சீனாவின் ஆதிக்கம்: இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆலோசனை

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மையை மதித்து பிரச்னைகளுக்கு அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்று டோக்யோவில் நடைபெற்ற நான்கு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு ஜப்பான் தலைநகர் டோக்யோவில் தொடங்கியுள்ளது.

இக்குழு 'குவாட்ரிலேட்டரல் இனிஷியேடிவ்' என்று அழைக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவில் இருந்து ஜப்பான் கிளம்பும் முன்பு இது குறித்து நீண்ட காலமாகவே திட்டமிடப்பட்டு வந்தது என்று கூறியுள்ளார், அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பொம்பேயோ.

இந்தியா மற்றும் சீனா இடையில் ஜூன் மாதம் நடந்த எல்லை மோதல் இரு நாட்டு உறவை கடுமையாக பாதித்துள்ளது.

இந்த சூழலில் சீனாவின் ஆதிக்கம் தொடர்பாக நான்கு நாடுகளின் அமைச்சர்கள் விரிவாக விவாதித்தனர். இந்த கூட்டத்தில் பேசிய இந்திய அமைச்சர் ஜெய்சங்கர், குவாட் உறுப்பு நாடுகள் பகிரப்பட்ட மதிப்புகள் கொண்ட துடிப்பான மற்றும் பன்மைத்துவ ஜனநாயகங்களாக விளங்கி வருகின்றன என்று தெரிவித்தார்.

இந்த நாடுகள் சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பராமரிப்பின் முக்கியத்துவத்தை கூட்டாக உறுதிப்படுத்தியுள்ளன என்றும் சட்டங்களின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்துவதில் இந்த நாடுகள் உறுதியாக உள்ளன என்றும் கூறினார்.

பிராந்தியத்தில் நியாயமான மற்றும் முக்கிய நலன்களைக் கொண்ட அனைத்து நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை முன்னேற்றுவதே குவாட் நாடுகளின் நோக்கம் என்றும், இந்தோ-பசிபிக் கருத்தாக்கம் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

சமீப மாதங்களில் அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான உறவு பல பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. 2018 முதலே ஒருவர் நாட்டு உற்பத்தி பொருட்களுக்கு இன்னொருவர் வரியை அதிகரிப்பது மாறிமாறி நிகழ்ந்ததால் வர்த்தக மோதல் முற்றியது.

இதன் காரணமாக சீனாவைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் இருக்கும் தனது நட்பு நாடுகளுடனான ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டிய நிலை அமெரிக்காவுக்கு ஏற்பட்டது.

(L-R) India's Foreign Minister Subrahmanyam Jaishankar, Japan's Foreign Minister Toshimitsu Motegi, Japan's Prime Minister Yoshihide Suga, Australia's Foreign Minister Marise Payne and US Secretary of State Mike Pompeo

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜப்பானின் புதிய பிரதமர் யோஷீஹிடே சுகாவும் (நடுவில்) இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

சீனாவில் பணியாற்றி வந்த கடைசி இரு ஆஸ்திரேலிய செய்தியாளர்களையும் சீன அரசு செப்டம்பரில் வெளியேற்றியது. தங்களைப் பற்றிய தவறான, எதிர்மறை பிம்பத்தை உருவாக்கும் நோக்கில் செய்தி வெளியிடுவதாகச் சீனா கூறியது. அவர்கள் மீதான நடவடிக்கைக்கு சீனாவில் இருந்த ஆஸ்திரிலேய வெளியுறவு அதிகாரிகள் தடையாக இருந்தனர் என்று சீனா கூறியதால் இரு நாடுகளுக்கும் இடையே கசப்புணர்வு உண்டாகியுள்ளது.

யார், என்ன விவாதிக்கிறார்கள்?

ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டோஷிமிட்சூ மொடேகி, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மாரைஸ் பெய்ன் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் கொரோனா வைரஸ் பரவல், இணையவழிப் பாதுகாப்பு உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிறரை சேர்த்துக் கொள்ள விரும்பாத இந்தக் குழுவின் நாடுகள், தங்கள் குழுவில் இல்லாத பிற நாடுகளை இலக்கு வைப்பதற்கு எதிராக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

"அந்தந்த நாடுகளுக்கு இடையே இருக்கும் பொதுவான நலன்கள், அந்த பிராந்தியத்தில் நிலைத்தன்மை மற்றும் அமைதியான சூழ்நிலையை நிலைநாட்டுவதற்கான மேலதிக நடவடிக்கைகள் ஆகியவை குறித்து சம்பந்தப்பட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அவற்றுக்கு எதிரான விளைவுகளை தரும் வகையில் எதையும் செய்யக்கூடாது," என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

'குவாட்ரிலேட்டரல் இனிஷியேடிவ்' எப்போது தொடங்கப்பட்டது?

ஆங்கிலத்தில் நால்வர் குழு என்று பொருள்படும் 'குவாட்' (Quad) எனும் பெயரில் இந்த அலுவல்பூர்வமற்ற குழு 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தற்பொழுது 'குவாட்ரிலேட்டரல் இனிஷியேடிவ்' என்று அழைக்கப்படும் இந்தியா, ஜப்பான் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இக்குழுவை உண்டாக்க பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த கூட்டத்தில் 2007ஆம் ஆண்டு மே மாதம் முடிவு செய்யப்பட்டது.

இந்தக் குழுவை அமைப்பதற்கு முன்முயற்சி எடுத்து, உந்துதலாக இருந்தவர் சமீபத்தில் பதவி விலகிய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே.

சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த குழு நிறுவப்பட்டதாக அப்போது வல்லுநர்கள் கருதினார்கள்.

An Indian Army convoy moves along a highway leading to Ladakh, at Gagangeer on June 17, 2020 in Ganderbal, India.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா - சீனா இடையே எல்லை பதற்றம் நிலவி வருகிறது. பல கட்ட பேச்சுவார்த்தைகள் முழுதும் பலனளிக்கவில்லை.

இது அலுவல்பூர்வமான குழுவாக இல்லாவிட்டாலும், சீனா இதற்கு அலுவல்பூர்வமாக எதிர்ப்பை வெளியிட்டது.

எனினும் தங்களுக்குள் இருக்கும் மூலோபாய ஒத்துழைப்பை மேம்படுத்துவதே தங்கள் நோக்கம் என்றும் எந்த ஒரு நாட்டையும் இலக்குவைப்பது அல்ல என்றும் இந்த குழுவினர் தெரிவித்தனர்.

அதன்பின்பு இந்த குழுவின் நடவடிக்கைகள் பெரிய அளவில் எதுவும் இல்லாமல் இருந்த சூழலில் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நான்கு நாடுகளும் மீண்டும் அணி சேர்ந்து இயங்கத் தொடங்கின.

சமீபத்தில் ஜப்பான் பிரதமராக இருந்த ஷின்சோ அபே பதவி விலகியபின், யோஷீஹிடே சுகா புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார் .

அபே அளவுக்கு அவரும் இந்தக் குழுவை முன்னெடுத்துச் செல்வதில் பெரிய அளவு ஆர்வம் காட்டுவாரா என்று சந்தேகம் எழுந்தது.

வெளியுறவு விவகாரங்களில் மிகவும் குறைவான அனுபவமே உள்ள சுகா உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவதே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளார் என்று பிபிசியின் செய்தியாளர் ரூபர்ட் விங்ஃபீல்டு ஹயேஸ் தெரிவிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :