சைலன்ஸ் - சினிமா விமர்சனம்

மாதவன்

பட மூலாதாரம், Silence Movie

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

அமெஸான் பிரைமில் இந்த கோவிட் ஊரடங்கு காலத்தில் வெளியான 'பொன்மகள் வந்தாள்', 'பென்குயின்' ஆகிய இரண்டு படங்களுமே மிகச் சுமாரான த்ரில்லர்கள். இப்போது மூன்றாவதாக மீண்டும் ஒரு த்ரில்லர்.

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடக்கிறது கதை. 1970களின் துவக்கத்தில் அங்கே ஒரு பண்ணை வீட்டில் மர்மமான முறையில் இருவர் இறந்துபோகின்றனர். அந்த வீட்டில் உள்ள ஒரு ஓவியத்தைத் தேடி பிரபல இசைக் கலைஞரான ஆண்டனியும் (மாதவன்) அவரது காதலியான சாக்ஷியும் (அனுஷ்கா) வருகின்றனர். அந்த வீட்டிற்குள் வைத்து ஆண்டனி கொல்லப்படுகிறார். இந்தக் கொலையைத் துப்பறிய வருகிறார் சியாட்டில் நகர காவல்துறையைச் சேர்ந்த மகாலட்சுமி (அஞ்சலி). இதற்கு நடுவில் சியாட்டில் நகரில் பல இளம் பெண்கள் காணாமல் போகிறார்கள். இப்படி பெண்கள் காணாமல் போவதற்கும் ஆண்டனி கொலைக்கும் தொடர்பு ஏதாவது இருக்கிறதா, ஆண்டனி ஏன் கொல்லப்படுகிறார், இதன் பின்னணியில் இருப்பது யார் என்பதுதான் மீதிக் கதை.

கதையின் துவக்கம் சிறப்பாகவே இருக்கிறது. திகிலும் மர்மமும் நிறைந்த ஒரு படம் எப்படி துவங்குமோ, அப்படித்தான் ஆரம்பிக்கிறது. ஆனால், கதை நகர நகர ரொம்பவுமே சோதிக்கிறார்கள். ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் சின்ன ஆர்வமும் காற்றில் கரைந்துவிடுகிறது.

இந்தப் படத்தில் இரண்டு பலவீனங்கள். ஒன்று, திரைக்கதை. மற்றொன்று நடிப்பு. அடுத்தடுத்து எதிர்பார்க்கக்கூடிய காட்சிகள், ஏமாற்றத்தைத் தரும் திருப்பங்கள், படத்தோடு எந்தவிதத்திலும் ஒன்றவே முடியாத அளவுக்கு உணர்வே இல்லாத தருணங்கள் என நகர்கிறது திரைக்கதை.

நடிப்பைப் பொறுத்தவரை மாதவன், அஞ்சலி, அனுஷ்கா என நல்ல நடிகர்கள் இருந்தும், யாருடைய நடிப்பும் பெரிதாக கவரவேயில்லை. மாதவனும் அனுஷ்காவும் சில காட்சிகளில் பரவாயில்லை. அஞ்சலி மொத்தமாக சொதப்பியிருக்கிறார். காவல்துறை உயரதிகாரியாக வரும் மைக்கல் மேட்ஸன், தன்னுடைய கேலிக்குரிய நடிப்பால் மொத்தப் படத்தையும் தரைமட்டமாக்கியிருக்கிறார்.

சில பாடல்கள் இருந்தாலும் மனதில் ஏதும் ஒட்டவில்லை. பின்னணி இசையைப் பொறுத்தவரை, ஒரே மாதிரியான இசையைத் திரும்பத் திரும்பக் கேட்பதைப்போல இருக்கிறது. படம் தமிழிலும் தெலுங்கிலும் எடுக்கப்பட்ட படம் என்று சொன்னாலும், டப்பிங் படம் பார்க்கும் உணர்வுதான் ஏற்படுகிறது.

பெண்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் த்ரில்லர்களை எல்லாம் இவ்வளவு மோசமாகத்தான் எடுக்க வேண்டுமென ஏதாவது விதி இருக்கிறதா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: