சிஎஸ்கே பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பினார் - ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார்

சுரேஷ் ரெய்னா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம் - சுரேஷ் ரெய்னா

சிஎஸ்கே பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களால் வீடு திரும்பியுள்ளார் என சிஎஸ்கே நிர்வாகம் கூறி உள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா விளையாட மாட்டார் என CSK அணியின் CEO விஸ்வநாதன் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஐபிஎல் 2020 சீசனில் விளையாடும் மற்றொரு வாய்ப்பையும் இழந்துள்ளார்.

கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 9ம் தேதி தொடங்குகிறது. இதற்காக, IPL தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் பயிற்சி எடுத்துக் கொண்டனர்

இதையடுத்து, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் கடந்த 21 ஆம் தேதி தனி விமானத்தில் துபாய் புறப்பட்டு சென்றனர். அங்கு வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு துபைக்கு வந்ததால் அந்த நாட்டு கொரோனா பரவல் தடுப்பு விதிகளின்படி அவர்கள் ஒரு வார காலத்துக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீங்கலாக மற்ற ஐபிஎல் அணிகள் ஒரு வார தனிமைப்படுத்தல் நடைமுறையை முடித்துக் கொண்டு பயிற்சியை தொடங்கியுள்ளன.

ஆனால், சிஎஸ்கே அணி மட்டும் செப்டம்பர் 1ஆம் தேதிவரை தனிமைப்படுத்தல் நடவடிக்கையை நீட்டித்துக் கொண்டது. இது தொடர்பான சந்தேகங்கள் பரவலாக எழுப்பப்பட்டன.

இந்நிலையில், கொரோனா பரிசோதனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர், வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த சூழலில் CSK பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களால் வீடு திரும்பியுள்ளார். மேலும், முழு IPL 2020 சீசனில் அவர் விளையாடமாட்டார் என்று அணி தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் உறுதிப்படுத்தினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: