இந்தியா-சீனா எல்லை சர்ச்சை: பிரதமர் நரேந்திர மோதி சீனாவின் பெயரை தவிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், MIKHAIL SVETLOV
- எழுதியவர், ஜுபைர் அகமது
- பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி
அக்டோபர் 6 ஆம் தேதி டோக்கியோவில் நடந்த குவாட் நாடுகளின் கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பல நல்ல விஷயங்களை தெரிவித்தார்.
'விதிமுறைகள் அடிப்படையிலான உலக ஒழுங்கு, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கான மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பது' ஆகியவற்றுக்கு சாதகமாக இந்தியா இருக்க விரும்புகிறது என்று ஜெய்சங்கர் கூறினார்.
இந்திய-சீனா எல்லைப் பிரச்சனையில் சீனாவின் ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை அவர் கண்டித்தார். ஆனால், நேரடியாக அந்த நாட்டின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.
மறுபுறம், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ, சீனாவை நேரடியாகவே தாக்கிப் பேசினார்.
குவாட் அமைப்பின் உறுப்பு நாடுகளான இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், டோக்கியோவில் சந்தித்து, சீனாவின் செல்வாக்கைக் குறைப்பதற்கும் அதைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் வழிமுறைகளை ஆராய்ந்தன.
அதிகாரபூர்வமற்ற முறையில், குவாட் அமைப்பானது, சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு முயற்சியை மேற்கொள்ளும் 'ஆசியாவின் நேட்டோ' என்று கருதப்படுகிறது.
கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவுக்கு எதிரான சீன ஆக்கிரமிப்பை, முழு நாடும் தீவிரமாக கருத்தில் கொண்டுள்ளது. இருந்த போதிலும், ஜெய்சங்கர் சீனாவை பகிரங்கமாக கண்டிக்கவில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இது குறித்து பாதுகாப்புத் துறை நிபுணர் பிரம்மா செல்லானி ட்வீட் மூலமாக தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.
"இந்திய வெளியுறவு அமைச்சர் சீனாவின் பெயரை எடுக்கவில்லை என்பது மட்டுமல்ல. சீனாவின் ஆக்கிரமிப்புக்கு இந்தியா பலியாகிறது என்று கூட அவர் சொல்லவில்லை என்று அவர் கூறியுள்ளார். நிச்சயமாக அவரது பேச்சு, சீனாவை சுட்டிக்காட்டுவதாக இருந்தாலும், அமைச்சர் நேரடியாக சீனாவின் பெயரை குறிப்பிடவில்லை" என்கிறார் அவர்.
செவ்வாயன்று, ஐக்கிய நாடுகள் சபையின் 39 நாடுகள் சீனாவுக்கு எதிரான தீர்மானத்தில் கையெழுத்திட்டபோது, சீனாவை கூட்டான முறையில் கண்டிக்க இந்தியாவுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்தது.
"ஷின்ஜியாங்கில் மனித உரிமை நிலைமை மற்றும் ஹாங்காங்கின் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து நாங்கள் தீவிரமாக அக்கறை கொண்டுள்ளோம்" என்று அந்த நாடுகள் தீர்மானத்தில் தெரிவித்துள்ளன.
உள்நாட்டு விவகாரங்களில் கூட மெளனம்
சீனாவை பகிரங்கமாகக் கண்டிக்காதது அல்லது அதற்கு எதிராக மெளனம் காப்பது, மோதி அரசின் சமீபத்திய நிலைப்பாட்டை குறிக்கிறது.
உள்நாட்டு விவகாரங்களில் பிரதமரின் மெளனம் குறித்து நிபுணர்கள் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர்.
ஹாத்ரஸ் போன்ற ஒரு தீவிரமான விஷயத்தில் அவர் பேசியிருக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், நாட்டின் ஒவ்வொரு பிரச்சனை குறித்தும் பிரதமர் ஒரு அறிக்கையை வெளியிட அவசியமில்லை என்று வேறு சிலர் கூறுகிறார்கள்.
ஒருவேளை இரு தரப்பினரின் கருத்துக்களும் அவரவர் இடத்தில் சரியாக இருக்கலாம். ஆனால் சீன ஆக்கிரமிப்பு குறித்து அமைதியாக இருப்பது எவ்வளவு தூரம் சரியானது?
ஜூன் 15-16 தேதிகளில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இந்தியாவின் சில பகுதிகளை சீனா சட்டவிரோதமாகக் கைப்பற்றியதாகவும் தகவல்கள் வந்தன.
இதன் பின்னர், ஜூன் 19 அன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர், "நமது எல்லைக்குள் யாரும் நுழையவில்லை, நமது எல்லைச்சாவடி வேறு ஒருவரின் வசமும் இல்லை," என்று கூறினார்.
பெரும்பாலான விமர்சகர்கள், "எந்தவொரு ஊடுருவலையும் மறுப்பதற்கு ஒப்பான அறிக்கை இது" என்று கூறி தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். இந்த அறிக்கை தொடர்பாக காங்கிரஸ் கட்சி, பிரதமரை கடுமையாக சாடியது.
ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், அப்போதிலிருந்து இப்போது வரை மோதி அரசு ,சீனாவின் பெயரை நேரடியாக எடுக்கவில்லை.
பாதுகாப்பு அமைச்சகத்தின் வலைதளத்திலிருந்து ,2017 ஆம் ஆண்டு முதலான அமைச்சகத்தின் மாதாந்திர அறிக்கைகள் நீக்கப்பட்டுள்ளதாக, இந்திய செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
"லடாக்கில் 'ஒரு தரப்பான ஆக்கிரமிப்பு' பற்றி பேசும், ஒரு மாத அறிக்கையை சீனா நீக்கிய பின்னர், பாதுகாப்பு அமைச்சகம் அதன் வலைத்தளத்திலிருந்து , 2017 முதலான அனைத்து மாதாந்திர அறிக்கைகளையும் நீக்கியுள்ளது. இவற்றில் 2017 இல் டோக்லாம் நெருக்கடி காலம் தொடர்பான அறிக்கைகளும் அடங்கும். அவற்றில் இந்திய- சீன வீரர்களுக்கு இடையிலான தேக்க நிலை பற்றி எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை," என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கூறுகிறது.
இது குறித்து கருத்து தெரிவிக்க பாதுகாப்பு அமைச்சகமும், வெளியுறவு அமைச்சகமும் மறுத்துவிட்டன.
இந்தியாவின் உதவியற்ற நிலையா, ராஜதந்திரமா?
சீனாவுக்கு எதிரான இந்தியாவின் மெளனத்தின் ரகசியம் என்ன?
பிரதமர் நரேந்திர மோதி, சீனா குறித்து மெளனமாக இருப்பதோடு, விமர்சனம் செய்யும் பொறுப்பை இளைய அமைச்சர்களிடம் விட்டு விட்ட செயல்பாடு, மும்பையைச் சேர்ந்த வெளியுறவுக் கொள்கை சிந்தனைக் குழுவான கேட்வே ஹவுஸின் சர்வதேச பாதுகாப்பு நிபுணர் சமீர் பாட்டீலை ஆச்சரியப்படவில்லை.
அவர் அதை ராஜதந்திரத்தின் நுணுக்கங்களுடன் இணைக்கிறார்.
"பிரதமர் மோதி சீனாவுடனான உறவுகளுக்கு பெருமளவில் அரசியல் மூலதனத்தை செய்துள்ளார். நாளை சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா கட்டாயப்படுத்தப்பட்டால், அவரது ராஜதந்திர திறன்களை நிரூபிக்க அவருக்கு இடம் கிடைக்கும்," என்று பாட்டீல் கூறுகிறார்.
இந்திய முன்னாள் தூதரும் எழுத்தாளருமான ராஜீவ் டோக்ரா கூறுகையில், "ராஜதந்திரம் தண்டோரா அடித்து செய்யப்படுவதில்லை" என்கிறார்.
"ராஜதந்திரம் மெளனமாகவே செய்யப்படவேண்டும். இந்தியா-சீனா உறவு இப்போது ஒரு நுண்ணிய கட்டத்தை கடந்து வருகிறது. நீங்கள் குறிப்பிடும் பிரச்சனை விமர்சிக்கப்பட்டது என்பது சரிதான், ஆனால் அமைதியாக வேலை செய்யும் போது பதற்றம் குறைந்தால், படைவிலகல் வெற்றி பெற்றால், அது அனைவருக்குகான வெற்றி என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.
பதற்றங்களைக் குறைக்க இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்று சீன அரசாங்கமும் விரும்புகிறது என்று சீனாவின் ஆசிய விவகாரங்கள் குறித்த நிபுணர், பேராசிரியர் ஹுவாங் யூன் சாங் கருதுகிறார்.
"அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் சொல்வதை கேட்டு நடக்காமல் இந்தியா இருந்தால், இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட முடியும். ஆசியாவில் மட்டுமல்ல, உலகிலேயே இரண்டு பெரிய பொருளாதாரங்களாக உருவாக முடியும். சீனா இதற்கு நெருக்கமாக உள்ளது. இந்தியாவும் இந்த இலக்கை நெருங்க முடியும்,"என்று அவர் தெரிவிக்கிறார்.
மூத்த பத்திரிகையாளரும், வெளியுறவுக் கொள்கைகள் குறித்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாழிதழ் ஆசிரியருமான ரிஃஸ்வால் ஹசன் லஷ்கர் கூறுகையில், "மெய்யான கட்டுப்பாட்டு கோட்டில், சீனாவுடனான தற்போதைய பதற்றம் எந்த வகையிலும் அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்வதே இந்திய அரசின் தற்போதைய முன்னுரிமையாக இருக்கவேண்டும். ஏனென்றால் குறிப்பாக படை விலகல் மற்றும் பதற்றத்தை குறைக்கும் திசையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் இது முக்கியமாகிறது. இந்திய தலைவர்கள் சீனாவை நேரடியாக பெயரிடாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம், " என்று தெரிவிக்கிறார்.
ஷி ஜின்பிங் கூட இந்தியாவின் பெயரை எடுக்கவில்லை
இந்தியாவுக்கு எதிராக இதுவரை எந்த அறிக்கையையும் நேரடியாக வெளியிடாத சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் மீதும் நம் கவனத்தை ஈர்க்க சமீர் பாட்டீல் விரும்புகிறார்.
"இந்தியாவுக்கு எதிரான சீன வெளியுறவு அமைச்சகத்தின் பல அறிக்கைகளை நாங்கள் கண்டிருக்கிறோம். அதில் இந்தியா, அசல் கட்டுப்பாட்டு கோட்டை (எல்ஏசி) மீறியதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இதுபோன்ற எந்த அறிக்கையும் சீனாவின் பெரிய தலைவர்களிடமிருந்து வரவில்லை,"என்று அவர் கூறுகிறார்,
"இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பதற்றம் நிலவுகிறது. ஆனால் அந்த உறவு முறிந்துவிடவில்லை கூடவே இருநாடுகளும் முறையாக போரையும் அறிவிக்கவில்லை," என்று பாட்டீல் கூறுகிறார்.
எனவே இது, பிரதமர் நரேந்திர மோதிக்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும் இடையே முறையான அல்லது முறைசாரா உச்சிமாநாட்டின் சாத்தியத்தை உருவாக்குகிறதா?
இந்த ஆண்டு அநேகமாக அது நடக்காது என்று ரிஃஸ்வால் ஹசன் லஷ்கர் கூறுகிறார்.
"இந்த ஆண்டு முறைசாரா உச்சிமாநாடு நிகழும் சாத்தியக்கூறு மிகவும் குறைவாகவே உள்ளது. இரு தலைவர்களுக்கும் இடையே 18 தடவைகள் முறையான மற்றும் முறைசாரா சந்திப்புகள் நடந்துள்ளன" என்று அவர் தெரிவித்தார்.
2019 ல் ஒசாகாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோதி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரை சந்தித்தார். நவம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டின் போது இரு தலைவர்களும் சமீபத்திய பதற்றத்திற்குப் பிறகு முதல் முறையாக சந்திக்க உள்ளனர். ஆனால் இது ஒரு நிகர்நிலை சந்திப்பாக இருக்கும்.
ரஷ்யாவில் நடைபெறவுள்ள 12 வது பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியாவைத் தவிர, பிரேசில், சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவும் கலந்துகொள்ளும்.
சமீர் பாட்டீலின் கூற்றுப்படி, இரு தலைவர்களுக்கிடையில் உச்சிமாநாடு நடைபெறும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஏனெனில் சீனா இதுவரை எந்த சாதகமான அறிகுறிகளையும் வெளியிடவில்லை.
"டோக்லாம் நெருக்கடிக்குப் பிறகும், இருவருக்கும் இடையிலான சந்திப்பு நடந்தது. இருவரும் தங்கள் நிலைகளில் நெகிழ்வுத்தன்மையைக் காட்டினர்."என்று அவர் கூறுகிறார்.
வரும் நவம்பர் 17ஆம் தேதி காணொளி மூலமாக நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் , இந்திய பிரதமரும் சீன அதிபரும் நேருக்கு நேர் சந்திக்கும் தருணத்தை, அனைவரது கண்களும் தற்போது ஆவலுடன் எதிர்நோக்குகின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












