Coronavirus News: 17 இந்தியர்களுக்கு பாதிப்பா? சொகுசு கப்பலில் சிக்கியவர்களின் நிலை என்ன? - கடந்த 24 மணி நேரத்தில் நடந்தவை

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை 1600 பேர் சீனாவில் பலியாகி உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை சீன அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, கொரோனா வைரஸ் மிக கடுமையாக தாக்கி உள்ள ஹூபே மாகாணத்தில் மட்டும் நேற்று மேலும் 139 பேர் பலியாகி உள்ளதாக சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இப்படியான சூழலில், "சீனாவில் நிலைமை கட்டுப்பாட்டில் இருக்கிறது" என்கிறார் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ.
ஜெர்மனி சென்றுள்ள அவர், "ஹூபே மாகாணத்தில் கொரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களும் குணமடைந்து வருகிறார்கள்," என்கிறார்.
மேலும் அவர், இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை எட்டு ஆயிரத்தை தாண்டி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
சரி, சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொடர்பாக இதுவரை நடந்த சில விஷயங்களை பார்ப்போம்.
- பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்ற சீன நாட்டவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். கோவிட்-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆசிய நாடுகளுக்கு வெளியே நிகழும் முதல் மரணம் இதுவாகும்.
- சீனாவில் இருந்தும், கொரோனா பாதிப்புள்ள மற்ற நாடுகளில் இருந்தும் டெல்லி திரும்பிய 17 பேருக்கு 'கோவிட்-19' (கொரோனா வைரஸ்) பாதிப்பு அறிகுறி இருப்பதாக டெல்லி சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
- சீனாவுக்கு வெளியே 26 நாடுகளில் 500 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
- கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்தை எட்டி உள்ளது.
- கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள டயமண்ட் பிரின்சஸ் கப்பல் ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள 400 அமெரிக்கர்களை மீட்க அமெரிக்கா சிறப்பு விமானம் அனுப்ப உள்ளது.
- இந்த கப்பலில் உள்ள 3,700 பேரில் 285 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
- அந்த கப்பலில் மூன்று இந்தியர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை தேறி வருவதாக கூறும் இந்திய தூதரகம், அவர்கள் அனைவரையும் மீட்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கிறது.
- வுஹான் நகரத்தில் சிக்கி உள்ள ஆந்திர பெண் ஜோதியை இந்தியா கொண்டு வருவது தொடர்பாக இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்:

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













