ஐபிஎல் 2020: MI Vs SRH - 37 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

மும்பை அணி

பட மூலாதாரம், BCCI / IPL

இந்த ஐபிஎல் சீசனில் பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவால் தரக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது ஷார்ஜா மைதானம். 20 ஓவர்களில் 200 ரன்கள் என்பது குறைந்தபட்சம் எனும் அளவுக்கு போட்டி போட்டுக்கொண்டு அனைத்து அணிகளும் இங்கே ரன்வேட்டையை நடத்திவருகின்றன. இப்படியொரு சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் இன்றைய தினம் ஐதராபாத் அணியை வீழ்த்தியிருக்கிறது.

மும்பை அணி நிர்ணயித்த 209 ரன்கள் எனும் இலக்கை துரத்திய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்தது.

எங்கே கோட்டை விட்டது ஹைதரபாத் அணி?

வார்னர்

பட மூலாதாரம், BCCI / IPL

முதல் 10 ஓவர்களில் ஹைதரபாத் எடுத்த ரன்கள் 2 விக்கெட் இழப்புக்கு 94. அந்த அணியில் டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் என இரு நட்சத்திர பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்தனர். முதல் பாதியின் முடிவில் ஹைதரபாத் அணி இலக்கை நோக்கி சரியாக பயணித்தது.

13-வது ஆட்டம் மெல்ல மெல்ல மும்பை இந்தியன்ஸ் அணியிடம் நகரத்துவங்கியது. நியூசிலாந்து வீரர் ட்ரென்ட் போல்ட் பந்தில் கேன் வில்லியம்சன் அவுட் ஆனார். அதன்பிறகு அனுப்பவமற்ற மிடில் ஆர்டரை வைத்துக்கொண்டு வார்னர் ரன்கள் குவிக்க வேண்டிய சூழல். மும்பை பந்துவீச்சாளர்கள் ரன் குவிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு வந்தனர். இதனால் ரன் ரேட் எகிறதுவங்கியது.

ஐதராபாத் அணி

பட மூலாதாரம், BCCI / IPL

கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 70 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலுக்கு ஹைதரபாத் அணி தள்ளப்பட்டது. அப்போது பட்டின்சன் பந்தில் கேப்டன் வார்னர் வீழ்ந்தார். அவர் 44 பந்தில் 60 ரன்கள் எடுத்திருந்தார். அதன்பிறகு வந்த வீரர்கள் மும்பை அணிக்கு எதிராக ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறினர். இறுதியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது ஹைதராபாத். போல்ட், பட்டின்சன், பும்ரா என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

முன்னதாக முதலில் பேட்டிங் பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் ஷர்மாவை முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்கச் செய்து அதிர்ச்சி தந்தார் சந்தீப் ஷர்மா. எனினும் அதன் பிறகு வந்த அனைத்து பேட்ஸ்மேன்களும் தங்களின் பணியை செவ்வனே செய்தனர். ரன் ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டனர்.

குறிப்பாக சித்தார்த் கவுல் வீசிய 20வது ஓவரில் க்ரூனால் பாண்டியா 2 சிக்ஸர்கள் 2 பௌண்டரிகள் விளாசி அசத்தினார். மும்பை அணியில் அதிகபட்சமாக விக்கேட்கீப்பர் டீ காக் 39 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார்.

மும்பை இந்த வெற்றியின் மூலம் நல்ல ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: