இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் - 'அரசை எதிர்ப்பது தேச துரோகம் அல்ல'

நீதிபதி டி.ஒய். சந்திரசூட்
படக்குறிப்பு, நீதிபதி டி.ஒய். சந்திரசூட்

அரசை எதிர்ப்பதை 'தேச துரோகம்' என்றும் 'ஜனநாயக எதிர்ப்பு' என்றும் முத்திரை குத்துவது 'அரசமைப்பு சட்டத்தின் விழுமியங்கள் மற்றும் சுதந்திரம் மிக்க ஜனநாயகம் ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்கங்களின் இதயத்தின் மீதான தாக்குதல்' என்று உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

News image

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார் என்று பி.டி.ஐ செய்தி தெரிவிக்கிறது.

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் தொடந்து போராட்டம் நடந்து வரும் சூழலில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனநாயக ரீதியில் தேர்வான அரசுகள் வளர்ச்சி மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கான சட்டபூர்வ வழிமுறைகளை அளித்தாலும், பன்முகத்தன்மை வாய்ந்த சமூகத்தை விவரிக்கும் விழுமியங்கள் மற்றும் அடையாளங்கள் மீது தங்களுக்கு மட்டுமே ஒற்றை ஆதிக்கம் உள்ளது என்று அந்த அரசு கூற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசு நிர்வாகத்தை பயன்படுத்தி எதிர்ப்புணர்வை மட்டுப்படுத்த நினைப்பது பயத்தை விதைப்பதுடன், கருத்து சுதந்திரம் பற்றிய அச்சமூட்டும் சூழலை உண்டாக்கும் என்று சந்திரசூட் கூறியுள்ளார்.

'அரசை எதிர்ப்பது தேச துரோகம் அல்ல' - உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட்

பட மூலாதாரம், Getty Images

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டங்களின்போது பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதாகவும், அதற்கு போராட்டத்தில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சொத்துகளை முடக்கி இழப்பை சரிசெய்யவும், அவர்களுக்கு உத்தரப்பிரதேச மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியது.

அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், உத்தரப்பிரதேச அரசிடம் விளக்கம் கேட்ட உச்ச நீதிமன்ற அமர்வில் சந்திரசூட்டும் ஒருவர்.

எந்த ஒரு தனி நபரோ, தனிப்பட்ட அமைப்போ இந்தியாவின் பன்முகத்தன்மை மீது சொந்தம் கொண்டாட முடியாது என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்திய அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் 'இந்து இந்தியா' , 'இஸ்லாமிய இந்தியா' ஆகிய இரண்டையும் மறுத்தார்கள். 'குடியரசு இந்தியா' என்பதையே அவர்கள் அங்கீகரித்தார்கள் என்று சந்திரசூட் பேசினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :