகாரத்தில் ஃபக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா, சந்தை விநியோக ஆராய்ச்சி நிறுவனத்தின் இரு ஊழியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ரிப்பப்ளிக் தொலைக்காட்சியின் மூத்த நிர்வாகிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
காவல்துறை குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு
ஆனால், காவல்துறையின் குற்றச்சாட்டை மறுத்த ரிப்பப்ளிக் டிவி நிர்வாகம் மற்றும் அதன் முதன்மை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி வெளியிட்ட அறிக்கையில், "எங்கள் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் நகர காவல்துறை ஆணையர் சுமத்திய குற்றச்சாட்டுகள் தவறானவை. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக நேரலையில் நகர காவல்துறை ஆணையரிடம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத நிலையில், எங்களுடைய தொலைக்காட்சியை இலக்கு வைத்து ஆணையர் செயல்படுவதாகக் கூறி அவருக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடருவோம்" என்று கூறியுள்ளது.
பிற செய்திகள்:
- இந்தியா-சீனா எல்லை சர்ச்சை: பிரதமர் நரேந்திர மோதி சீனாவின் பெயரை தவிர்ப்பது ஏன்?
- நிலக்கரி சுரங்கங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசு - இந்தியா எப்படி சமாளிக்கும்?
- 'இரண்டாம் குத்து' பட சர்ச்சை: இயக்குநர் சந்தோஷ் - பாரதிராஜா மோதல்
- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்
- எம்.எல்.ஏவை மணந்த சௌந்தர்யா கணவருடன் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












