ரியா சக்ரவர்த்தியின் ஜாமீனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறது என்சிபி - அடுத்தது என்ன?

ரியா

பட மூலாதாரம், Getty Images

போதைப்பொருள் பயன்பாடு தொடர்புடைய வழக்கில் கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகை ரியா சக்ரவர்த்தி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை (என்சிபி) முடிவு செய்துள்ளது.

10 நாட்களுக்கு தினமும் அருகே உள்ள காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும், ஒரு லட்சம் ரொக்கப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் நாட்டை விட்டு செல்லக்கூடாது, வேறு சாட்சிகளை சந்திக்கக் கூடாது உள்ளிட்ட 9 நிபந்தனைகள் ரியா சக்ரவர்த்திக்கு விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி நீதிமன்ற நடைமுறைகள் முடிவடைந்தவுடன் மும்பை பைகுல்லா சிறையில் இருந்து ரியா சக்ரவர்த்தி புதன்கிழமை மாலை 5.30 மணியவில் வெளியே வந்தார்.

முன்னதாக, கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி கைது செய்யப்பட்ட ரியாவின் மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி சாரங் வி. கோத்வால், போதைப்பொருள் விற்பனையாளர்களின் சங்கிலித்தொடரில் ரியா இருக்கவில்லை என்றும் வேறு ஆதாயத்துக்காகவோ பணத்துக்காகவோ போதைப்பொருளை வாங்கி வேறு யாருக்கும் அவர் வழங்கியதாக தெரிய வரவில்லை என்றும் செப்டம்பர் 7ஆம் தேதி (புதன்கிழமை) அவரை ஜாமீனில் விடுதலை செய்யும் உத்தரவில் குறிப்பிட்டார்.

மேலும், அவருக்கு குற்றப்பின்னணி இல்லை என்றும் ஜாமீனில் விடுவிக்கப்படும் காலத்தில் அவர் தவறு செய்வதற்கான வாய்ப்பில்லை என நம்புவதற்கு காரணங்கள் உள்ளன என்றும் நீதிபதி தெரிவித்தார்.

"பிரபலங்கள், மாடல்கள் ஆகியோருக்கு எதிரான வழக்கை மிகக் கடுமையாக நடத்தி தண்டிக்கப்பட்டால்தான் சமூகத்தில் இந்த விவகாரம் முன்னுதாரணமாகும்" என்று என்சிபி சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், அதை ஏற்றுக் கொள்ள நீதிபதி கோத்வால் மறுத்து விட்டார்.

ரியா சகோதரருக்கு ஜாமீன் மறுப்பு

ரியாவுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, அவரது சகோதரர் ஷோவிக்கின் ஜாமீன் மனுவை நிராகரித்தார். இதேவேளை, சுஷாந்த் சிங்கின் சமையல்காரர் திபேஷ் சாவந்த், உதவியாளர் சாமுவேல் மிராண்டா ஆகியோர், தலா 50 ஆயிரம் ரூபாய் ரொக்க ஜாமீனில் செல்லலாம் என்று உத்தரவிட்டார்.

இந்த விவகாரத்தில் உத்தரவை பிறப்பிக்காமல் ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்குமாறு என்சிபி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நிபந்தனை அடிப்படையிலேயே ஜாமீன் வழங்கப்படுகிறது என்றும் கிரேட்டர் மும்பையை விட்டுச் செல்வதானால், வழக்கின் விசாரணை அதிகாரியிடம் ரியா உள்ளிட்டோர் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

செப்டம்பர் 29ஆம் தேதி விசாரித்து ஒத்திவைக்கப்பட்ட இந்த ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை பிறப்பிக்கும் முன்பாக, சுமார் 72 மணி நேரத்துக்கு இந்த மனுக்கள் மீதான வாதங்கள் நடந்துள்ளன.

முன்னதாக, ரியா சக்ரவர்த்தி, ஷோவிக் சக்ரவர்த்தி, அப்தெல் பஸித் பரிஹர், சாமுவேல் மிராண்டா, திபேஷ் சாவந்த் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களை மும்பை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதைத்ததொடர்ந்து அவர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

எத்தனை பேர் கைது?

இந்த வழக்கில் ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் உட்பட மொத்தம் 10 பேரை என்சிபி இதுவரை கைது செய்துள்ளது. இன்று ஜாமீன் பெற்றவர்களைத் தவிர, இந்த வழக்கில் போதைப்பொருள் விநியோகம் செய்ததாக ஸைத் விலதாரா, பஸித் பரிஹார், அனுஜ் கேஸ்வானி, கைசன் இப்ராஹிம், அப்பாஸ் அலி லக்கானி, கர்ன் அரோரா ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்தைத் தொடர்ந்து, அந்த வழக்கை இந்திய புலனாய்வுத்துறையான சிபிஐ விசாரித்து வருகிறது. அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது அளவுக்கு அதிகமான போதைப்பொருள் பயன்பாடுக்கு ஆளாகச் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று பரவலாக தகவல்கள் கூறப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில், டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவர் சுதிர் குப்தா தலைமையிலான மருத்துவ குழு அவரது உடல் பரிசோதனை தொடர்பான தகவலை சீல் வைத்த கவரில் சிபிஐயிடம் வழங்கியது.

எய்ம்ஸ் மருத்துவரின் சர்ச்சை தகவல்

ஆனால், ஒரு தனியார் தொலைக்காட்சி நிருபர் டாக்டர் சுதிர் குப்தாவிடம் பேசியதாக கூறப்படும் ஒரு செல்பேசி உரையாடலில், "மும்பை காவல்துறை அவசரகதியில் சுஷாந்த் சிங்கின் பிரேத பரிசோதனையை நடத்த நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதை செய்தவர்கள் இளநிலை மருத்துவர்கள், அந்த பிரேத பரிசோதனை காட்சிள் விடியோவில் பதிவு செய்யப்படவில்லை" என்று பேசியதாக குரல்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின.

இந்த காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிறகு, வேறு சில ஊடகங்களில் டாக்டர் சுதீர் குப்தா பேசியபோது, சுஷாந்த் சிங் கொல்லப்படவில்லை என கூறியதாக தகவல்கள் வெளி வந்தன.

இது குறித்து சுதிர் குப்தாவிடம் பிபிசி பேசியபோது, தங்களின் ஆய்வு அறிக்கையை சிபிஐயிடம் தந்துள்ளோம். அவர்கள்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, எய்ம்ஸ் ஆய்வுக்குழு அறிக்கையில் திருப்தியில்லை என்று சுஷாந்தின் தந்தை சார்பாக அவரது வழக்கறிஞர் விகாஸ் சிங் நீதிமன்றத்தில் முறையிட்டார். இது தொடர்பாக சிபிஐக்கும் கடிதம் எழுதப்பட்டது.

இதேபோல, பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுப்பிரமணியன் சுவாமியும் எய்ம்ஸ் அறிக்கை கசிந்த விவகாரத்தில் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஊடகங்களில் பரவியது தொடர்பாக சுகாதாரத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ரியா

பட மூலாதாரம், Rhea Instagram

56 பேரிடம் விசாரணை

சுஷாந்த் சிங் உயிரிழந்தது தொடர்பான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பதற்கு முன்பாக, மும்பை காவல்துறை அவரது உயிரிழப்பு தொடர்பான விசாரணையின்போது மொத்தம் 56 பேரின் வாக்குமூலத்தை பதிவு செய்தது.ஆனால், அது சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட கோணத்திலேயே நடந்தது என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ரியாவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் அளித்த ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக என்சிபி வழக்கறிஞரும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான அனில் சிங் தெரிவித்தார். சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக இன்னும் பல கேள்விகளுக்கு விடை தேட வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

மும்பையில் வசித்து வந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (34) அவரது குடியிருப்பு வளாகத்தில் கடந்த ஜூன் 14ஆம் தேதி உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக தொடக்கத்தில் பலர் பேசினாலும், அவரது காதலி ரியா சக்ரவர்த்திதான் அவரை தற்கொலைக்கு தூண்டியிருக்க வேண்டும் என்று சுஷாந்த் சிங்கின் தந்தை குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக பிஹாரில் உள்ள காவல் நிலையத்தில் சுஷாந்தின் தந்தை புகார் பதிவு செய்ததை அடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு அம்மாநில அரசு பரிந்துரை செய்தது. அதை எதிர்த்து ரியா சக்ரவர்த்தியும் மகாராஷ்டிரா அரசும் உச்ச நீதிமன்றத்தை அணுகியபோதும், பிஹார் மாநில அரசு சுஷாந்த் சிங் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதில் தவறு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், மும்பை காவல்துறை விசாரித்து வந்த சுஷாந்த் சிங்கின் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அதன் விசாரணையில் சுஷாந்த் சிங்குக்கு போதைப்பொருள் பழக்கம் இருந்தாகவும், அவர் போதைப்பொருள் பயன்படுத்த ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் ஷோவிக் உள்ளிட்டோர் உதவியதாகவும் தெரிய வந்ததாக சிபிஐ கூறுகிறது. இந்த விவகாரத்தில் சட்ட விரோத போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து, தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை தலையிட்டு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்துள்ளது. அதில் ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: