இந்திய அரசியல் தலைவர்கள், அதிகாரிகளை வேவு பார்க்கும் சீனா - உண்மை நிலவரம் என்ன? யாருக்கு பாதிப்பு?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், சல்மான் ராவி
- பதவி, பிபிசி செய்தியாளர்
சீனா ஏன் வேவு பார்க்கிறது? இந்த கேள்வி இந்தியா மட்டுமின்றி உலக அரங்கிலும் பலவித கவலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அதுவும் இந்தியாவில் குறிப்பாக சுமார் 10 ஆயிரம் பேரை சீனாவின் ஷென்ஸெனைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஜென்ஹுவா வேவு பார்ப்பதாக இந்திய நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட புலனாய்வுச் செய்தியில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த நிறுவனத்தின் தொலைத்தொடர்புகள், சீன அரசாங்கத்துடன் இணைக்கப்பட்டிருப்பதாக அந்த நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.
இந்திய குடியரசு தலைவர், பிரதமர், இந்திய கேபினட் அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள், முப்படை தலைமைத் தளபதி, முப்படை தளபதிகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், பிரபல தொழிலதிபர்கள் என ஒரு பெரிய பட்டியலில் இருப்பவர்கள், சீன நிறுவனத்தால் வேவு பார்க்கப்பட்டுள்ளதாக அந்த நாளிதழின் புலனாய்வுச் செய்தி விவரிக்கிறது.
இந்த பட்டியலில், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர்கள், கிராம தலைவர்கள் கூட இருப்பதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட சீன நிறுவனத்தை அறிய இந்தியன் எக்ஸ்பிரஸ் முற்பட்டதாகவும் ஆனால், அந்த நிறுவனத்தின் இணையதளம் பிறகு மூடப்பட்டதாகவும் அந்த நாளிதழ் கூறுகிறது.
ஆனால், வேவு பார்க்கப்படும் நாடுகள் பட்டியலில், இந்தியா மட்டுமின்றி பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருப்பவர்களும் உள்ளனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தி போலவே, லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி மெயில் நாளிதழ், பிரிட்டனில் அரசி, பிரதமர் உள்பட 40 ஆயிரம் பிரபலங்கள் வேவு பார்க்கப்பட்டதாகக் கூறி அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில், பிரபல ஏபிசி ஊடக நிறுவனம், அதன் தளங்களில் அந்நாட்டின் அரசுத்துறைகளில் முக்கிய பதவிகளை வகிக்கும் 35 ஆயிரம் பேர் வேவு பார்க்கப்படுவதாகக் கூறி செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Reuters
டிஜிட்டல் வேவு பார்ப்பது சாத்தியமா?
பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர், டிஜிட்டல் யுகத்தின் பயன்களை சீனா இப்போது அமல்படுத்தி வருகிறது என்று கூறினார்.
இதேவேளை காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சூர்ஜிவாலா, மிகவும் கடுமையான இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோதி முன்பே அறிந்திருந்தாரா?" என்று கேள்வி எழுப்புகிறார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்ட டிவிட்டர் கருத்தில், "இந்தியா அதன் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நலன்களை பாதுகாத்து வருகிறது. ஆனால், ஏன் அதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் மீண்டும், மீண்டும் தோல்வியைத் தழுவுகிறது?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் கொள்கைகளில் செல்வாக்கை பயன்படுத்தும் வகையில் சீன நிறுவனம் செயல்பட்டதா என்பதை அறிய விரும்புவதாகவும் ரந்தீப் சூர்ஜிவாலா குறிப்பிட்டுள்ளார்.
சீனாவுக்கு சாதகமாக இந்தியாவில் யாரெல்லாம் உளவு பார்த்தார்கள் என்ற கேள்வி எழும்போது, சமீபத்திய ஆண்டுகளாக இந்தியாவுக்கு படிப்பதற்காக வந்த பல சீன மாணவர்கள் மீது அனைவரது பார்வையும் திரும்புகிறது.
ஏனென்றால், வேவு பார்க்கப்பட்டதாக கோரப்படும் நாடுகளில் வெளிவந்துள்ள நாளிதழ்கள் அனைத்திலும் சீனாவைச் சேர்ந்த தொழில்முறை நபர்களால்தான் உளவுத்தகவல்கள் சீனாவுக்கு பகிரப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Reuters
இந்திய ஆய்வு அமைப்பின் கண்டுபிடிப்பு
டெல்லியில் இருந்து இயங்கி வரும் அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு நடத்திய சமீபத்திய ஆய்வில், சீனா தேசிய உளவு சட்டம் ஒன்றை 2017இல் நடைமுறைப்படுத்தியிருப்பதை அறிந்தது. அந்த சட்டத்தின் 7 மற்றும் 14ஆவது விதிகள், சீன உளவு அமைப்புகளுடன் சேர்ந்து சீன நிறுவனங்களும் குடிமக்களும் பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை இந்திய ஆய்வு அமைப்பு கண்டறிந்தது.
அந்த அமைப்பின் கேந்திர விவகாரங்கள் ஆய்வுக்கான தலைமை நிர்வாகி ஹர்ஷா பந்த் பிபிசியிடம் பேசும்போது, "சீன உளவு சட்டத்துக்கு உட்பட்ட அந்நாட்டு குடிமக்கள் உலக அளவில் இருப்பதால் அவர்களின் செயல்பாடுகள் சந்தேகத்துக்குரியவையாக பார்க்கப்படுகின்றன" என்று தெரிவித்தார்.
"சீனா முதலில் தன்னை தற்காத்துக் கொள்கிறது. அதாவது அங்கு அந்நாட்டு அரசின் அனுமதியில்லாமல் ஒரு இணையதள பக்கத்தை கூட திறக்க முடியாது. அந்த அளவுக்கு தனது நாட்டு இணையதளத்துக்குள் வெளியில் உள்ள எந்தவொரு நாடாலும் அனுமதியின்றி ஊடுருவவோ கண்காணிக்கவோ முடியாது" என்று பந்த் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலக அளவில் தகவல்களை தேட இன்றைய காலகட்டத்தில் முடிகிறது. "தரவுகள் வங்கி" உலக அளவில் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆனால், ஒரு நாட்டின் பிரபலங்களின் இணைய பயன்பாடுகளுக்குள் ஊடுருவி உளவுத்தகவல் சேகரிக்கும் முறை, தொழில்சார்ந்தது கிடையாது. அறிவியல்பூர்வமாகவோ கல்விப்பரிமாற்ற முறையிலோ நடக்கும் உளவுத்தகவல் பரிமாற்றம் சில தசாப்தங்களுக்கு முன்பிருந்தே வழக்கத்தில் இருந்தது. அது ஆழமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பந்த் குறிப்பிட்டார்.
"தற்போதைய நாளிதழ் தகவலை ஒதுக்குவதற்கு இல்லை என்றாலும், இது இந்தியாவுக்கு மிகப்பெரிய கவலை தரும் சம்பவமாக இருக்காது. ஆனாலும் இதை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடிய விஷயமாகவும் பார்க்கக் கூடாது" என்று பந்த் தெரிவித்தார்.
தரவுகள் சுரங்கம்
சைபர் பாதுகாப்பு நிபுணரான ரக்ஷித் டாண்டன், தரவுகள் சுரங்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு என்பது சமீப காலமாக மிகப்பெரிய தொழிலாக மாறி விட்டன. அவை செயலிகள், இணையதள பக்கங்கள் என அனைத்திலும் ஊடுருவி தகவல்களை தானியங்கியாக பெற்றுத்தர உதவுகின்றன. மேலும், தனி நபர்களின் தரவுகளை விற்கவும் அவை வாய்ப்பாக பயன்படுத்தப்படுகின்றன என்று கூறினார்.
இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தாமல் இந்திய அரசு, தரவுகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த தனது சட்டத்தை கடுமையாக்க வேண்டும் அல்லது கடுமையான புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்று ரக்ஷித் வலியுறுத்துகிறார்.
பிற செய்திகள்:
- கழுத்தை சுற்றி பயணியின் முகத்தை மறைத்த மலைப்பாம்பு - இங்கிலாந்து பேருந்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம்
- கிழக்கு லடாக் எல்லை பதற்றம்: "தவறுகளை திருத்திக் கொண்டு பின்வாங்குங்கள்" - இந்தியாவை மீண்டும் எச்சரிக்கும் சீனா
- சசிகலா விடுதலை விவகாரம்: அபராதத்தொகை செலுத்த அனுமதிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு
- தமிழ்நாட்டில் திருடப்பட்ட 15ஆம் நூற்றாண்டு சிலைகள் லண்டனில் மீட்கப்பட்டது எப்படி?
- ஜப்பான் புதிய பிரதமர் யோஷீஹிடே சுகா யார்? - 10 முக்கிய தகவல்கள்
- காஷ்மீர் வரைபடத்தை காட்டி இந்தியாவை கோபப்படுத்திய பாகிஸ்தான் தரப்பு
- இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 'எப்போது கிடைக்கும் எனக் கூறுவது கடினம்'
- 22,000 ஆண்டுகளுக்கு முந்தைய பனி யுகக் கரடியின் உடல் கண்டெடுப்பு
- 'எல்லையில் சீனா படைகளை குவித்து வருகிறது' - இந்திய பாதுகாப்பு அமைச்சர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












