CSK vs KKR - கொல்கத்தா அணியின் வெற்றியை உறுதி செய்த சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் - வெல்லும் வித்தை மறந்து போனதா?

தோனி

பட மூலாதாரம், BCCI/IPL

    • எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கடைசி ஓவர், கடைசி பந்து வரை எதுவும் நடக்கலாம் என்பது டி20 ஓவர் போட்டிகள் குறித்த பொதுவான கணிப்பு. குறிப்பாக தோனி தலைமையிலான சிஎஸ்கே (சென்னை சூப்பர் கிங்ஸ்) அணி பல போட்டிகளில், தங்களின் அசாத்திய நம்பிக்கை மற்றும் திறமையால், நிச்சயம் தோல்வி என்ற நிலையை மாற்றி வெற்றி பெற்றுள்ளது.

ஆனால், புதன்கிழமை அபுதாபியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2020 ஐபிஎல் தொடரில், நான்காவது முறையாக தோல்வியடைந்துள்ள சென்னை அணி, தோல்வி நிலையில் இருந்து வெற்றி பெறும் தனது நீண்ட கால திறமையை மறந்துவிட்டதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

10 ஓவர்களின் முடிவில், ஒரு விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்த நிலையில், எஞ்சியுள்ள 10 ஓவர்களில் 78 ரன்களை எடுத்து சிஎஸ்கே அணி எளிதாக வென்றுவிடும் என்று எதிர்பார்த்த அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஆடுகளத்தில் தன்மை சற்று மாறியதும், சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக பிட்ச் இருந்ததும் சென்னை அணியின் தோல்விக்கு காரணங்களாக கூற முடியாது.

அபுதாபி ஆடுகளத்தில் இவை எதிர்பார்க்கப்பட்டவையே. அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தும், இலக்கு தொட்டு விடும் தூரத்தில் இருந்தும் வெற்றி கானல் நீராக போனதற்கு காரணங்கள் என்ன?

விவாதப்பொருளான வயதும், பங்களிப்பும்

இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பிலிருந்தே சிஎஸ்கே அணி வீரர்கள் பலருக்கும் 35 வயதுக்கு மேலாகி விட்டது என்பதும், வயது அணியின் வெற்றியை பாதிக்குமா என்றும் அதிகம் விவாதிக்கப்பட்டு வந்தது.

இதனை குறிக்கும் விதமாக பல ஊடகங்களில் Dad's army என்று சிஎஸ்கே அணி குறித்து குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில், முதல் போட்டியில் வென்ற பிறகு, மூன்று தொடர் தோல்விகளை சிஎஸ்கே சந்தித்தபோது மீண்டும் வயதின் காரணமாக பங்களிப்பு பாதிக்கப்படுகிறது என்று சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் வெளிவந்தது.

முரளி விஜய், தோனி, வாட்சன் மற்றும் ஜாதவ் ஆகிய பலரின் மீதும் விமர்சனங்கள் எழுந்தது.

சென்னை வீரர்

பட மூலாதாரம், Getty Images

கடந்த இரு போட்டிகளாக அரை சதம் எடுத்த வாட்சன் தற்போது பாராட்டப்படுகிறார். ஆனால் மற்ற வீரர்களின் மீதான விமர்சனங்கள் தொடர்கின்றன.

பங்களிப்புக்கும், வயதுக்கும் தொடர்பு இல்லை என்ற போதிலும், தொடர் தோல்விகளுக்கு வயது ஒரு முக்கிய காரணம் என்று குற்றம்சாட்டப்பட வாய்ப்புள்ளது.

ஏமாற்றமளிக்கும் பேட்ஸ்மேன்கள்

இந்த தொடரில் இதுவரை நான்கு முறை தோல்வியடைந்துள்ள சிஎஸ்கே அணி, பெரும்பாலும் தனது பேட்ஸ்மேன்களின் தவறுகளால் தான் தடுமாறி வருகிறது.

ஆரம்ப போட்டிகளில் சரியாக பங்களிக்காத தொடக்க வீரர் முரளி விஜய், அதற்கு பிறகு நடந்த போட்டிகளில்,களத்தில் விளையாடும் அணியில் இடம்பெறவில்லை.

அதேபோல் நடுவரிசை பேட்ஸ்மேன்களின் பங்களிப்பும் கவலை அளிக்கும் விதமாகவே இருந்து வருகிறது.

தோனியின் ஆட்டம் முன்பு இருந்தது போல இல்லை என தொடர்ந்து ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இப்போட்டியிலும் அவரது பேட்டிங்கில் பழைய வித்தையை காண முடியவில்லை.

ஆனால், அவரை விட, அதிகம் கவலை அளிப்பதாக இருந்தது கேதர் ஜாதவின் பேட்டிங்.

அண்மைய போட்டிகளில், சரியாக பங்களிக்கவில்லை என சமூகவலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வந்த கேதர் ஜாதவ் நிச்சயம் இந்த போட்டியை மறக்கவே விரும்புவார்.

12 பந்துகளில் 7 ரன்களை மட்டுமே எடுத்த அவர், போட்டி முடிந்தபிறகு ட்விட்டரில் அதிக அளவு ட்ரோல் செய்யப்படுகிறார்.

தினேஷ் கார்த்திக்கின் தலைமை பண்பு

தினேஷ் கார்த்திக்

பட மூலாதாரம், Getty Images

சென்னை அணி பேட்டிங் செய்தபோது, கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தனது பந்துவீச்சாளர்களை சாதுர்யமாக பயன்படுத்திய விதம் பரவலாக பாராட்டுகளை பெற்றுள்ளது.

கம்மின்ஸ், ஷிவம் மாவி ஆகிய இருவர் மட்டுமே பவர்பிளே ஓவர்களில் பயன்படுத்தப்பட, ஆட்டத்தின் முக்கிய கட்டத்துக்கு வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரேன் பயன்படுத்தப்பட்டனர். இது சென்னை அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

குறிப்பாக சுனில் நரேன் 11-வது ஓவரின் முடிவில்தான், தனது முதல் ஓவரை வீசினார். அந்த சூழலில், சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஷேன் வாட்சன் ஆட்டமிழந்தால், புதிதாக வரும் பேட்ஸ்மேன்கள் சுழல் பந்துவீச்சில் தடுமாறுவர் என்று தினேஷ் கார்த்திக் வகுத்த வியூகம் இறுதியில் வென்றது.

அதேபோல்,ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களும் மிக சிறப்பாக பந்து பந்துவீசினர்.

தனியாக நின்று அசத்திய ராகுல் திரிபாதி

சிஎஸ்கே அணியின் தோல்விக்கு மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தது ராகுல் திரிபாதியின் அதிரடி பேட்டிங் தான்.

மறுமுனையில் விக்கெட்கள் விழுந்து கொண்டே இருக்க, மிக சிறப்பாக விளையாடிய அவர், 51 பந்துகளில், 81 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று சிக்ஸர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும்.

ராகுல் திரிபாதி ஆரம்பத்தில் ஆட்டமிழந்திருந்தால், கொல்கத்தா அணியால் 150 ரன்களை கூட பெற்றிருக்க முடியாது. அவர் எடுத்த ரன்களே ஆட்டத்தின் வெற்றியை தீர்மானிக்க பெரிதும் உதவியது.

இறுதி ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகளை ஜடேஜா விளாசினார். ஆனால் இது ஆறுதல் பரிசாக மட்டுமே அமைந்தது. சிஎஸ்கே அணியின் பங்களிப்பு இப்படியே தொடர்ந்தால், இந்த ஐபிஎல் தொடரில் இப்படிப்பட்ட ஆறுதல் பரிசே மிஞ்சும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :