வர்மா - திரை விமர்சனம்

வர்மா

பட மூலாதாரம், Varma movie

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

நடிகர்கள்: துருவ் விக்ரம், மேகா சவுத்ரி, ஈஸ்வரி ராவ், ரைஸா வில்சன், ரமணா; ஒளிப்பதிவு: சுகுமார்; இசை: ராதன்; இயக்கம்: பாலா.

விஜய் தேவரகொண்டா நடித்து தெலுங்கில் 2017ஆம் ஆண்டில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மற்றுமொரு தமிழ் ரீ-மேக்.

துருவ் விக்ரமை வைத்து அர்ஜுன் ரெட்டி படம் ,பாலாவின் இயக்கத்தில் தமிழில் ரீ - மேக் செய்யப்பட்டது. ஆனால், அந்தப் படத்தில் திருப்தி இல்லாததால், கிரீஷாயாவை இயக்குநராக வைத்து, "ஆதித்ய வர்மா" என்ற பெயரில் அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் தமிழில் வெளியானது. இப்போது இயக்குநர் பாலா, தான் இயக்கிய "வர்மா" படத்தை ஓடிடியில் வெளியிட்டிருக்கிறார்.

ஏற்கெனவே தெலுங்கிலும் தமிழிலும் பார்த்துவிட்ட அதே கதைதான். மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும் வர்மா (துருவ் விக்ரம்) தான் விரும்பியதை அடைய வேண்டுமென்ற எண்ணம் கொண்டவன். கோபத்தைக் கையாளுவதில் பிரச்சனைகளையும் கொண்டவன். மருத்துவ கல்லூரியில் புதிதாக வந்து சேரும் சகமாணவி மேகாவை (மேகா சவுத்ரி) காதலிக்கிறான். அவளும் காதலிக்கிறாள்.

ஆனால், மேகாவின் தந்தை ஜாதியைக் காரணம் காட்டி திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாமல், வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கிறார். மதுவுக்கும் போதை மருந்திற்கும் அடிமையாகும் வர்மா, முடிவில் மேகாவோடு சேர்ந்தாரா என்பது மீதிக் கதை.

அர்ஜுன் ரெட்டியிலிருந்தும் ஏற்கெனவே வெளிவந்த தமிழ் ரீமேக்கிலிருந்தும் சில இடங்களில் வேறுபடுகிறது படம். அர்ஜுன் ரெட்டியில் கதாநாயகியின் சம்மதம் இல்லாமலேயே காதலிக்கச் செய்வான் கதாநாயகன். இந்தப் படத்தில் கதாநாயகிக்கும் சற்று விருப்பம் இருப்பதைப் போல காட்டியிருக்கிறார்கள்.

ஆதித்ய வர்மா படத்தில் பாட்டி பாத்திரம் ஒன்று உண்டு. இந்தப் படத்தில் அந்தப் பாத்திரம் இல்லை. பதிலாக, பவானி என்ற பெயரில் வேலை பார்க்கும் பெண் ஒருவரின் பாத்திரம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

"ஆதித்ய வர்மா" படத்தில் பாட்டி இறந்து போனதும் நாயகன் திருந்திவிடுவான். இந்தப் படத்தில் தந்தை இறந்துபோனதும் நான்கைந்து உடற்பயிற்சிகளைச் செய்து நாயகன் திருந்தி விடுகிறார்.

சொல்வதற்குப் புதிதாக ஏதுமில்லை. அர்ஜுன் ரெட்டி, ஆதித்ய வர்மா ஆகிய படங்களில் இருந்த எல்லா பிரச்சனைகளும் இந்தப் படத்திலும் உண்டு. கதாநாயகனை உலகில் எங்குமே இல்லாத அதிசய குணமுள்ளவனாக, அவனுக்காக எல்லோரும் எல்லாவற்றையும் செய்வதாகக் காட்டியிருப்பது இந்தப் படத்திலும் கடும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. கதாநாயகன் அதுவரை என்ன செய்துவிட்டார் என்று எல்லோரும் அவருக்கு பணிந்து போகிறார்கள், அவர் என்ன செய்தாலும் தாங்கிக் கொள்கிறார்கள் எனத் தெரியவில்லை.

ஆதித்ய வர்மாவுக்கு முன்பே எடுக்கப்பட்ட படம் என்பதால், ஒரு புதுமுக நடிகராக துருவ் விக்ரமைப் பார்க்க முடிகிறது. கதாநாயகியாக நடித்திருக்கும் மேகா சவுத்ரிக்கும் நாயகனுக்கும் சுத்தமாக கெமிஸ்ட்ரி என்பதே கிடையாது. அதேபோல ரைஸா வில்சனின் பாத்திரமும் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் போய்விடுகிறது.

படத்தின் நீளம் மொத்தமே 2 மணி நேரம்தான் என்பதால், காட்சிகள் படுவேகமாக, துண்டுதுண்டாக நகர்கின்றன. பின்னணி இசையில் புதுமை ஏதும் இல்லை. சில பாடல்களில் சில வரிகள் மட்டும் மனதில் நிற்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: