coronavirus news: கொரோனா தொற்று இருப்பதாக நினைத்து தற்கொலை செய்து கொண்ட சித்தூர் நபர் #GroundReport

கொரோனா தொற்று இருப்பதாக நினைத்து தற்கொலை செய்து கொண்ட சித்தூர் நபர்

பட மூலாதாரம், BALA MURALI

ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூரை சேர்ந்த 50 வயதான பாலகிருஷ்ணய்யா என்பவர் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்குமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

பிபிசி தெலுங்கு சேவை செய்தியாளர் ஹ்ருதய விஹாரி, உயிரிழந்த நபரின் குடும்பத்தை சந்தித்து பேசினார்.

News image

"எனது கணவர் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக நினைத்து பதற்றத்திலேயே இருந்தார். எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அவரிடம் இருந்து தள்ளியே இருக்க சொன்னார். நாங்கள் அவர் அருகில் செல்ல முயன்றால், வர வேண்டாம் என்று எச்சரிப்பார். பிப்ரவரி 10ஆம் தேதி காலையிலேயே வீட்டை விட்டு சென்றார். வயல்வெளியில் இருக்கும் அவரது தாயாரின் கல்லறைக்கு அருகே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்," என்கிறார் பாலகிருஷ்ணய்யாவின் மனைவி லக்ஷ்மி தேவி.

அவர் வயிறு மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு கொண்டிருந்ததாகவும் கொரோனா குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் வெளியான செய்திகள் அவரை குழப்பமடையச் செய்ததாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.

பாலகிருஷ்ணய்யாவின் மகன் பால முரளி கூறுகையில், "உடல்நிலை சரியில்லமால் திருப்பதியில் உள்ள ருயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எங்கள் உறவினரை காண கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி எனது தந்தை சென்றார். என் தந்தைக்கும் அப்போது உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. அதனால் அவரும் அங்கு சில மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டார். பிப்ரவரி 8ஆம் தேதிதான் வீட்டிற்கு வந்தார்," என்று தெரிவித்தார்.

பாலகிருஷ்ணைய்யாவின் மனைவி மற்றும் அவரது மூத்த மகன்

பட மூலாதாரம், BALA MURALI

படக்குறிப்பு, பாலகிருஷ்ணைய்யாவின் மனைவி மற்றும் அவரது மூத்த மகன்

பாலகிருஷ்ணய்யாவிற்கு சிறுநீர் தொற்று மற்றும் வாய் புண் இருந்ததால் அவருக்கு சில மருந்து, மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இவரது மரணம் தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆந்திர அரசிற்கு கொடுத்துள்ள அறிக்கையில், காற்று மாசுபாட்டால் அவரது உடல்நலம் மேலும் பாதிக்கப்படாமல் இருக்க மருத்துவர்கள் அவரை முகமூடி அணியுமாறு பரிந்துரை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வாய் புண், முகமூடி, தொற்று போன்ற வார்த்தைகளை கேட்ட பாலகிருஷ்ணய்யா, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக முடிவுக்கு வந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

"என் தந்தை கொரோனா குறித்து தொலைக்காட்சிகளில் வந்த பல காணொளிகளை பார்த்து, தனக்கும் அந்த அறிகுறிகள் இருப்பதாக நினைத்துக் கொண்டார். அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்று புரிய வைக்க நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனால், எங்கள் யாரையும் அவர் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. ஒரு கட்டத்தில் நாங்கள் அருகில் சென்றால் எங்கள் மீது கற்களை தூக்கி எறிந்தார்."

"மேலும் நாங்கள் யாரேனும் அவரது அருகில் சென்றால், தன்னைத் தானே கத்தியை எடுத்துக் குத்திக் கொள்வேன் என்று மிரட்டினார். அவர் உயிரிழந்தால், நாங்கள் காப்பாற்றப்படுவோம் என்று என் தந்தை நினைத்தார். நாங்கள் அவரை பாதுகாக்க நினைத்தோம். ஆனால், அதிகாலையில் நாங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது யாருக்கும் தெரியாமல் சென்று தற்கொலை செய்து கொண்டார்," என்கிறார் பால முரளி.

சித்தூர் நபர்

பட மூலாதாரம், DMHO CHITTOOR

பாலகிருஷ்ணய்யாவின் மரணம் தொடர்பாக மாவட்ட சுகாதார அதிகாரி மருத்துவர் பென்சலய்யா, விரிவான அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்துள்ளார்.

அவர் பிபிசியிடம் பேசுகையில், "பாலகிருஷ்ணய்யாவிற்கு புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற எந்த பழக்கமும் இல்லை. எனினும் அவரது மருத்துவ அறிக்கையில் அவருக்கு வாய் புண், லேசான இருமல் மற்றும் சிறுநீர் தொற்று இருப்பதும், அவற்றை மாத்திரைகளால் குணப்படுத்த முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரை மருத்துவர்கள் முகமூடி அணிய சொன்னதை வைத்து காரணமே இல்லாமல் அவர் பதற்றமடைந்துள்ளார். அவரை முகமூடி அணியுமாறு தெரிவித்ததற்கான காரணம் முற்றிலும் வேறு," என்று தெரிவித்தார்.

"முகமூடி அணியுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால், அதற்கான சரியான விளக்கத்தை அவர்கள் கொடுக்காததால் என் தந்தை பதற்றமடைந்திருக்கிறார்," என்று உயிரிழந்த பாலகிருஷ்ணய்யாவின் மகன் கூறுகிறார்.

பால முரளி

பட மூலாதாரம், BALA MURALI

பாலகிருஷ்ணய்யாவை பரிசோதித்த ருயா மருத்துவமனையின் உதவி இருப்பிட மருத்துவ அலுவலரிடம் பிபிசி பேசியது.

அவர் கூறுகையில், "லேசான இருமல் மற்றும் வாய் புண் இருந்த பாலகிருஷ்ணய்யாவிற்கு பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்தோம். அவருக்கு இருமல் இருந்ததால் முகமூடி அணியுமாறு கூறினோம். இருமல் மற்றும் சளி இருந்தால் அவர்களுக்கு இவ்வாறு பரிந்துரைப்பது வழக்கம்தான். ஆனால், அவர் இதை வைத்து இப்படி ஒரு முடிவெடுப்பார் என்று நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை," என்கிறார் மருத்துவர் ஹரிகிருஷ்ணா.

தங்களுக்கு தகவல் வருவதற்கு முன்பே, பாலகிருஷ்ணய்யாவில் உடல் தகனம் செய்யப்பட்டுவிட்டதால், இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியவில்லை என்கிறார் கண்ட்ரிகா பகுதியின் காவல் ஆய்வாளர் அர்ச்சனா ராவ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: