ஜோஃப்ரா ஆர்ச்சர்: இங்கிலாந்து உலகக்கோப்பையை வெல்ல காரணமான மேற்கிந்திய வீரர்

ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்தின் ஹீரோவானது எப்படி?

பட மூலாதாரம், Gareth Copley-IDI/IDI via Getty Images

    • எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

ஜுலை 14, 2019 - இனிவரும் ஆண்டுகளில் கிரிக்கெட் உலகம் எண்ணற்ற முறைகள் நினைவுகூரும் நாளாக அமைய ஏராளமான வாய்ப்புகள் உண்டு.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பு மிகுந்த உலகக்கோப்பை இறுதி போட்டி டை ஆனதால், சூப்பர் ஓவர் முறையில் ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து 15 ரன்கள் எடுக்க, 16 ரன்கள் எடுத்தால் நியூசிலாந்து உலகக்கோப்பையை வெல்லும் என்ற நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர்.

இங்கிலாந்து அணியின் சார்பாக யார் சூப்பர்ஓவரை வீசுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கிறிஸ் வோக்ஸ், பிளங்கட் போன்ற அனுபவம்வாய்ந்த பந்துவீச்சாளர்களைவிட இங்கிலாந்தின் கேப்டன் மோர்கனின் தேர்வு ஜோஃப்ரா ஆர்ச்சராக இருந்தது.

சூப்பர்ஓவரின் முதல் பந்து வைடாக அறிவிக்கப்பட, மீண்டும் வீசப்பட்ட முதல்பந்தில் இரண்டு ரன்கள் எடுக்கப்பட்டது. இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடிக்கப்பட, இங்கிலாந்து ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.

ஆனால், அதற்குப்பிறகு மிகவும் சிறப்பாக பந்துவீசி நியூசிலாந்தை கட்டுப்படுத்திய ஜோஃப்ரா ஆர்ச்சர், இறுதிபந்தில் தனது மிக சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தினார்.

ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்தின் ஹீரோவானது எப்படி?

பட மூலாதாரம், Stu Forster-IDI/IDI via Getty Images

உலகக்கோப்பையை வெல்ல 44 ஆண்டுகள் காத்திருந்த இங்கிலாந்தின் சார்பாக மிகவும் முக்கியமான மற்றும் பரபரப்பான சூழலில் சூப்பர்ஓவரை வீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் மே 2019-இல்தான் முதல்முறையாக இங்கிலாந்து அணியின் சார்பாக விளையாடினார்.

ஆம், இரண்டு மாதங்களுக்கு முன்பு சர்வதேசபோட்டியில் அறிமுகமான ஜோஃப்ரா ஆர்ச்சர்தான் தற்போது இங்கிலாந்தின் ஹீரோவாக கொண்டாடப்படுகிறார்.

பார்பேடாஸை சேர்ந்த ஜோஃப்ரா ஆர்ச்சர், மேற்கிந்தியதீவுகள் அணியின் 19 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் விளையாடியவர்.

காயம் காரணமாக அவர் சிறிதுகாலம் விளையாட முடியாமல் போனது. இந்த காலகட்டத்தில் மேற்கிந்தியதீவுகள் அணிக்காக அவர் விளையாடுவது மேலும் சிரமமானது.

ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்தின் ஹீரோவானது எப்படி?

பட மூலாதாரம், Andy Kearns/Getty Images)

இந்நிலையில், அவர் இங்கிலாந்து அணிக்காக விளையாட முயற்சித்தார். சஸக்ஸ் அணிக்காக அவர் முதல்தர போட்டிகளில் விளையாடினார்.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஷ் தொடரில் விளையாட தொடங்கியதும் உலக அளவில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மேலும் கவனம் பெற்றார்.

2018 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாட அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மும்பை அணிக்கு எதிராக தான் அறிமுகமான முதல் போட்டியிலேயே ஜோஃப்ரா ஆர்ச்சர் முத்திரை பதித்தார். 3 விக்கெட்டுகளை எடுத்த அவர் அந்த போட்டியின் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

2019 ஐபிஎல் தொடரிலும் ராஜஸ்தான் அணிக்காக அவர் விளையாடினார்.

இதனிடையே 2019 உலகக்கோப்பை அணிக்கு இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் முதலில் ஆர்ச்சர் இடம்பெறவில்லை.

ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்தின் ஹீரோவானது எப்படி?

பட மூலாதாரம், Nick Atkins/Action Plus via Getty Images)

பிறகு மே மாதத்தில் இங்கிலாந்து அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டபோது அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்த்து கொள்ளப்பட்டார்.

அதுவரை 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஜோஃப்ரா ஆர்ச்சர், உலகக்கோப்பை அணியில் சேர்த்து கொள்ளப்பட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஆரம்ப போட்டிகளிலேயே ஜோஃப்ரா ஆர்ச்சர் சிறப்பாக பங்களித்தார். இறுதிப்போட்டிவரை 10 போட்டிகளில் விளையாடிய அவர் 19 விக்கெட்டுகளை எடுத்தார்.

தனது அணியின் சார்பாக அதிக அளவில் விக்கெட்டுகள் எடுத்தது மட்டுமல்ல நடப்பு உலகக்கோப்பை தொடரில் மிகவும் சிக்கனமாக பந்துவீசியும் ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்தின் வெற்றிக்கு பல போட்டிகளில் காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகளில் பிறந்து இங்கிலாந்து அணிக்காக விளையாடிய முதல் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் அல்ல.

ஆனால், அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமான இரண்டே மாதங்களில் உலகக்கோப்பை இறுதி போட்டி போன்ற அழுத்தம் நிறைந்த போட்டியில் முக்கிய தருணத்தில் பந்துவீச அழைக்கப்பட்டதும், இங்கிலாந்தின் நெடுநாள் கனவை அவர் நிறைவேற்றியதும் சாதாரண நிகழ்வு அல்ல.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :