IPL 2020 அட்டவணை: முதல் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதல்

பட மூலாதாரம், Getty Images
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இந்தாண்டுக்காக தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளதை போட்டி அமைப்பாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
2008ஆம் முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடரின் 13ஆவது பதிப்பு இந்த ஆண்டு நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்த தொடரின் முதல் போட்டியில் எந்தெந்த அணிகள் மோதவுள்ளன என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு போட்டி அமைப்பாளர்கள் பதிலளித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, எட்டு அணிகள் அணிகள் பங்குபெறும் இந்தாண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில், மார்ச் 29ஆம் தேதியன்று மும்பையிலுள்ள வாகன்டே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின. அதில் மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே போன்று, இந்த தொடரின் கடைசி லீக் போட்டி வரும் மே 17ஆம் தேதி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையே சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி சனிக்கிழமைகளில் ஒரே போட்டிதான்

பட மூலாதாரம், Getty Images
இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில், சனிக்கிழமை தோறும் ஒரேயொரு போட்டி மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வழக்கமாக ஐந்து வாரங்களுக்கு நீடிக்கும் லீக் சுற்றுப் போட்டிகள் இந்த ஆண்டு ஆறு வாரங்களுக்கு நடக்கும்.
அதாவது, சனிக்கிழமைகளில் ஒரு போட்டியும், ஞாற்றுக்கிழமைகளில் வழக்கம்போல இரு போட்டிகளும் நடக்கும்.
மேலும், முந்தைய பதிப்புகளை போன்றே இந்த ஆண்டும் போட்டிகள் மாலை 4 மணி மற்றும் இரவு 8 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, அனைத்து அணிகளும் தங்களது அதிகாரபூர்வ மைதானங்களை மாற்றிக்கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: சீனாவில் சிக்கியுள்ள ஆந்திரப் பெண்ணின் நிலை என்ன?
- கொரோனா வைரஸ்: சொகுசு கப்பலில் சிக்கியவர்களின் நிலை என்ன? - கடந்த 24 மணி நேரத்தில் நடந்தவை
- “ஷாஹீன்பாக் போராட்டக்காரர்களை அமித் ஷா சந்திக்கும் திட்டம் இல்லை” - உள்துறை அமைச்சகம்
- நீங்கள் ஏர்டெல், வோடஃபோன் வாடிக்கையாளரா? அப்படியானால் இந்த விஷயத்தை தெரிந்துகொள்ளுங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













